வியாழன், 8 பிப்ரவரி, 2018

பட்ஜெட் வார்த்தை எப்படி வந்தது ?


 பட்ஜெட் வார்த்தை எப்படி வந்தது  ?

பட்ஜெட் என்ற வார்த்தையும், அதோடு ஒரு சூட்கேஸுக்கும் ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக ஒன்றோடு ஒன்று தொடர்பு கொண்டு இருக்கிறது.

இதில் லத்தின் வார்த்தை பல்கா என்பதில் இருந்து வந்த வார்த்தையில் இருந்து மருவி உருவானது பட்ஜெட். பல்கா என்பது, சிறிய வகையான பணம் வைக்கும் பை அல்லது வாலட் ஆகும்.

அதன்பின் பல்கா என்ற வார்த்தை பிரான்ஸ் நாட்டுக்கு பயணித்து அங்கிருந்து போகெட் என்று உருமாறி, 15ம் நூற்றாண்டில் பவுகெட் என்று மாறியது. 16-ம் நூற்றாண்டில் இந்த வார்த்தை பட்ஜெட் என்று உருப்பெற்றது.

பட்ஜெட்- பிரீஃப்கேஸ் என்ன தொடர்பு ?

கடந்த 1860ம் ஆண்டு இங்கிலாந்தின் நிதி அமைச்சர் வில்லியம் எவார் கிளாட்ஸ்டோன் என்பவர் மூலமே பட்ஜெட் தாக்கலின்போது சூட்கேஸ் அல்லது பிரீப்கேஸ் பயன்படுத்தும் வழக்கம் வந்தது. ஒரு நாட்டின் அடுத்த ஒரு ஆண்டுக்கான வரவு செலவு குறித்த ரகசிய ஆவணங்கள் இருப்பதால், இதை பாதுகாப்பாக அந்த பெட்டியில் அப்போது கொண்டுவரப்பட்டது. அப்போது இருந்து இந்த முறை இன்னும் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்தியாவில் சுதந்திரத்துக்கு பின் ஒவ்வொரு நிதி அமைச்சருக்கும் ஒவ்வொரு வண்ணத்தில் பட்ஜெட்டின் போது சூட்கேஸ் பயன்படுத்தி வருகின்றனர். இதில் யஸ்வந்த் சின்ஹா அதிகமான பக்கிள் , ஸ்டிராப் வைத்தும், மன்மோகன் சிங் தாக்கல் செய்யும் போது, ஆங்கிலேயர் எவார்ட் கிளாட்ஸ்டன் காலத்தில் இருப்பது போன்றது போல கருப்பு நிறத்தில் சூட்கேஸ் இருந்தது. அனைவரையும் கவரும் விதத்தில் சிவப்பு நிறத்தில் வெல்வெட் துணியால் ஆன சூட்கேஸை பிராணப் முகர்ஜி வைத்திருந்தார்.

முதல் பட்ஜெட்

ஆங்கிலேயர் ஆட்சியில் முதல் இந்திய பட்ஜெட்டை ஜேம்ஸ் வில்சன் தாக்கல் செய்தார். ஆங்கிலேயர் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்த இவர் பட்ஜெட் தாக்கல் செய்த சில மாதங்களில் மரணமடைந்தார்.

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்

சுதந்திர இந்தியாவின் முதல் பட்ஜெட்டை நாட்டின் முதல் நிதி அமைச்சர் ஆர்.கே. சண்முகம் செட்டி தாக்கல் செய்தார். அது இடைக்கால பட்ஜெட்டாக ஏழரை மாதங்களுக்கு அதாவது 1948, மார்ச் 31ம் தேதிவரைக்குமே தாக்கல் செய்யப்பட்டது.

வாசிக்காத பட்ஜெட்

சண்முகம் செட்டிக்கு பின் வந்த நிதி அமைச்சர் ஜான் மத்தாய் கடந்த 194-50ம் ஆண்டில் தாக்கல் செய்த பட்ஜெட்டின் போது, பட்ஜெட் உரையை வாசிக்கவில்லை. மாறாக, அனைத்து எம்.பிக்களுக்கும் பட்ஜெட் உரை வழங்கப்பட்டது. பொருளாதார கொள்கைகள் குறித்து மட்டும் ஜான் படித்தார்.

10 பட்ஜெட் தாக்கல் செய்த நிதி அமைச்சர்

இந்தியாவின் முன்னாள் பிரதமரும், நிதி அமைச்சருமான மொரார்ஜி தேசாய் அதிகபட்சமாக 10 பட்ஜெட்களை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் மொரார்ஜி தேசாய், பிறந்தநாள் 29ம் தேதியாகும். அந்த நாளில் அவர் இருமுறை அதாவது 1964, 1968ம் ஆண்டுகளில் பட்ஜெட் தாக்கல் செய்து இருக்கிறார்.

அதன்பின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் 8 முறையும், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி 7 முறையும் தாக்கல் செய்தனர். மேலும், யஸ்வந்த்ராவ் பல்வந்த்ராவ் சவான், சிடி தேஸ்முக் ஆகியோரும் 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

கருப்பு - கனவு பட்ஜெட்

1973-74ம் நிதி ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ரூ.550 கோடி பற்றாக்குறையுடன் தாக்கல் செய்யப்பட்டது. இதனால், இதை கருப்பு பட்ஜெட் என்றனர். 1997ம் ஆண்டு நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பல சீர்திருத்தங்களுடன் பட்ஜெட் தாக்கல் செய்ததால், இதை கனவு பட்ஜெட் என்றனர்.

பட்ஜெட் தாக்கல் செய்த குடியரசு தலைவர்

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர் வெங்கட்ராமன் ஆகியோர் தாங்கள் நிதி அமைச்சராக இருந்த காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர்.

நெருக்கடியில் பட்ஜெட்

பாஜகவின் ஆட்சிக் காலத்தில் நிதி அமைச்சராக இருந்த யஸ்வந்த் சின்ஹா நெருக்கடியான நேரத்தில் பட்ஜெட்களை தாக்கல் செய்து இருக்கிறார். 1999ம் ஆண்டு பொக்ரான் அணுகுண்டு சோதனை, 2000ம் ஆண்டு கார்கில் போர், 2001ம் ஆண்டு குஜராத் பூகம்பம் ஆகிய நெருக்கடியான நேரத்தில் அவர் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல் செய்த ஒரேபெண்

கடந்த 1970-71ம் ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியின் போது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பட்ஜெட் தாக்கல் செய்தார். நாட்டில் பட்ஜெட் தாக்கல் செய்த முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் எந்த பெண்ணும் பட்ஜெட் தாக்கல் செய்யவில்லை.

ரயில்வே பிரிந்தது

1924ம் ஆண்டு பொது பட்ஜெட்டில் இருந்து ரயில்வே பட்ஜெட், தனியாகப் பிரிக்கப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு அதாவது 93 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைக்கப்பட்டது.

3 பிரதமர்கள்

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த, நேரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பிரதமர்கள் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளனர். ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி பிரதமராக பதவியில் இருக்கும் போது பட்ஜெட் தாக்கல் செய்தனர்.

நேரம் மாற்றம்

கடந்த 1998-ம் ஆண்டுக்கு முன்பு வரை பட்ஜெட் என்பது ஆங்கிலேயர் கால வழக்கப்படி மாலை 5 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டு வந்தது. ஆனால், வாஜ்பாய் ஆட்சி காலத்தில், பட்ஜெட் தாக்கல் செய்யும் நேரம் மாற்றப்பட்டு, காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதிலும் மாற்றம் செய்து, பிப்ரவரி இறுதியில் தாக்கலாகும் பட்ஜெட்டை ஒரு மாதம் முன்பாக 1ம் தேதியே தாக்கல் செய்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக