தமிழ் இலக்கியத்தில் பயண நூல்கள்
முன்னுரை
பயணம் மனித வாழ்வில் தவிர்க்க வியலாததொரு கூறு ஆகும். மனித வாழ்க்கை தொடங்கிய நாள் முதல் பயணம் செல்லுதலும் தொடங்கி விட்டது. "ஓரிடத்தில் இருந்து கிளம்பித் தாங்கள் சென்ற இடங்களில் தங்களின் அனுபவங்களைச் சுவைபட எடுத்தியம்புதல்" பயண இலக்கியங்கள் எனப்படும். "தாம் சென்று கண்ட இடங்களையும் அங்கு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் உரிய சித்திரம் முதலியவற்றால் ஒருவர் விளக்கி விரித்துரைப்பதே பயண இலக்கியங்கள் ஆகும்” என்று ஆக்ஸ்போர்டு பேரகராதி கூறுகிறது. பயண இலக்கியங்கள் பயணிகளின் அனுபவங்களைக் கூறுகின்றன. "பிறரது வாழ்க்கை அனுபவங்களை நாம் நம் வாழ்க்கைக்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் அனுபவம் என்பது ஓர் அருமையான பள்ளிக்கூடம்" என்று எம்.எஸ். உதயமூர்த்தி கூறுகிறார். பயண இலக்கியங்கள் வெறும் தகவல்களை மட்டும் வழக்காமல் பிற இடங்களும், பிற கலைகளும், மக்களின் பழக்கவழக்கங்களும் தம்முள்ளத்தை எப்படித் தொட்டன என்பதைக் கூறுகின்றன. வெளிநாடுகளுக்குச் செல்பவர்கள் அங்குள்ள மக்களுடன் கலந்து உறவாடித் திரும்ப வேண்டும். "வெளிநாடுகளுக்குச் செல்லுகின்றவர்கள் அங்கு இருக்கும் தங்கள் நாட்டு மக்களோடு மட்டும் அறிவு கொண்டு விட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டுத் திரும்பினால் அவர்களின் உடல்கள் தாம் பயணம் செய்துவிட்டு வந்தனவாகக் கருத முடியுமே ஒழிய அவர்கள் உள்ளங்களும் சென்று திரும்பின் எனக்கருதுதல் இயலாது" என்று அலைகடலுக்கு அப்பால்' என்னும் நூலில் அணிந்துரை கூறுகிறது.
பயண இலக்கியத்தின் பயன்கள்
"தாங்கள் மேற்கொண்ட பயணத்தில் கிளம்புதல் முதல் திரும்பி வருவது வரையில் தங்களின் அனுபவங்களைப் பிறர் உணர்ந்துகொள்ளும்படி எழுதுதல் பயண இலக்கியத்தின் முதன்மையான நோக்கமாகும்”. பயணம் மேற்கொண்டவரின் அனுபவங்கள் பிறருக்குப் பாடமாக அமைந்து அவர்களின் சிறந்த எண்ணங்களைப் புரிந்துகொண்டு உணர்ந்து மகிழ்ந்து படிப்போரும். அத்தகைய பயணங்களை மேற்கொள்ளத் தூண்டுதல் பயண இலக்கியத்தின் மற்றொரு நோக்கமாகும். பிறருக்குப் பயன்படும் வகையில் தன் பயண நினைவுகளைச் சொல்லுதல், எதிர் காலத்தில் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கு வழிகாட்டியாக விளங்குதல், சமுதாயக் கல்விக்குத் துணைநிற்றல், மற்றவர்களின் வாழ்க்கை முறையை விளக்குதல், படிப்பவரின் பொது அறிவை வளர்த்தல், பிற நாடுகளின் பலவகை முன்னேற்றத்திற்குரிய அடிப்படைக் காரணிகளை விளக்குதல், பல்வகை எண்ணங்களுக்கு விளம்பரம் கொடுத்தல் போன்றவை பயன்களாகும்.
கருத்தலகுகள்
பயண இலக்கியங்களில் பயண இலக்கியக் கூறுகள், பயணக் கருத்துகள், பயண அறிவுரைகள், பயண அனுபவங்கள் போன்ற கூறுகளைக் காணமுடிகிறது. ஊர்களுக்குச் செல்லும் முறை, எவ்வாறு சென்றார்கள்? என்னவெல்லாம் கண்டு களித்தார்கள்? பயணம் செய்யும்பொழுது ஏற்பட்ட இடையூறுகள், அந்நாட்டு மக்களிடம் கண்ட புதுமைகள், அன்றாட வாழ்க்கை , பழக்கவழக்கங்கள், பழைய பயண அனுபவங்கள், நகைச் சுவையான பயண நிகழ்ச்சிகள், மக்களின் பண்பாடு, பண்பாட்டு மாற்றங்கள், போக்குவரத்துச் சாதனங்கள் பற்றிய கருத்துகள், இடங்களுக்குச் செல்லும் பாதைகள், பயணத் தொடர்பான அறிவுரைகள், பிற நாட்டு மக்களின் வளர்ச்சிக்கான அடிப்படைகள், புதிய அனுபவங்கள் பெறல், உடல் நலத்திற்கு உகந்தது போன்றவை பயண நூல்களில் இடம்பெற்றுள்ளன.
சான்றாக திரு.நெ.து. சுந்தர வடிவேலு அவர்களின் 'நான் கண்ட சோவியத்து ஒன்றியம்' என்னும் நூலில் கூறியுள்ள செய்திகளைக் காணலாம். "சோவியத் ஒன்றியம் இது பெரும் நாடு. சம தர்ம நாடு. பாட்டாளிகள் பொதுச் சொத்து : தொழிலாளர்களின் பொது உடைமை" என்று சோவியத் நாட்டின் தன்மையைக் கூறுகிறார். "எல்லோரும் வாழ்வோம், நன்றாக வாழ்வோம், ஒன்றாக வாழ்வோம் என்னும் நிலையை உருவாக்கியது சோவியத் ஒன்றியம். ஆமைகளாக இருந்த பாட்டாளிகளை ஆண்மையாளர்களாக நிமிர வைத்து, அவர்களுக்கு வேலையும், உணவும், உடையும், உறையுளும் தந்ததோடு பாட்டாளிகளையும் படிப்பாளிகளாகப் பெரும் பட்டதாரிகளாக ஆக்கி வாழும் நன்னாடு சோவியத் ஒன்றியம்" என்று மக்களின் வாழ்க்கையை விளக்குகிறார். "சோவியத் நாடு நமக்கு நட்பு நாடு. இந்தியாவின் வளத்திலும் வாழ்விலும் அக்கறையுடைய நாடு. நமக்கு இடுக்கண் நேரும்போதெல்லாம், நெருக்கடி ஏற்படும் போதெல்லாம் விரைந்து கைகொடுக்கும் நட்புறவு நாடு" என்று இந்திய நாட்டிற்கும் சோவியத் நாட்டிற்கும் உள்ள உறவை விளக்குகிறார். கல்வி நிலையங்கள், நூல் நிலையங்கள், கூட்டுப்பண்ணை , பாதாள இரயில்வே (மெட்ரோ) போன்ற இடங்களைக் கண்டதாகக் கூறுகிறார். "1961 ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்கள் பதினைந்தாம் நாள் நான் (திரு.நெ.து. சுந்தர வடிவேலு) டாஸ்கண்ட் என்னும் நகருக்குப் போய்ச் சேர்ந்தேன். டாஸ்கண்டில் அதே பெயருடைய ஓட்டலில் தங்கியிருந்தேன்” என்று தான் போய்ச் சேர்ந்த நாளையும், தங்கிய இடத்தையும் குறிப்பிட்டுள்ளார். "விமானத்திற்குச் செல்லும்முன் சுங்கச் சோதனை நடந்தது. செல்கைச் சீட்டுச் சரியாக இருக்கிறதா? என்று தணிக்கை செய்யப் பெற்றது. இச்சோதனைக் கூடங்களைக் கடந்த பின் பயணிகள் தங்குமிடத்தில் காத்திருந்தோம்” என்று விமான நிலையச் சோதனையைப் பற்றிக் கூறுகிறார். "விமானத்தில் ஏறி இருக்கையில் அமர்ந்தவுடன் பெல்டினால் கட்டினார்கள். பணிப்பெண்கள் நன்றாக உபசரித்தனர். உணவும் பானங்களும் அளித்தனர்” என்று விமானத்தில் சென்ற வகையைக் கூறுகிறார். "விமானத்தில் பயணிகள் வகுப்பு, முதல் வகுப்பு என்ற இருவகை வகுப்புகள் இருந்தன. பயணிகள் வகுப்பில் உட்காரும் நாற்காலியை ஓரளவு பின்னால் சாய்த்துக் கொண்டு பயணஞ் செய்ய வேண்டும். முதல் வகுப்பில் சாய்வு நாற்காலி போலப் பின்னால் சாய்ந்து கொள்வதோடு கால்களைக் கீழே தொங்கவிடாமல் உயர்த்தி நீட்டிக் கொள்ளவும் இடமுண்டு. முதல் வகுப்பிற்குக் கட்டணம் அதிகம்” என்று விமானத்தில் இருந்த இருவகை வகுப்புகளைப் பற்றிக் கூறியுள்ளார். பயண நூல்களில் ஒவ்வொருவரும் தாம் கண்டவற்றையும், தம் அனுபவத்தையும் குறிப்பிட்டுள்ளனர்.
அறிவுரைகள்
சில நூல்களில் பயணிகளுக்குத் தேவையான அறிவுரைகள் காணப்படுகின்றன.
வடநாட்டில் குளிர்காலத்தில் குளிர் அதிகம். எனவே மார்ச்சு அல்லது செப்டம்பர் மாதத்தில் அங்கு பயணம் செய்ய வேண்டும்.
நோயாளிகள் பயணம் மேற்கொள்ளக் கூடாது.
பயணம் செய்வோர் மிகமிகக் குறைந்த அளவுள்ள பொருள்களை எடுத்துச் செல்லவேண்டும்.
தன் உடலுக்குத் தேவையான மருந்துகளை உடன் எடுத்துச் செல்லவேண்டும். 5.நூறு ரூபாய் நோட்டுகளுடன் சில்லறையும் கொண்டு செய்வது நல்லது.
புனித இடங்களில் உள்ள பூசாரிகள் பயணிகளை ஏமாற்றுவார்.
திருடர்களிடமிருந்து பொருள்களைப் பத்திரமாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பயணத்தின் போது பழைய உணவுப் பண்டங்களையும், கெட்டுப்போன உணவுப் பண்டங்களையும் உண்ணக்கூடாது.
வடநாட்டுச் சிப்பந்திகள், வண்டிக்காரர்கள் போன்றோரிடம் நயமாகவும், மரியாதையாகவும் பேசவேண்டும்.
புதிய இடங்களில் வழிகாட்டியின் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வடநாட்டில் வறட்சியுண்டு. அதற்காகத் தென்னாட்டவர்கள் பால், தயிர், தண்ணீர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு புனித இடத்திற்கும் இறங்க வேண்டிய புகைவண்டி நிலையத்தைக் குறிப்பிட்டுள்ளனர். ஒரு கோயிலுக்கும் இன்னொரு கோயிலுக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறிப்பிட்டுள்ளனர்.
நதிகள்
உற்பத்தியாகும் இடங்களையும், சுங்கவரி வசூலிக்கும் இடங்களையும் சுட்டியுள்ளனர். 14.ஒவ்வோர் இடத்திலும் தங்கும் இடங்கள், கிடைக்கும் உணவு வகைகள், குளிக்கும் இடங்கள், கிடைக்கும் வாகன வசதிகள், பயணத்தில் ஏற்படும் இடையூறுகள், தரகர் தரும் தொல்லைகள், குரங்குகள் தரும் தொல்லைகள், சென்றுவரக் கட்டணம் போன்றவற்றைத் தெளிவாக விளக்கியுள்ளனர். 15. பயணத்தை வெவ்வேறு இடங்களில் வைத்திருக்கவேண்டும். நம்மிடத்திலுள்ள பணமிவ்வளவு என்ற உண்மையை யாரிடமும் வெளியிக்கூடாது.
இலக்கிய வகைகள்
பயண இலக்கியங்களை ஐந்து வகைகளாகப் பிரிக்கலாம். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இப்பகுப்பை மேற்கொண்டுள்ளார்.
அரசியல் தொடர்பான பயணம்
திரு. சி. சுப்பிரமணியம் அரசியல் தொடர்பாக இங்கிலாந்து, சுவீடன் போன்ற நாடுகளுக்குச் சென்று, அந்த நாடுகளில் கண்டதை இந்தியாவில் எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒப்பிட்டு விளக்கியுள்ளார். 'உலகம் சுற்றினேன்', 'நான் கண்ட நாடுகள்' என்னும் நூல்களை இயற்றியுள்ளார்.
கலை, பண்பாடு, மக்கள் இனித் தொடர்பான பயணம்
பிறநாட்டு மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, கலை, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றை அறிய மேற்கொள்ளும் பயணம் அவ்வகைக்குள் அடங்கும் தாம் பெற்ற அனுபவத்தைப் பிறரும் வேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் அவ்வகை நூல்களை எழுதியுள்ளனர். திரு.ஏ.கே. செட்டியாரின் 'பிரயாணக் கட்டுரைகள்', டாக்டர் மு. வரதராசனாரின் 'யான் கண்ட இலங்கை' போன்றவற்றைச் சான்று கூறலாம்.
தெய்வத் தொடர்பான நூல்கள்
தெய்வத் தொடர்பான நூல்களில் முதலில் தோன்றியது திருமுருகாற்றுப் படையாகும். கோயில் குளங்களுக்குச் சென்று வந்தவர்கள் தாம் பெற்ற அனுபவத்தையும் அருள் செல்வத்தையும் மற்றவருக்கும் வெளிப்படுத்தும் பெருநோக்கோடு பல நூல்களை எழுதியுள்ளனர். சுவாமி ஆ.ஜோ. அடைக்கலம் எழுதிய 'பாலஸ்தீனப் பயணம்', திரு. அப்துற்றஹீம் கலைமான் இயற்றிய 'புனித ஹஜ் பயண நினைவுகள்', திரு. அவிநாசிலிங்கம் செட்டியாரின் 'திருக்கேதார யாத்திரை' போன்ற பெருந்தலைவர் யாரையேனும் காணும் நோக்கமுடைய பயணம்
பெருந்தலைவர்களையும், சமயச் சான்றோர்களையும், பண்பாளர்களையும் கண்டு வந்தமை பற்றி எழுதியுள்ளனர். பரணீதரனின் 'புனித பயணம்' அவ்வகைக்குள் அடங்கும் நூலாகும்.
கல்வி, தொழில் நுட்பம் தொடர்பான பயணம்
கல்வி, தொழில் நுட்பம் தொடர்பாகப் பயணம் மேற்கொண்டு பெற்ற அனுபவத்தை உரைக்கும் நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும் திரு. நெ.து. சுந்தர வடிவேலுவின் 'புதிய ஜெர்மனியில்' என்னும் நூலைச் சான்றாகக் கூறலாம்.
ஆற்றுப்படை நூல்கள்
ஆற்றுப்படை என்னும் சொல்லிற்கு 'வழிகாட்டி' என்பது பொருளாகும். முல்லைப்பாட்டில் வரும் 'ஆற்றுப்படுத்த' என்னும் சொல்லிற்கு 'வழியில் செலுத்துதல்' என்பது பொருளாகும். தான் கடந்து வந்த வழிப்பயண அனுபவத்தை உரைப்பது ஆற்றுப்படையாகும்.
"கூத்தராயினும் பாணராயினும் பொருநராயினும் விறலியராயினும் நெறியிடைக் காட்சிக் கண்ணே எதிர்த்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளம் நுமக்கும் பெறலாகும் எனவும், சொன்ன பக்கமும்” என்று இளம்பூரணர் உரை எழுதியுள்ளார். “ஆடன் மாந்தரும், பாடற் பாணரும், கருவிப் பொருநரும் இவருட் பெண்பாலாகிய விறலியும் என்னும் நாற்பாலாரும் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த வறியோருக்கு அறிவுறுத்தி அவரும் ஆண்டுச் சென்று பெற்றவையெல்லாம் பெறுமாறு கூறிய கூறுபாடு” என்று நச்சினார்க்கினியர் விளக்கம் தருகிறார்.
ஓதல், தூது, பகை, பொருள் போன்ற பிரிவுகளைத் தொல்காப்பியம் இயம்புகிறது. சங்க இலக்கியங்களில் பொருள் வயிற் பயணமே மிகுதியாகக் காணப் பெறுகிறது. அன்றைய சமுதாயத்தில் பொருள் தேடுவது ஆடவனின் கடமையாகக் கருதப்பெற்றது. பொருள் தேடுவதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆண்கள் பயணம் செய்தனர். 'முந்நீர் வழக்கம் மகடூ வோடில்லை' என்று தொல்காப்பியம் பகருகிறது. வினையே உயிராகக் கருதிய ஆடவர் திரைகடல் கடந்து பொருள் தேடச் செல்லும்பொழுது மகளிரை உடன் அழைத்துச் செல்லவில்லை. அதற்கு வழித்துன்பத்தைக் காரணமாகக் கூறலாம். அன்றைய நிலையில் கப்பலில் செல்லும்பொழுது பெண்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து தருவது கடினமாக இருந்தது. கப்பல் கவிழும்பொழுது அவர்களைக் காப்பாற்றுவது சிரமமாக இருந்தது. பிற ஆடவரின் எதிரில் இருப்பதற்குப் பெண்கள் விரும்பவில்லை . வெளிநாடுகளில் பெண்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பது சிரமமாக இருந்தது. நீண்ட தூரப் பயணத்தை ஏற்கும் நிலையில் பெண்களின் உடலமைப்பு அமையவில்லை எனலாம். உள்நாட்டுத் தரைப்பயணத்தில் இல்லறப் பெண்கள் இன்றியமையாத சில வேளைகளில் கணவனுடன் பயணம் மேற்கொண்டுள்ளனர். கோவலனும் கண்ணகியும் பூம்புகாரிலிருந்து மதுரைக்கு வந்துள்ளனர். கவுந்தியடிகள் போன்றோர் தம் சமயத்தைப் பரப்ப வெளியிடங்களுக்குச் சென்றுள்ளனர். ஓரிடத்தில் நிலையாகத் தங்காமல் ஊர் சுற்றிவந்த பாணனுடன் பாடினியும் உடன் சென்றுள்ளான். இன்று பெண்கள் ஆடவருடன் சேர்ந்து உலகம் முழுவதும் சுற்றி வருகின்றனர். ஏன், சந்திர மண்டலத்திற்கும், வட துருவத்திற்கும் கூடச் சென்று வந்துள்ளனர்.
புறப்பொருள் வெண்பாமாலை
ஐயனாரிதனார் இயற்றிய புறப்பொருள் வெண்பாமாலை பாணாற்றுப்படை, கூத்தராற்றுப்படை, பொருநராற்றுப்படை, விறலியாற்றுப்படை, புலவராற்றுப்படை என்னும் ஐந்தனுக்கும் விளக்கம் கொடுத்துள்ளது.
சேணோங்கிய வரையதரிற்பாண்மை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. பரிசில் பெற்று வருகின்ற பாணன் மலையிடத்தே தன் எதிர்வரும் பாணனைப் பரிசில் பெறும் வழியிலே செலுத்தியது பாணாற்றுப்படை எனப்படும்.
‘ஏத்திச்சென்று இரவலன் கூத்தரை ஆற்றுப்படுத்தன்று” என்பது கொளு. ஒரு வல்ளல்பால் பரிசில் பெற்றுச் செல்வானொரு கூத்தன், தன்னெதிர் வந்த கூத்தரை அவ்வள்ளல்பால் செல்ல வழிப்படுத்துவது கூத்தராற்றுப்படை எனப்படும்.
"பெருநல்லான் உழையீரா கெனப் பொருளை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. ஒரு பொருநன் மற்றொரு பொருநனை இன்ன வள்ளல்பால் செல்க என ஆற்றுப்படுத்துவது பொருநராற்றுப்படை என்னும் துறையாகும்.
"திறல் வேந்தன் புகழ்பாடு விறலியை ஆற்றுப்படுத்தன்று" விறலியாற்றுப்படையாகும்.
”இருங்கண் வானத் திமையோருழைப் பெரும்புலவனை ஆற்றுப்படுத்தன்று" என்பது கொளு. இறையருள் பெற்ற இறைவன்பால் செல்ல வழிப்படுத்து புலவர் ஆற்றுப்படை என்னும் துறையாகும். அக்கொளுக்களில் இருந்து
கலைஞர்கள் சென்ற வழியின் தன்மை,
ஆற்றுப்படுத்தும் தன்மை,
மன்னனின் புகழ்,
மன்னனின் கொடைச் சிறப்பு,
கொடைப் பொருள் போன்ற செய்திகளை அறிய முடிகிறது.
"வறுமையில் வாடும் புலவர், பாணர், பொருநர், விறலியர், கூத்தர் போன்றோர் வெயில் காலத்தில் கானகத்திடை செல்கின்றனர். அப்பொழுது பரிசில் பெற்று மீண்ட இரவலன் அவர்களைக் கானகத்திடை சந்தித்துப் புரவலனுடைய நாடு, கொடை, ஊர் முதலியவற்றைப் புகழ்ந்து, அக்கலைஞர்களையும் அவனிடத்தில் செல்லுமாறு வழி கூறி ஆற்றுப்படுத்துகிறான்.”
ஆசிரியப் பாவாற் புலவரையானும், பாணரையானும், பொருநரையானும் கூத்தரையானும் தம்முள் ஒருவன் ஆற்றுப்படுத்துவது; கூத்தர் முதலியவர்களுள் ஒருவன் கொடையாளியான ஒருவனிடத்துத் தாம் பெற்ற செல்வத்தை எதிர் வந்த இரப்போர்க்கு உணர்த்தி, அவரும் அந்தக் கொடையாளியினிடம் தாம் பெற்றுது போலவே பொருளைப் பெறுமாறு வழிப்படுத்துவது ஆற்றுப்படை எனப்படும்.
இசைக் கருவிகள்
ஆகுளி,
இசையோடு கூடிய மத்தளம்,
கடிகை,
குழல்,
கொம்பு,
சல்லி,
தூம்பு,
நெடுவங்கியம்,
பாண்டில்,
மாக்கிணை,
யாழ் என்னும்.
கருத்தலகுகள்
பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படைகளில் மொத்தம் 45 கருத்தலகுகள் காணப்படுகின்றன. டாக்டர் நவநீத கிருட்டிணன் அவர்கள் அவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.
நவநீததல்,
ஆற்றெதிர்ப்படுதல்,
கேட்பாயாக,
யாழ் வருணனையும் பண்ணிசைக்கும் முறையும்,
இசைக் கருவிகள்,
பாடினி வருணனை,
வந்த வழியின் இயல்பு,
சுற்றத்தின் வறுமை,
உன்னைப் போலவே நானும் இருந்தேன்,
மன்னவனைக் காணும் முன்னும் கண்ட பின்னரும் இருந்த நிலை,
பெற்றவளம்,
ஆற்றுப்படுத்தல்,
மன்னர் ஊர் அருகிலுள்ளது,
முல்லை வழி,
முல்லை நில மக்களின் விருந்தோம்பல்,
மருத நில வருணனை,
உழவர் விருந்தோம்பல்,
நெய்தல் வழி,
நெய்தல் நில மக்களின் விருந்தோம்பல்,
பாலை வழி,
எயினர் விருந்தோம்பல்,
வழியில் தங்கிச் செல்லுங்கள்,
வழி எச்சரிக்கை முதலியன கூறி ஆற்றுப்படுத்துதல்,
தெய்வத்தை வணங்குங்கள்,
மன்னன் வாயிற் சிறப்பு,
நாளோலக்கம்,
தலைவன் தோற்றம்,
பிற மன்னர் கையுறை,
மன்னனைத் தொழவேண்டிய முறை,
மன்னன் உம்மை வரவேற்கும் முறை,
உடை நல்குவான்,
கள் தருவான்,
விருந்தோம்புவான்,
மன்னனின் பரிசில் நீட்டியாப் பண்புடைமை,
பெறும் பரிசில்,
மன்னனை நீவீர் வாழ்த்தவேண்டிய வகை,
மன்னன் பெருமை,
குடி நிலை,
மன்னன் பண்பு நலன்,
வீரம்,
கொடைச் சிறப்பு,
செங்கோல் சிறப்பு,
தலைநகர்ச் சிறப்பு,
மலைச் சிறப்பு,
நதி வருணனை.
பத்துப்பாட்டில் ஆற்றுப்படை நூல்கள்
(புலவராற்றுப்படை), பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை) என்னும் ஐந்தும் ஆற்றுப்படை நூல்களாகும்.
திருமுருகாற்றுப்படை
திருமுருகாற்றுப்படை பத்துப்பாட்டிற்குக் கடவுள் வாழ்த்துப்போல் முதலில் அமைந்துள்ளது. அது 317 அடிகளை உடைய ஆசிரியப்பாவால் அமைந்த நூலாகும். அதனை இயற்றியவர் நக்கீரர் ஆவார். சைவர்கள் முருகன் திருவருளை வேண்டிய நாள்தோறும் பாராயணம் செய்யும் நூலாகும். அப்பாடல் அருளைப் பெற அவாவும் புலவன் ஒருவனை அப்பெருமான்பால் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. அழியக்கூடிய பொருள்களைப் பரிசில்களாக வழங்கும் முடி மன்னர்கள், குறுநில மன்னர்களைப் பாடாது என்றும் அழியாப் பேரின்ப வீடுபேற்றைத் தரும் முருகளைப் பாடுவதாக அந்நூல் அமைந்துள்ளது.
பொருநராற்றுப்படை
இப்பாட்டு, பரிசில் பெற்ற பொருநன், பரிசில் பெறாத பொருநனைக் கரிகாற்சோழனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்நூலைப் பாடியவர் முடத்தாமக் கண்ணியார் ஆவார். இந்நூல் 248 அடிகளை உடையது. இப்பாட்டில் வரும் பொருநன் போர்க்களம் பாடுபவன் ஆவான். அவன் கையில் தடாரி என்னும் பறை உள்ளது. வறிய பொருநனது யாழின் சிறப்பு, கரிகாலன் சிறப்பு, அவனுடன் சென்ற பாடினியின் வருணனை, கரிகாலன் ஆண்ட சோழநாட்டு வளம் முதலியன இதன்கண் பேசப்பட்டுள்ளன.
சிறுபாணாற்றுப்படை
இது சிறிய யாழ்ப்பாணன் ஒருவன் மற்றொரு யாழ்ப்பாணனை ஆற்றுப்படுத்துவதாக வருவதால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயர் பெற்றது. அடி அளவு பற்றியும் சிறுபாணாற்றுப்படை என்பர். யாழ்வகை ஐந்தனுள் சிறிய யாழாகிய செங்கோட்டியாழை உடைய காரணத்தால் சிறுபாணாற்றுப்படை என்னும் பெயரைப் பெற்றது என்று கூறுவானரும் உளர். சிறிய யாழ் உடையவர் என்பதாலும், சில பண்களே அறிந்தவர் என்பதாலும் அவர்கள் சிறுபாணர்கள் என்று அழைக்கப் பெற்றனர். ஓய்மா நாட்டை ஆண்டு வந்த நல்லியக்கோடன் என்பவனிடம் பரிசில் பெற்று மீண்டு வந்த சிறுபாணன் ஒருவன், வறிய சிறுபாணனை வழியில் கண்டு, அவனை அவ்வள்ளல்பால் ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டுள்ளது. இந்நூலை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் என்னும் புலவர் பாடியுள்ளார். அது 269 அடிகளை உடையது.
பெரும்பாணாற்றுப்படை
பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன், பரிசில் பெறாத மற்றொரு பாணனை வழிப்படுத்துவதாக வருவதால் அப்பெயர் பெற்றது. இப்பாட்டு பரிசில் பெற்ற பெரும்பாணன் ஒருவன் தன் வழியில் எதிர்பட்ட மற்றோர் இரவலனான பாணனைக் காஞ்சி மாநகரைக் கோநகராகக் கொண்டு செங்கோலாச்சிய இளந்திரையனிடம் ஆற்றுப்படுத்தியதாக அமைந்துள்ளது. இதைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடினார். இந்நூல் 500 அடிகளை உடையது. யாழின் வருணனை, இளந்திரையன் ஆட்சிச் சிறப்பு, உப்பு வணிகர் இயல்பு, நாட்டு வழிகளைக் காப்பவர் தன்மை, எயிற்றியர் செயல், கானவர் செயல், வீரக்குடி மக்கள் இயல்பு, முல்லை நில மக்களின் இயல்பு, உழவர் செயல்கள், பாலை நிலத்தார் இயல்புகள், அந்தணர் ஒழுக்கமுறை, காஞ்சி, மாமல்லையின் சிறப்பு, இளந்திரையனுடைய வீரம், கொடை முதலிய பண்புகள், பாணரும் விறலியரும் மன்னனிடம் சிறப்புப் பெறுதல் போன்றவை நூல் நுவலும் செய்திகளாகும்.
மலைபடுகடாம்
மலையை யானைகளாகவும், அதனிடத்து உண்டாகும் ஓசையை யானையிடத்துத் தோன்றும் முழக்கமாகவும் உருவகித்தால் இப்பாட்டு மலைபடுகடாம் என்னும் பெயர் பெற்றது.
என்னும் வரிகள் இப்பாட்டின் பெயர்க் காரணத்தைப் புலப்படுத்துகின்றன. இப்பாடல் பரிசில் பெற்ற கூந்தன் ஒருவன் பரிசில் பெறாத கூந்தன் ஒருவனைச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னனிடம் ஆற்றுப்படுத்தும் முறையில் அமைந்துள்ளது. இதைப் பாடியவர் பெருங்குன்றார் பெருங்கௌசிகனார் ஆவார். இந்நூல் 583 அடிகளை உடையது. மலைவளம், மலையடிவார ஊர்கள், அவர்கள் விருந்தோம்பும் முறை, நன்னனது கொடைத்திறன், சேயாற்றின் பெருமை போன்ற செய்திகள் காணப்படுகின்றன.
ஆற்றுப்படையும் பயண நூல்களும்
ஆற்றுப்படை நூல்களும், பயண நூல்களும் பழைய அநுபவத்தைக் கூறுகின்றன.
செல்லும் இடங்களுக்கு வழி கூறுதல் அவ்விரண்டு நூல்களில் காணப்பெறுகின்றன.
குழுவாகச் செல்லுதல் இரண்டிற்கும் பொதுவான செய்திகளாகும். சில சமயங்களில் பயண நூல்களில் பயணி தனியாகச் சென்ற அநுபவத்தையும் கூறுவதுண்டு.
இரண்டு நூல்களிலும் பெற்ற அநுபவங்கள் பேசப்படுகின்றன. ஆற்றுப்படை நூல்களில் பயணமும், அநுபவமும் பேசப்படுகின்றன. பயண நூல்களில் அநுபவச் செல்வம் பேசப்பெறுகின்றது.
"ஆற்றுப்படையில் எதிர்ப்படும் கலைஞர்களின் பெயர்கள் கட்டப்பெறுவதில்லை. பயண நூல்களில், காணப்பெறும் மக்கள் சமுதாயத்தை விளக்குவதுடன் குறிப்பிட்ட மனிதர்கள் அல்லது தலைவர்களின் பெயர்கள் சுட்டப்பெறும்.”
இரண்டு நூல்களிலும் கிடைக்கும் உணவு, தங்கும் இடங்கள் பேசப்பெறுகின்றன. உணவு விடுதி, சிற்றுண்டி வசதி போன்றவை இருபதாம் நூற்றாண்டில் காணப்பெறும் வசதிகளாகும்.
ஆற்றுப்படை நூல்களில் கலைஞர்கள் கால்நடையாகவே சென்றனர். செல்வம் படைத்தவர்கள் தேர், குதிரை, பாண்டில், யானை, சிவிகை, கோவேறு கழுதை போன்றவற்றைப் பயன்படுத்தினர். இருபதாம் நூற்றாண்டில் மோட்டார் கார், புகைவண்டி, வானூர்தி, கப்பல் போன்ற புதிய போக்குவரத்துச் சாதனங்கள் பயன்படுத்தப் பெறுகின்றன.
ஆற்றுப்படை நூல்களில் வறண்ட மலைப்பகுதிகள், பரற்கற்கள் நிரம்பிய பாலைவழிகள் காணப்பெறுகின்றன. பயண நூல்களில் வழித்துன்பங்கள் மிகுதியாகக் காணப் பெறவில்லை.
ஆற்றுப்படை நூல்கள் செய்யுள் வடிவில் காணப்பெறுகின்றன. பயண நூல்கள் உரை நடையில் அமைந்துள்ளன. இவ்வேறுபாடு கால வேறுபாட்டினால் ஏற்பட்டதாகும்.
ஆற்றுப்படை நூல்களில் பயணம் உள்நாட்டில் நடைபெறுகிறது. பயண நூல்களில் பயணம் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் நடைபெறுகிறது. இது போக்குவரத்துச் சாதனங்கள் பெருகியதால் ஏற்பட்ட மாற்றமாகும். டாக்டர் நவநீத கிருட்டிணனும் இக்கருத்துகளைக் கொண்டுள்ளார்.
ஆற்றுப்படையும் வழிநடைச் சிந்தும்
ஆற்றுப்படை ஒரு பயண நூலாகும். வழிநடைச் சிந்து பயணப் பாடலாகும். நடந்து பயணம் செல்பவர் களைப்புத் தோன்றாமல் இருப்பதற்காகப் பாடிச் செல்வது வழிநடைச் சிந்து ஆகும்.
காப்பியங்களில் ஆற்றுப்படை
காப்பியங்களில் வழிகளும் கூறுகளும், நாடு நகரங்களைக் கடந்து செல்லும் செயல்களும் காணப்பெறுகின்றன. கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் ஆகிய மூவரும் மதுரைக்குச் செல்லும் பொழுது மாங்காட்டு மறையோன் அவர்களுக்கு மதுரைக்குச் செல்லும் மூன்று வழிகளைக் கூறுவதைச் சிலப்பதிகாரத்தில் காணலாம். சீவகசிந்தாமணியில் சீவகன் சுதஞ்சனிடம் நாடு காணும் ஆவலைக் கூறுகிறான். சில இடங்களில் வழிப்பயணம் பேசப்பெறுகிறது. பெருங்கதையில் உதயணன் வாசவ தத்தைக் கவர்ந்து சென்ற வழிப்பயணம் கூறப்பட்டுள்ளது. அந்நூலில் நாடு, நகர், நிலம் போன்றவற்றின் வருணனையைக் காணமுடிகிறது. கம்பராமாயணத்தில் தசரதனும், அவனுடைய தேவிமார்களும், படைகளும் மிதிலைக்குச் சென்ற முறை விளக்கப்பெற்றுள்ளது. இராமன் காட்டிற்குச் சென்ற வழியையும் கம்பர் கூறியுள்ளார். கிட்கிந்தா காண்டத்தில் சீதையைத் தேட வழிகூறும் பகுதி காணப்பெறுகிறது. பெரிய புராணத்தில் நாயன்மார் சென்ற வழித்தடங்களைச் சேக்கிழார் குறிப்பிட்டுள்ளார். அரிச்சந்திர புராணத்தில் சந்திரமதியின் சுயம்வரத்திற்கு அரிச்சந்திரன் செல்லும் பயணக் காட்சி, அவன் நாடுநகர் இழந்து காசி செல்லும் பயணம், அயோத்தி மீளும் பயணம் போன்ற பயணங்கள் காணப்பெறுகின்றன. இவ்வாறு காப்பியங்களில் ஆற்றுப்படை, வழிப்பயணம் போன்றவை காணப்பெறுகின்றன.
கையேடுகள்
சுற்றுலாச் செல்வோர் தாங்கள் செல்லும் நாடுகளிலே என்னென்ன இடங்களைப் பார்க்கலாம்? எங்கு தங்கலாம்? எவ்வகை உணவுகள் உண்பதற்குக் கிடைக்கும்? என்பன பற்றி விளக்கிக்கூறும் நூல்கள் கையேடுகள் எனப்பெறும். அக்கையேடுகள் 1.ஓரிடத்தைப் பற்றிய கையேடுகள், 2.பல இடங்களைப் பற்றிய கையேடுகள் என இரண்டு வகைப்படும். ஓரிடம் பற்றிய கையேட்டில் ஓரிடத்தின் தொடக்கம் முதல் இன்றுவரையுள்ள வளர்ச்சி பேசப்பெறும். 'மாமல்லை', 'மதுரை', 'பூம்புகார்', 'சென்னைப்பட்டினம்' போன்ற நூல்கள் அவ்வகைக்குள் அடங்கும்.
ஒரே கையேட்டில் பல இடங்களைப் பற்றிய புள்ளி விவரங்கள் காணப்பெறும். 'தமிழகச் சுற்றுலாக் கையேடு', 'இந்திய சுற்றுலாக் கையேடு' போன்ற நூல்களைச் சான்றாகக் கூறலாம். இந்நூல்கள் ஆங்கிலத்தில் மிகுதியாகக் காணப் பெறுகின்றன. ஆங்கில நூல்கள் வேற்று மொழியினருக்கு உறுதுணையாக இருக்கும். ஆங்கில நூல்களே மிகுதியாக விற்பனையாகின்றன.
கருத்தலகுகள்
பொதுவான முன்னுரை,
வரைபடம்,
தட்பவெப்பநிலை,
அந்த இடத்தைப் பற்றிய அறிமுகம்,
மாநில, மையச் சுற்றுலாச் செய்தித் தொடர்பு நிலையங்கள்,
பாதுகாக்கப் பெற்ற அல்லது தடை செய்யப்பெற்ற இடங்கள்,
வாகன வசதி,
வெளிநாட்டுக் கார் கிடைக்கும் இடங்கள்,
காரின் உதிரிப்பாகங்கள் கிடைக்கும் இடங்கள்,
கார் பழுது பார்க்கும் இடங்கள்,
சுற்றுலா நடத்துநர்களின் முகவரி,
பயண முகவர்களின் முகவரி,
வாங்கக் கூடாத பழம் பொருள்கள்,
கடைவீதி,
மதுவிலக்கு,
மதுபானக்கடைகள்,
விழாக்கள்,
பார்க்க வேண்டிய சுற்றுலா மையங்கள்,
அவற்றின்
வரலாறு,
தூரம்,
அங்குள்ள உணவகங்கள்,
மருத்துவ மனைகள்,
மருத்துவர்கள்,
மருந்துக்கடைகள்,
வங்கிகள்,
வழிகாட்டிகள்,
அங்குள்ள கலைகள்,
கைவினைத் தொழில்கள்,
கைவினைப் பொருள்கள்,
கல்வி நிலையங்கள்,
பண்பாட்டு நிலையங்கள்,
திரைப்பட கொட்டகைகள்,
விடுதிகள்,
உணவகங்கள்,
புத்தகக் கடைகள்,
நூல் நிலையங்கள்,
பொழுதுபோக்குக் கூறுகள் போன்ற செய்திகள் கையேடுகளில் இடம் பெற்றுள்ளன.
பயண நூல்களும் கையேடுகளும் விளம்பரங்களாகப் பயன்படுகின்றன; மக்களைப் பயணம் செய்யத் தூண்டுகின்றன; பயணம் செய்பவர்களுக்குத் துணை புரிகின்றன; பயணிகளுக்குத் தெரியாத செய்திகளைத் தெரிவிக்கின்றன.
ஆதாரம் : இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம்