சனி, 6 ஜூன், 2020

செம்மொழி (Classical language)


#செம்மொழி #Classical_language

செம்மொழி (Classical language) என்பது ஒரு மொழியின் இலக்கியப்பழமை அடிப்படையிலும் பிற பண்புத்தகுதிகளின் அடிப்படையிலும் செய்யப்படும் வகைப்பாடு ஆகும். செம்மொழியாக ஒரு மொழியைத்தெரிவு செய்ய அதன் இலக்கியப் படைப்புகள் வளம் மிகுந்ததாகவும் பழமையானதாகவும், அதன் தோன்றல் ஏனைய மொழிகளில் சாராதிருத்தலும் வேண்டும்1 (ஜோர்ஜ் எல்.ஹார்ட்).

உலகில் எத்தனையோ மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. இதில் பல மொழிகளுக்கு எழுத்து வடிவங்கள் இல்லை என்பதால் பயன்பாட்டுக்குக் கொண்டு வர முடியாமல் உள்ளன. ஆனால் சில மொழிகள் மிகப் பழமையானதாகவும், இலக்கியத்தில் சிறந்து விளங்குவதாகவும் உள்ளன. இவற்றில் சில மொழிகளை செம்மொழிகள் என்று அடையாளப்படுத்துகின்றனர்.

செம்மொழித் தகுதி

ஒரு மொழிக்கு செம்மொழி என்ற தகுதி அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் இலக்கியத் தரத்தின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது. இருப்பினும் செம்மொழி என்பதற்கு அம்மொழியில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான இரண்டு சிறப்புகள் தேவையாய் இருக்கிறது.

இலக்கியப் படைப்புகள்
கலைப் படைப்புகள்
இந்த இரு படைப்புகளைக் கொண்டே அந்த மொழி செம்மொழிகளாக அறிவிக்கப்படுகின்றன.

இலக்கியப் படைப்புகள்

ஒரு மொழியின் சிறப்பிற்கும் செம்மைக்கும் முதல் அடையாளமாகத் திகழ்வது அம்மொழியின் பழமை வாய்ந்த இலக்கியங்கள்தான். இந்த இலக்கியங்களில் இருக்கும் பழமையுடன் அதில் கருத்துச் செறிவுகளும் இருக்க வேண்டும். ஒரு மொழியின் சிறப்பு அந்த மொழியில் படைக்கப்பட்ட இலக்கியப் படைப்புகள் வழியாகத்தான் அறிய முடிகிறது.

கலைப் படைப்புகள்

ஒரு மொழியின் பழமைக்கு இலக்கியம் சான்றாக இருந்தது என்பதுடன் அந்த மொழி சார்ந்த பகுதிகளில் உருவாக்கப்பட்ட கலைப் படைப்புகள் அந்த மொழியின் பழமையை உணர்த்தும் அடுத்த சான்றாக இருக்க வேண்டும். கலைப் படைப்புகள் என்பது கட்டிடக் கலை , சிற்பக் கலை போன்ற பழமை வாய்ந்த கலைச் சான்றுகளாக இருக்க வேண்டும்.

உலகச் செம்மொழிகள் தொகு
இன்று உலகில் செம்மொழிகளாகக் கருதப்படும் பல மொழிகளில் சில:

திராவிட மொழிகள்:
தமிழ்
தெலுங்கு
கன்னடம்
மலையாளம்
இந்தோ-ஐரோப்பிய மொழிகள்:
கிரேக்க மொழி
சமசுகிருதம்
இலத்தீன்
பாரசீக மொழி
ஆபிரிக்க-ஆசிய மொழிகள்:
அரபு மொழி
எபிரேயம்
சினோ-திபெத்திய மொழிகள்:
சீன மொழி

தமிழ்

இந்தியாவில் ஆரியம் சார்ந்த பண்பாட்டிற்கு வடமொழி எப்படி விளங்கியதோ அதைப் போலவே திராவிடம் சார்ந்த பண்பாட்டிற்கு திராவிட மொழிகளில் முதலாவதான தமிழ் 6000 ஆண்டுகள் மேற்பட்ட இலக்கியப் பழமை வாய்ந்தது. ஐரோப்பிய நாகரீகத்தை அறிந்து கொள்ள கிரேக்கம், இலத்தீன் மொழிகள் போல் தற்போதைய இந்திய வரலாற்றை அன்றைய சேர, சோழ, பாண்டியர்கள், போன்ற வரலாற்றை அறிய தமிழ், மொழிகள் தேவையாக உள்ளன. தமிழின் செம்மொழித் தகுதிக்கு திருக்குறள் மற்றும் சங்க இலக்கிய நூல்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல் போன்ற பல நூல்கள் உள்ளன.

கிரேக்கம்

கிரேக்க மொழி மிகப் பழமையான பாரம்பரியம் வாய்ந்த ஒரு மொழியாகும். கிரேக்க இலக்கியத்தில் ஹோமர் எனும் மகாகவியின் காப்பியங்களான இலியது, ஒடிசி ஆகியன கி.மு.700 ல் வரி வடிவத்தை அடைந்திருந்தாலும் அதற்கு முன்பாகச் செவி வழிச் செய்திகளாக பல நூற்றாண்டுகள் இருந்திருக்கக் கூடும் என்கிறார்கள். கி.மு 500 ஆம் ஆண்டு முதல் கி.மு.310 ஆம் ஆண்டு காலத்தில் பல இலக்கியங்கள் இம்மொழியில் படைக்கப்பட்டுள்ளன. ஹிரொடோட்டஸ் என்பவரின் வரலாற்றுப் பதிவுகள், டுமாஸ் தனிசின் சொற்பொழிவுகள் , பிளேட்டோ , அரிஸ்டாட்டில் போன்றவர்களின் தத்துவ நூல்கள் போன்றவை இன்றும் கிரேக்க மொழியின் இலக்கிய வளத்திற்குப் பெருமை சேர்ப்பனவாக உள்ளன.

இலத்தீன்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள இலத்தீன் மொழியில் வர்ஜில் என்பவர் படைத்த இனீட் எனும் காவியம் சிறப்புடையது. மேலும் இம்மொழி அறிஞர்களான சிசிரோ, சேலஸ்ட், டேசிட்டஸ், செனகா போன்றவர்களின் சொற்பொழிவுகள் , தத்துவங்கள் இலத்தீன் மொழிக்கு வளம் சேர்க்கின்றன. கி.மு.70 முதல் கி.பி. 18 வரையிலான காலப் பகுதிகளில் பல இலக்கியங்கள் படைக்கப்பட்டிருக்கின்றன. 1900 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் இத்தாலிய நாட்டு கோலோசியம் எனும் மாபெரும் திறந்தவெளி அரங்கம் பழங்கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

அரபு மொழி

அரேபிய மொழியில் எழுத்து வடிவம் கி.மு.328 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தினரின் இறுதிச் சடங்கில் பொறிக்கப்பட்டது என்கிறார்கள். அரேபிய மொழியில் குர் ஆன் சிறந்த இலக்கியமாக கருதப்படுகிறது. அரேபியப் பழமொழிகள் , கவிதைகள் போன்றவை ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் எழுத்து வடிவம் பெற்றிருக்கின்றன.

சீனம்

சீன இலக்கியம் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். சீன இலக்கிய வரலாற்றில் கி.மு. 600 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் வாழ்ந்த கன்ஃபூசியஸ் , லாவுட்ஸ் என்பவர்கள்தான். கன்ஃபூசியஸ் சீன மொழியில் கி.மு.3000 ஆண்டு முதல் கி.மு. 600 ஆம் ஆண்டு வரையுள்ள இலக்கியங்களை நான்கு தொகுதிகளாகத் தொகுத்தளித்திருக்கிறார். ஐந்தாவதாக அவருடைய படைப்பான தென்றலும் வாடையும் தந்திருக்கிறார். லாவுட்ஸ் “தாவ்” எனும் நெறியை வழங்கியிருக்கிறார். இவர்கள் வழங்கிய இலக்கியம் இன்னும் உலகம் முழுவதும் எடுத்துக்காட்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவின் கட்டிடக் கலைக்கு அங்குள்ள 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலக அதிசயங்களில் ஒன்றான சீனப் பெருஞ்சுவர் ஒன்றே போதுமானது.

ஹீப்ரூ

ஹீப்ரு மொழிக்கு கி.மு. 12 ஆம் நூற்றாண்டு முதல் தற்காலம் வரை நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கி.மு. 3 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலத்தில் பழைய ஏற்பாடு எழுதப்பட்டது. இது விவிலியக் காலம் எனப்படுகிறது. மோசஸ் என்பவரால் யூதர்களின் நீதிநெறிகள் , சட்டங்கள் ஆகியவை கி.பி. 200 ஆம் ஆண்டு காலப் பகுதியில் தொகுக்கப்பட்டது. இது மிஷனா காலம் எனப்படுகிறது. இத்தொகுப்பிற்கு பல தலைமுறை அறிஞர்கள் எழுதிய விளக்கம் கெமாரா என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டது. மிஷ்னா மற்றும் கெமாரா ஆகிய இரண்டின் தொகுப்புதான் யூதர்களின் முக்கிய நூலாக இருக்கும் டாலமுட் எனப்படுகிறது. மூன்றாவதாக கி.பி 6 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இடைக்காலம். அடுத்ததாக நவீன ஹீப்ரு காலம். அரசர் எரோது என்பவர் 3000 ஆண்டுகளுக்கு முன்பு ஜெருசலேம் பகுதியில் எழுப்பிய சாலமன் ஆலயம் இம்மொழியின் கட்டிடக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது.

பாரசீகம்

ஈரான் நாட்டின் ஆட்சி மொழியான பாரசீகம் அரேபிய வரி வடிவத்தில்தான் எழுதப்படுகிறது. இன்றைய உலக நாகரீகங்கள், அறிவியல் முதலியவற்றை உலகிற்கு வழங்கியது முந்தைய பாரசீகம்தான். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கும் எண்கள் பாரசீகம் வழங்கியதுதான். உமர் கய்யாம் எனும் கவிஞரின் கவிதைகள் உலகம் போற்றக் கூடிய ஒன்றாகும். பாரசீகத்தின் பழமையை 2500 பழமை வாய்ந்த கட்டிடக் கலையான பெரிசிபோலிசு என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமஸ்கிருதம்

இந்தியாவில் வடமொழி என்று அழைக்கப்பட்ட சமஸ்கிருதம் கி.மு., 1500 முதல் கி.மு 200 வரை வேதகால இலக்கியமாகவும், அதற்கடுத்து கி.மு. 500 முதல் கி.பி. 1000 ஆண்டுகளில் இராமாயணம் , மகாபாரதம் போன்ற காப்பியங்கள் செம்மொழிக்கான நிலையைப் பெற்றது. சர்.வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவில் 1784 -ல் ஆசியக் கல்விச் சங்கம் எனும் நிறுவனத்தை உருவாக்கினார். இந்நிறுவனம் மூலம் மார்க்ஸ் முல்லர், கேல் புரூக் போன்றோர் வடமொழி நூல்களை ஆங்கிலம் , ஜெர்மன் , பிரெஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் வெளியிட்டார்கள். கீழை உலகின் புனித நூல்கள் என்ற வரிசையில் மார்க்ஸ் முல்லர் பதிப்பித்த 50 தொகுதிகளில் பெரும்பாலானவை வடமொழி நூல்களாகும். இலக்கியம் , தத்துவம் , அரசியல் போன்ற துறைகளில் பெரும்பான்மையாக கிரேக்க, ரோமானியப் பங்களிப்புகளையே பார்த்துக் கொண்டிருந்த ஐரோப்பியர்களுக்கு வேதம் , உபநிடதம் , இதிகாசங்கள் , காப்பியங்கள் , நாடகங்கள் , தத்துவ நூல்கள், நீதி நூல்கள் போன்றவை வடமொழி இலக்கியத்தைச் செம்மொழியாகக் கருதச் செய்தன.

இந்தியாவில் செம்மொழிக்கான தகுதி

ஒரு மொழியானது 1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான வரலாறு மற்றும் பழைமையான இலக்கியங்கள் கொண்டதாக இருக்க வேண்டும். அல்லது அம்மொழியின் துவக்ககால இலக்கியங்கள் உயர் தரத்தில் இருத்தல் வேண்டும். மேலும் அந்த மொழியின் இலக்கிய மரபு தொடக்கத்திலிருந்தே அம்மொழிக்கு உரிமையானதாக இருத்தல் வேண்டும். மற்ற மொழிகளின் இலக்கிய மரபுகளிலிருந்து பெறப்பட்டதாக இருக்கக் கூடாது. அதன் அடிப்படையிலே ஒரு மொழிக்கு செம்மொழி தகுதியை இந்திய அரசு வழங்கி வருகிறது. இந்தியாவில் தமிழ், சமசுகிருதம் கன்னடம், மற்றும் ஒடியா மொழிகள் செம்மொழிகளாக தகுதி பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக