சட்டமன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மான நாள் 18.7.1967
1956ஆம் ஆண்டு மொழிவழி மாநிலங்கள் உருவாக்கப்பட்ட பிறகு, ஹைதராபாத்தும் இதர பகுதிகளும் ‘ஆந்திரப் பிரதேசம்’ என்றும், திருவிதாங்கூரும் இதரப் பகுதிகளும் ‘கேரளம்’ என்றும் அழைக்கப்பட்டது.
ஆனால், சென்னை மாகாணமும் இதர பகுதிகளும் தமிழ்நாடாக மாறவில்லை. சரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இங்கு மொழி வழித் தேசிய உணர்வை ஊட்ட மறுத்த இந்திய தேசியமும், திராவிடத் தேசியமும் தமிழர்களை விழிப்படைய செய்யாமல் தூங்க வைத்ததே இதற்கெல்லாம் அடிப்படைக்காரணம்.
தமிழ்நாடு என்று பெயர் சூட்டக்கோரி 1956ஆம் ஆண்டு 73 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர் ஈகம் செய்த சங்கரலிங்கனாரின் ஈகத்தை தமிழக காங்கிரசுக்கட்சி ஏகடியம் செய்த நிலையில், அக்கோரிக்கைக்கு மீண்டும் புத்துயிர் கொடுத்தவர் ம.பொ.சிவஞானம்.
25.12.1960இல் சென்னை கோகலே மன்றத்தில் தமிழ்நாடு பெயர் மாற்றச் சிறப்பு மாநாட்டை முதன்முதலாக ம.பொ.சி. நடத்தினார். அந்த மாநாட்டிலே காந்தியார் நினைவு நாளில் 30.1.1961இல் மாநில அரசு அலுவலகங்கள் முன்பு தமிழரசுக் கழகம் சார்பில் சத்தியாகிரகப் போர் நடத்தப் போவதாக அறிவிப்பொன்றை வெளியிட்டார்.
அப்போது ஆதரவும் எதிர்ப்பும் தோன்றின. தமிழ் மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்கள், கல்லூரிகள் மற்றும் தமிழக ஏடுகளான தினத்தந்தி, தமிழ்நாடு, ஆனந்த விகடன் குமுதம், தினமலர் ஆகியவை தமிழ்நாடு போராட்டத்திற்கு ஆதரவளித்தன.
ஆனால், காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசு அதனை கடுமையாக எதிர்த்ததோடு பெயர் மாற்றத் தீர்மானம் போட்ட உள்ளாட்சி அமைப்புகளை கலைத்து விடுவதாக மிரட்டல் விடுத்தது. தினமணி, மெயில், இந்து போன்ற ஏடுகள் கண்டனம் செய்து தலையங்கம் தீட்டின.
1961சனவரி 30ஆம் நாள் போராட்டம் தொடங்கியது. சென்னை, காஞ்சி, குடந்தை, வேலூர், திருச்சி, மதுரை, நாகர் கோயில், பழனி, தூத்துக்குடி, காரைக்குடி, திருவள்ளூர் ஆகிய ஊர்களில் போராட்டம் நடத்திய தமிழரசுக் கழகத் தலைவர்களாகிய நாடகக்கலைஞர் ஒளவை சண்முகம், கு.சா.கிருஷ்ண மூர்த்தி, கவிஞர் கா.மு.செரீப், கு.மா.பாலசுப்பிரமணியம், இயக்குநர் ஏ.பி.நாகராசன், புலவர் கீரன், கோ.கலிவரதன் ஆகியோர் உள்பட 1700 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்றைக்கு சட்ட மன்றத்தில் நுழைய முயன்ற காமராசரின் காரை மறித்தும் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் மூன்று நாட்கள் கழித்து, அமைச்சர்களுக்கு கறுப்புக் கொடி காட்டப்படும் என்ற ம.பொ.சி. அறிவிப்பும், பிரஜா சோசலிஸ்ட் சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை கொண்டு வந்த முதல் பெயர் மாற்றத் தீர்மானமும், அவருக்கு ஆதரவாக தி.மு.க. கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் காமராசர் அரசை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது.
24.2.1961இல் நடந்த சட்டமன்ற விவாதத்திற்குப் பிறகு, சென்னை மாகாணம் இனிமேல் ஆங்கிலத்தில் “MADRAS STATE” என்றும், தமிழில் “தமிழ்நாடு” என்றும் அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தமிழிலும், ஆங்கிலத்திலும் ‘தமிழ்நாடு’ என்று ஒரே பெயரில் மாற்றம் செய்வதற்கு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றி, அதனை அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தும்படி தில்லி அரசைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக இப்படியொரு சமரசத்தை காங்கிரசு அரசு அன்றைக்கு மேற்கொண்டது.
அதன் பிறகு தமிழர்களின் விருப்பமான அரசியல் சட்டத் திருத்தக் குரலுக்கு தமிழரல்லாத ஒருவர் வலு சேர்த்தார். அவர் பெயர் பூபேஷ் குப்தா. அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலவை உறுப்பினர். 1962 ஆம் ஆண்டு தில்லி பாராளுமன்ற மேலவையில் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதாவை அவர் தான் முதன் முதலில் கொண்டு வந்தார். அவர் கொண்டு வந்த மசோதாவை அப்போது முதன்முறையாக மேலவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அண்ணாதுரை ஆதரித்துப் பேசினார். தமிழக காங்கிரசின் ஆதரவில்லாத காரணத்தால் பூபேஷ்குப்தாவின் மசோதா நேரு அரசால் தோற்கடிக்கப்பட்டது.
1964ஆம் ஆண்டு தி.மு.க.வைச் சேர்ந்த இராம.அரங்கண்ணல் மீண்டும் பெயர் மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வந்த போது “அது முடிந்த போன விசயம்” என்று காங்கிரசு அரசு கைகழுவியது.
1952 முதல் 1967 வரை தமிழகத்தில் ஆட்சி நடத்திய காங்கிரசு கட்சி ‘தமிழ்நாடு’ பெயர் மாற்றக் கொரிக்கையை நிராகரித்ததன் முலம் அது வரலாற்றில் தீராப்பழியை தேடிக்கொண்டது.
1967இல் அண்ணா ஆட்சிக்கு வந்த போது தான் தமிழர்களின் இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். தமிழ்நாடு என்பதைக் கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்று தான் அழைக்க வேண்டும் என்று இராசாசி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார்.
அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.
தமிழக சட்டமன்றத்தில் அண்ணா தீர்மானம் கொண்டு வந்த போது காங்கிரசு கட்சி அப்போது வேறுவழியின்றி ஒப்புக் கொண்டது. ம.பொ.சி. அண்ணாவின் தீர்மானம் குறித்து ‘எனது போராட்டம்’ நூலில் கூறுகிறார்:
“தீர்மானம் எதிர்ப்பின்றி பேரவைத் தலைவர் அறிவித்த போது, முதல்வர் அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று கூற, பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வாழ்க என்று உரக்க ஒலித்தனர். இப்படி, மும்முறை ஒலிக்கப்பட்டது. அப்போது என் உடம்பு சிலிர்த்தது.”
ஆம்! ஈகி சங்கரலிங்கனாரின் கனவு பலித்ததை எண்ணி சிலிர்க்காத தமிழர் எவரும் உண்டோ?
நன்றி தி இந்து தமிழ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக