இந்திய தண்டனைச் சட்டம், 377 ஆவது பிரிவு
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377ஆவது பிரிவு, இந்தியக் குடியரசில் “இயற்கைக்கு மாறான பாலுறவு” கொள்வதை தண்டனைக்குரிய குற்றமாக்குகிறது. முதன் முதலாக 1860 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் இயற்றப்பட்ட இச்சட்டம், 2009 ஆம் ஆண்டு, டெல்லி உயர் நீதி மன்றத்தால் 18 வயது மிக்க ஒப்புதலோடு உடலுறவு கொள்ளும் நபர்களுக்குப் பொருந்தாது என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 2013 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் இத்தீர்ப்பை தள்ளி வைத்ததுடன், இச்சட்டத்தை திருத்துவதும், திரும்பப்பெறுவதும் இந்திய அரசின் பொறுப்பு, நீதித்துறையின் பொறுப்பல்ல என்று அறிவித்தது.
பிப்ரவரி 2, 2016 அன்று நாஸ் அறக்கட்டளை தாக்கல் செய்த கூட்டு மறுஆய்வு மனு (curative petition) உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி டி. எஸ். தாகூர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்த மனுவை எடுத்துக் கொண்டது. அந்த அமர்வு, இந்த வழக்கை 5 பேர் கொண்ட அரசியலைப்புக் குழுவிற்கு மாற்றம் செய்து தீர்ப்பு வழங்கியது. அந்த 5 பேர் கொண்ட குழு இந்த வழக்கிலிருக்கும் அனைத்து 8 மறுசீராய்வு மனுக்களையும் புதிதாக விசாரிக்கத் தொடங்கும்.[1]
சட்டம்
இ. பி கோ. 377:
ஆண்கள், பெண்கள் அல்லது மிருகங்களுடன், யாரேனும் சுயமாக (கட்டாயப்படுத்தப்படாமல்) இயற்கைக்குப் புறம்பான பாலுறவு கொண்டால், அவருக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையோ அல்லது ஆயுள் சிறை தண்டனையோ விதிக்கலாம். அவருக்கு அபராதமும் விதிக்கலாம்.
வரலாறு
இந்திய தண்டனைச் சட்டத்தின் 377 ஆவது பிரிவு முதன் முதலில் 1860 ஆம் ஆண்டு, மெக்காலே பிரபுவினால் கொண்டுவரப்பட்டது. இந்தியா (தற்போதைய இந்தியக் குடியரசு, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை), தென் ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், ஹொங்கொங், ஆஸ்திரேலியா போன்ற பிரிட்டனின் பிற காலனிகளிலும் இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டன. விக்டோரியன் கலாச்சாரத்தின் தாக்கம் உச்சத்தில் இருந்த போது பிரிட்டனில் தன்பால் புணர்ச்சி (ஓரினச்சேர்க்கை), ஆசனவாய் புணர்ச்சி (anal sex), வாய்வழிப் புணர்ச்சி (oral sex) போன்றவை பாவச் செயல்களாகக் கருதப் பட்டன. பாலுறவு என்பது இனப்பெருக்கத்துக்காக மட்டும் எனக் கருதப்பட்டது. எனவே தான் இத்தகைய சட்டம் இயற்றப்பட்டது.
இந்தியா 1947 இல் விடுதலை அடைந்த பின்னரும், இந்த சட்டம் இந்திய குடியரசின் சட்டங்களில் இருந்து நீக்கப்படவில்லை. இதுவரை இந்தியாவில் இச்சட்டத்தின் கீழ் யாரும் தண்டிக்கப் பட வில்லை. ஆனால் ஓரினச்சேர்க்கையாளர்களும், திருநங்கைகளும், இச்சட்டத்தினால் தாங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாவதாகக் கூறுகின்றனர். காலப்போக்கில், மேலை நாடுகளில் ஓரினச் சேர்க்கையின் மீது சமுதாயத்தின் கண்ணோட்டம் மெல்ல மாற்றமடைந்தது. 1967 இல் பிரிட்டனில் இச்சட்டம் திருப்பிப் பெறப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள் பெரும்பாலான மேலை நாடுகளில் ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டங்கள் தடை செய்யப்பட்டன.
( விக்கிப்பீடியாவில் இருந்து.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக