ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே ! என்னை பற்றி தெரியுமா ?

என் மேல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களே !
என்னை பற்றி தெரியுமா ?

(1) எனது பெயர் – பூமி (மனிதர்கள் வைத்தது)

(2) எனது பிறப்பு - 454 கோடி ஆண்டுகளுக்கு முன்பு

(3) எனது உடன் பிறப்புகள் – 8 பேர் (இது
வரையில் மனிதர்கள் கண்டுபிடித்து எனக்கு சொன்னது> (புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, நெப்டியூன், ப்ளூட்டோ)

(4)  நான் சூரிய மண்டலத்தில் - மூன்றாவது கோள்

(5)  எனது துணைக்கோள் - சந்திரன்

(6)  எனது அண்டை வீட்டார் - வெள்ளியும்,
செவ்வாயும்

(7) எனக்கு மிகவும் தொலைவிலுள்ள சொந்தம் – ப்ளூட்டோ.

(8) என் பாதுகாவலன் – வியாழன் (என்னை நோக்கி வரும் சிறு கற்கள் முதல் பெரும் எறி நட்சத்திரங்கள் வரை தன்னுடைய ஈர்ப்பு விசையால் தன் மேல் விழச் செய்யும்)

(9) என்னுடைய நண்பர்கள் – என்னில் வாழ்ந்து என்னையும் வாழவைக்கும் மரங்கள்.

(10) என்னுடைய எதிரிகள் – என் நண்பர்களான மரங்களை அழிக்கும் மனிதர்கள்

(11) நான் சுழலும் முறை - இடமிருந்து வலமாக  (மேற்கிலிருந்து கிழக்காக)

(12) என்னை நானே சுற்றும் கால அளவு -23 மூன்று மணி நேரம் 56 நிமிடங்கள் 4.100 நொடிகள்

(13)  நான் சூரியனைச் சுற்றும் கால அளவு - 365.256366 நாட்கள்

(14)  சூரியனிலிருந்து நான் இருக்கும் தூரம் - 14 கோடியே 96 லட்சம் கிலோ மீட்டர்

(15) நான் சூரியனைச் சுற்றும் சுற்றுப்பாதை வேகம் - நொடிக்கு வேகம் 29.783 கிலொ மீட்டர்

(16) எனது விட்டம் - நிலநடுக் கோட்டின்
வழியாக பூமியின் விட்டம் 12,756 கிலோ
மீட்டர் , ஆனால் வட தென் துருவம் வழியாக பூமியின் விட்டம் 12,713 கிலோ மீட்டர் ஆகும்.

(17) என்னுடைய எடை - 5,980,000,000,0
00,000,000,000,000 கிலோ கிராம் ஆகும்.

(18) என்னுடைய மொத்தப் பரப்பளவு -
510,072,000 கிலோ மீட்டர் அதில்
நீர்ப்பரப்பளவு : 361,132,000 கிலோ மீட்டர்
(70.8 %), நிலப்பரப்பளவு : 148,940,000 கிலோ மீட்டர் (29.2 %)

(19) என்னுடைய மேற்பரப்பு வெப்பம் -
அதிகபட்சம் : 331 கெல்வின் 57.7 °செல்சியஸ், குறைந்தபட்சம் : 184 கெல்வின் −89 °செல்கியஸ்.

(20) என்னுடைய மையப் பகுதியின் வெப்பம் - 7000 கெல்வின்

(21) என்னுடைய வெளிப்புற அழுத்தம் - ஒரு சதுர அடிக்கு 14.7 பவுன்ட்ஸ்

(22) என்னுடைய மையப்புற அழுத்தம் - 360 ஜிகாபேஸ்கல்ஸ்

(23)  என்னுடைய சுற்றளவு - 40,075.02 கிலோ மீட்டர்.

(24) நான் சுழலும் விதம் - 23.5 டிகிரி சாய்வாக

(25) என்னைப் பிரிப்பது - அட்ச ரேகைகள், தீர்க்க ரேகைகள்

(26) எனக்கு மேல் வாயு (வளிமண்டலம்)
பரந்திருக்கும் தூரம் - 1000 கி.மீ

(27) எனக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரம் - 240,000 கி.மீ

(28)  எனக்கும் சூரியனுக்கும் இடையில்
சந்திரன் வரும்போது - அமாவாசை

(29) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வருவது - பெளர்ணமி

(30) சூரிய ஒளி என்னை வந்தடைய எடுத்துக் கொள்ளும் நேரம் - 480 விநாடிகள் (சுமார் 8 நிமிடங்கள்)

(31) சூரியனுக்கும் எனக்கும் இடையில் வரும் சந்திரன் சூரியனை மறைப்பதால் ஏற்படும் நிழல் என் மீது விழும் போது ஏற்படுவது - “சூரிய கிரகணம்" அதாவது அமாவாசையில் வரும்.

(32) சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் நான் வரும்போது என்னுடைய நிழல் சந்திரனை மறைக்கும் போது ஏற்படுவது - “சந்திரகிரகணம்" அதாவது பெளர்ணமியில் வரும்.

(33) என் மேல் இருக்கும் நிலப்பரப்பின்
கண்டங்கள் – மொத்தம் 7 > ஆசியா கண்டம், ஆப்பிரிக்க கண்டம், ஐரோப்பாக் கண்டம், தென் அமெரிக்க கண்டம், வட அமெரிக்க கண்டம், ஆஸ்திரேலியாக் கண்டம், அண்டார்டிகா
கண்டம். இவற்றில்தான் அனைத்து நாடுகளும் உள்ளடங்கி உள்ளது.

(34) என் மேல் இருக்கும் பெருங்கடல்கள் – மொத்தம் 5 > பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல், அட்லான்டிக் பெருங்கடல், ஆர்டிக் பெருங்கடல், அண்டார்டிக் பெருங்கடல். இவற்றில்தான் மற்ற அனைத்து சிறு
கடல்களும் உள்ளது.

(35)  என்னுடைய தற்போதைய பிரச்சனை – சுற்றுச் சூழல் சீர்கேட்டால் நான் வெப்பமடைந்து கொண்டிருக்கிறேன். அதனால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது.

(36) என்னுடைய வேண்டுகோள் – மனிதர்களே, மரங்களை வெட்டாதீர்கள் அப்படி அடிப்படைத் தேவைக்காக வெட்டினால், அதைவிட அதிக மரங்களை நட்டு பராமரியுங்கள். கரியமில வாயுவை வெளியேற்றும் எரி பொருளையும், உபகரணங்களையும் முடிந்த அளவு குறையுங்கள். அதற்கு மாற்று எரிபொருளை உருவாக்குங்கள். நினைவிருக்கட்டும் நான் இருந்தால் தான் நீங்கள் வாழ முடியும்.

சனி, 25 ஏப்ரல், 2020

முதல் முதலமைச்சர்.. முதல் பெண் கவர்னர்.. முதல் மாநகராட்சி.. சுவாரஸ்ய பகுதி..!! முதன் முதலில்..!!


முதல் முதலமைச்சர்.. முதல் பெண் கவர்னர்.. முதல் மாநகராட்சி.. சுவாரஸ்ய பகுதி..!!
முதன் முதலில்..!!

👉இந்தியா முதன் முதலில் 1974ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனையை நடத்தியது.

👉இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதன் முதலில் 1951ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது.

👉தமிழகத்தின் முதல் முதலமைச்சர் சுப்பராயலு செட்டியார்.

👉தமிழகத்தின் முதல் பெண் கவர்னர் பாத்திமா பீவி.

👉தமிழகத்தின் முதல் மாநகராட்சி சென்னை.

👉நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் சர்.சி.வி.ராமன்.

👉செஸ் உலக சாம்பியன் விருது பெற்ற முதல் தமிழர் விஸ்வநாதன் ஆனந்த்.

👉ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன்.

👉சென்னையின் முதல் பெண் நீதிபதி பத்மினி ஜேசுதுரை.

👉தமிழ்நாட்டின் முதல் பெண் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி.

👉தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை செயலாளர் லட்சுமி பிரானேஷ்.

👉தமிழ்நாட்டின் முதல் பெண் பஸ் ஓட்டுனர் (அரசு பஸ்) வசந்தகுமாரி.

👉சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் தாரா செரியன்.

👉உலகிலேயே முதல் ரயில் சுரங்கப்பாதை ஜப்பானில் கட்டப்பட்டது.

👉இந்தியாவில் முதன் முதலில் தார் சாலை கல்கத்தாவில் போடப்பட்டது.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

லைரிட்ஸ் விண்கல் பொழிவு Lyrid Meteor Shower


லைரிட்ஸ் விண்கல் பொழிவு 
Lyrid Meteor Shower

இன்று (22-04-2020) பின்னிரவில் வானில் ஒரு அற்புத நிகழ்வை உங்களுக்கு வாய்பிருந்தால் காணலாம். சந்திரன் இல்லா இருண்ட, தெளிவான வானம் தற்போது. நீங்கள் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களானால்  இரவு பன்னிரண்டு மணிக்குப்பிறகு வானில் லைரிட் விண்கற்கள் பொழிவைக் காணலாம். 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரம் நிகழும் லைரிட் விண்கல் பொழிவு நிகழ்கிறது. பத்து நாட்கள் நடக்கும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஏப்ரல் 21 முதல்ஏப்ரல் 23 அதிகாலை வரை உச்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 என்ற எண்ணிக்கையில் இருக்கும். இது 2,700 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுவே பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான விண்கல் பொழிவு ஆகும்.

லைரிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

விண்கற்கள் வானிலிருந்து வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து விழும் என நமக்குத் தெரியும். வழக்கமாக ஒன்றோ இரண்டோ எப்போதாவது விழுவதைப் பார்த்திருப்போம். குறைந்த காலஅளவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகமான எண்ணிக்கையில் கற்கள் விழுவதை பொழிவு என்கிறோம். தற்போது இப்பொழிவு "லைரா" விண்மீன் தொகுதியிலிருந்து விழுவதால் லைரிட் பொழிவு எனப்படுகிறது. இதுபோல ஓரையானில் நிகழும் பொழிவு ஓரைனைட், பெர்சியஸில் நிகழும் பொழிவு பெர்சியட் எனப்படுகின்றன. 

லைராவை எங்கே பார்ப்பது?

ஒளிமிகுந்த விண்மீனான சுவாதியை (Arcturus) மாலை கிழக்குவானில் அடையாளம் காண்பதில் உங்களுக்கு இடர்பாடு இருக்காது. நேரம் செல்லச் செல்ல இம்மீன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் பார்ப்பீர்கள். நடு இரவில் இம்மீன் நம் தலைக்கு மேலே வரும்போது கிழக்கு வானில் 'வேகா' என்ற மிகவும் பொழிவுமிக்க விண்மீன் கிழக்கே உயர்ந்திருக்கும். இந்த வேகா இடம்பெற்றுள்ள சிறிய விண்மீன் தொகுதியே லைரா என்கிற "யாழ்" தொகுதி.  நாற்கரமும் முக்கோணமும் சேர்ந்த வடிவிலுள்ளது இந்த யாாழ். வேகா இந்திய மரபில் "அபிஜித்" எனப்படுகிறது. வேகாவுக்கு சற்று மேலாகப் பார்க்கவேண்டும்.

C/1861 1G (Thatcher) என்னும் வால்மீன் பூமிக்கருகே சென்றபோது விட்டுச்சென்ற தூசி, கற்கள் போன்றவை உள்ள பகுதியின் வழியே பூமி செல்லும்போது இவை நமது வளிமண்டலத்தினுள் நுழைகின்றன. இதுவே விண்கற்கள் பொழிவாகத் தெரிகிறது.

வியாழன், 23 ஏப்ரல், 2020

உலக புத்தக தினம் ஏப்ரல் 23.


உலக புத்தக தினம் ஏப்ரல் 23.

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள் ( World Book and Copyright Day ) அல்லது உலக புத்தக நாள் , என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் ( யுனெஸ்கோ ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.
ஐக்கிய இராச்சியத்தில் உலக புத்தக நாள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதலாவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ தீர்மானம்
பாரிஸ் நகரில் 1995 ஆகஸ்ட் 25 முதல் நவம்பர் 16 வரை நடந்த யுனெஸ்கோவின் 28வது மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படது. அத்தீர்மானம் வருமாறு,
"அறிவைப் பரப்புவதற்கும், உலகெங்கிலும் உள்ள பல்வேறு கலாசாரங்கள் பற்றிய விழிப்புணர்வினைப் பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தினை மேம்படுத்தவும், புத்தகம் ஒரு சிறந்த கருவியாக உள்ளதால் ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக கொண்டாடப்படும்"
பங்குபற்றும் பிற அமைப்புக்கள்
யுனெஸ்கோவுடன் இணந்து இந்நாளை வெற்றிகரமாகக் கொண்டாடுவதில் பல தனிப்பட்டவர்களும், அமைப்புக்களும் பங்களிப்புச் செய்கின்றன. பின்வரும் அமைப்புக்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை.
நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களின் அனைத்துலகக் கூட்டமைப்பு
அனைத்துலகப் பதிப்பாளர் சங்கம் ( International Publishers Association)
உலகெங்கிலும் இயங்கும் யுனெஸ்கோவுக்கான தேசிய ஆணையகங்கள்
ஏப்ரல் 23 இன் முக்கியத்துவம்
உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாகவே இந்நாள் தெரிவு செய்யப்பட்டதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 1616 ஆம் ஆண்டு இந்நாளிலேயே மிகுவேல் டி செர்வண்டேஸ், வில்லியம் ஷேக்ஸ்பியர் ,
இன்கா டி லா வேகா ( Inca Garcilaso de la Vega) ஆகியோர் காலமானார்கள். இதே நாள் மொரிஸ் ட்ருவோன், ஹோல்டோர் லக்ஸ்னெஸ், விளாமிடிர் நபோகோவ் , ஜோசெப் பிளா, மனுவேல் மெஜியா வலேஜோ ஆகிய எழுத்தாளர்களினதும் பிறந்த நாளாகவோ அல்லது இறந்த நாளாகவோ அமைகிறது.
இந்நாளைக் கொண்டாடும் எண்ணம் முதன் முதலாக ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில் உருவானது. இவர்கள் ஏப்ரல் 23 ஆம் நாளை சென். ஜோர்ஜின் நாளாகக் கொண்டாடினர். இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகத்தையும், ரோஜா மலரையும் தம்மிடையே பரிசாகப் பரிமாறிக் கொள்வார்கள். உலகப் புத்தக தினம் என்று ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்து சர்வதேச பதிப்பாளர் சங்கத்தால் முன்வைக்கப்பட்டு
ஸ்பெயின் நாட்டு அரசால் யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. ரஷ்யப் படைப்பாளிகள் புத்தக உரிமைக்கும் ( காப்புரிமை ) முக்கியத்துவம் அளிக்கப்படவேண்டும் என்று கருதியதால் ஏப்ரல் 23 உலகப் புத்தகம் மற்றும் புத்தக உரிமை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.


உலகப் புத்தக தினம் உருவானது இப்படித்தான்! #WorldBookDay

புத்தகங்கள், முத்தலைமுறைகளின் வீரியமான விழுமிங்களையும் வீழ்ந்த காலங்களையும் எழுத்து வடிவில் கடத்தும் ஆவணங்கள். படித்துப் பாதுகாக்கப்படவேண்டிய காலப்பெட்டகமாக விளங்கும் இவை, காகிதத்தில் அச்சடிக்கப்பட்ட தொகுப்பு அல்ல; வரலாற்று நிகழ்வுகளையும் இன்றைய செய்திகளையும் எழுத்தின் வழியே எதிர்கால தலைமுறைக்குக் கொண்டுசெல்ல பதிவுசெய்யப்பட்ட பொக்கிஷங்கள்.
‘துப்பாக்கியிலிருந்து வெளியேறும் தோட்டாவைவிட வீரியமான ஆயுதம் புத்தகம்’ என்பார் மார்ட்டின் லூதர்கிங். ஒவ்வொரு புத்தகமும் ஒரு படைப்பாளியின் எண்ணங்களையும் உணர்வுகளையும் கற்பனைகளையும் கனவுகளையும் அச்சு வடிவில் தொகுக்கப்படும் எழுத்துக் களஞ்சியம். விதைக்குள் ஒளிந்திருக்கும் விருட்சம்போல் சமூகம் மற்றும் தனிமனித ஒழுக்கத்துக்கான கருத்துகளைப் புத்தகங்கள் தன்னுள் புதைத்துவைத்துள்ளன.

அறிவுசார் சொத்துகளான இவற்றைப் பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது. உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது. இந்நாளில் ஆண்களும் பெண்களும் புத்தகங்களைையும் ரோஜா மலர்களையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர்.
உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது. புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை உலகப் புத்தகம் தினம் மட்டுமல்லாது புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து உலகப் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.
‘புனிதமுற்று மக்கள் புதுவாழ்வு வேண்டின்; புத்தகசாலை வேண்டும் நாட்டில் யாண்டும்’ என்பார் பாரதிதாசன். நாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு புத்தகசாலை அமைப்பது அவசியம். தேடுதல் இன்றி வாழ்க்கையில் எந்த உச்சமும் கிடைத்துவிடுவதில்லை. அப்படிப்பட்ட தேடுதலின் ஆரம்பப்புள்ளியே புத்தகம்தான். புத்தக வாசிப்பு என்பது ஓடும் நதியைப்போன்றது. ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும். அப்படிப்பட்ட புத்தக நதியில் மூழ்கி புத்தம் புதிய சுகானுபவங்களைப் பெற நீங்களும் தயார்தானே!
 புத்தகங்கள்தான் சான்றோர்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கும் என்பதால், வாசிப்பை சுவாசமாகக் கருதி நேசிப்போம்... மடைமைச் சுமைகளைச் சுட்டெரிப்போம்!


உலக புத்தக தினம்; தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

புத்தகங்களை விட சிறந்த நண்பன் வேறில்லை என்பதை புத்தக பிரியர்கள் மனமார ஒப்புக்கொள்வார்கள். அதே போல,
“சொர்கம் என்பது ஒரு வகையான நூலகம் போல இருக்கும் என்றே எப்போதும் கற்பனை செய்திருக்கிறேன்” என்று லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜார்ஜ் போர்ஹேவின் கருத்தையும் குதூகலத்துடன் ஏற்றுக்கொள்வார்கள்.
ஒரு புத்தகம் என்பது கடந்த காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான இணைப்பு, தலைமுறைகள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பாலம்” என்கிறது யுனெஸ்கோ அமைப்பின் உலக புத்தக தினம் தொடர்பான இணைய பக்கம். புத்தகங்கள் ஒட்டுமொத்த மனித குலத்தை ஒரு குடும்பமாக இணைக்க உதவுகின்றன என்றும், மனித குலத்தின் லட்சியங்களை பிரதிபலிக்கும் வகையில் சேர்ந்திசை போல ஒலிக்கும் குரல்களை கொண்டாடும் நோக்கத்துடன் உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் அமைந்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
1995 ம் ஆண்டு முதல் யுனெஸ்கோ அமைப்பு ஏப்ரல் 23 ம் தேதியை உலக புத்தக மற்றும் காப்புரிமை தினமாக கொண்டாடி வருகிறது. உலக புத்தக தினம் என்றும் இது அழைக்கப்படுகிறது. சர்வதேச பதிப்பாளர்கள் சங்கம், சர்வதேச புத்தக விற்பனையாளர்கள் கூட்டமை மற்றும் நூலக சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து புத்தக தினம் கொண்டாடப்படுகிறது.

* புத்தக தினமாக கொண்டாடப்படும் ஏப்ரல் 23 ம் தேதி , உலகப்புகழ் பெற்ற டான் குவிக்சாட் நாவலை எழுதிய எழுத்தாளர் செர்வாண்ட்ஸ் நினைவு தினம் என்பது குறிப்பிடத்தக்கது. உலக மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் இன்கா கார்சிலாசோ டி லா வேகா ஆகியோரும் இந்த தினத்தில் தான் மறைந்தனர். மேலும் விலாதிமீர் நொபோகோவ்ம் மவுரீஸ் டூரான், ஜோசப் பிளா உள்ளிட்ட எழுத்தாளர்களின் பிறந்த தினமாகவும் இது அமைகிறது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் கண்காட்சி, கருத்தரங்கள் உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
* 1995 ல் முதல் உலக புத்தக தினம் கொண்டாடப்பட்டது.
* உலக புத்தக தினத்தை முன்னிட்டு 2001 ம் ஆண்டு முதல் குறிப்பிட்ட ஒரு நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டு, புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்பெய்னின் மாட்ரிட் முதல் உலக புத்தக தலைநரகமாக தேர்வு செய்யப்பட்டது.
* கடந்த ஆண்டு தென் கொரியாவின் இன்சியான் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டது. இந்த ஆண்டு போலந்து நாட்டின் வரோக்லா (Wrocław) நகரம் உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் இந்நகரில் புத்தக தினம் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டு இந்த நகரில், சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு பொது போக்குவரத்தில் புத்தகம் வாசித்த படி சென்றால் டிக்கெட் வாங்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்ப்ட்டது குறிப்பிடத்தக்கது.
• இந்தியா உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தக தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் 3 நாள் புத்தக கண்காட்சி நடைபெறுகிது.
• கினியா குடியரசில் உள்ள கோனாக்ரே (Conakry) நகரம் 2017 ம் ஆண்டுக்கான உலக புத்தக தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உலகின் 17 வது உலக புத்தக தலைநகரமாக இது திகழ்கிறது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு டிவிட்டரில் #BookDay எனும் ஹாஷ்டேகுடன் புத்தக பிரியர்கள் மற்றும் எழுத்தாளர்கள் குறும்பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
• 2016 உலக புத்தக தினம் வில்லியம் ஷேக்ஸ்பியரின் 400 வது நினைவு தின ஆண்டாகவும் அமைகிறது. செர்வாண்டிசின் 400 வது நினைவு தின ஆண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.
• உலக புத்தக தினத்தை முன்னிட்டு சர்வதேச புகைப்பட போட்டியும் யுனெஸ்கோவால் நடத்தப்படுகிறது.
#WordsofTolerance எனும் ஹாஷ்டேக் மூலம் சமூக ஊடகங்களில் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் பிரச்சார இயக்கமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

திங்கள், 20 ஏப்ரல், 2020