ஞாயிறு, 14 ஜூன், 2020

உலக காற்று தினம் ஜூன் 15:



உலக காற்று தினம் ஜூன் 15: 

#காற்று
 
நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.

இந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

‘வளிக்கோளம்’ என்பது வாயு நிலையில் உள்ள பொருள். ‘நீர்க்கோளம்’ என்பது திரவப்பொருள். ‘நிலக்கோளம்’ என்பது திடப்பொருள்.

பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று பிரிவுகள் என்றும் சொல்லலாம்.

காற்றில் ஒரு சில வாயுக்களின் செறிவு நிலை மாறாமல் இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும்.

வளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன.

இவற்றில் நைட்ரஜன் கன அளவில் 78 சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன.

காற்று மண்டலத்தில் அடங்கியுள்ள முக்கியமான காற்று, நைட்ரஜன். இது எந்தவித வினைச்செயல்களிலும் ஈடுபடாமல் தனித்து இயங்கக்கூடியது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது. வெடிக்கக் கூடியது. காற்றில் நைட்ரஜன் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அடுப்புப் பற்ற வைக்க ஒரு தீக்குச்சியைக் கிழித்தாலே ஆக்சிஜன் பற்றி எரியத் தொடங்கும். மிகவும் கடுமையாக வெடித்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடும். ஆக்சிஜனின் அத்தகைய தன்மையை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நைட்ரஜன் தான்.

காற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். பூமியில் காற்று (வாயு) மண்டலம் எப்படி உண்டானது? பூமி தோன்றிய தொடக்கத்தில் இது ஒரு நெருப்புக் கோளமாய் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாகக் குளிர்வடையத் தொடங்கியது. மேற்பகுதி குளிர்ந்து திடத்தன்மை பெற்ற போதிலும் உட்புறம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. அப்போது பூமியின் உட்பகுதியில் இருந்து நெருப்பைக் கக்கியவாறு எரிமலைகள் தோன்றி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து ஏராளமான வாயுக்களும் வெளியேறின. இது பல கோடிக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால் இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியைச் சூழ்ந்தவாறு வாயு மண்டலத்தை உருவாக்கின.

வளி, காற்று என்னும் இரண்டு வார்த்தைகளையும் தமிழில் பொது வழக்கில் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொள்ளப்படுகின்றன.

‘வளி’ என்றால் ‘நிலைத்து நிற்கும் காற்று’. வளி அசையும்போது அது ‘காற்று’ என்றாகி விடுகிறது.

வெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித் தனியான பெயர்களைச் சூட்டி அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தே இருந்துள்ளது.

வடக்கில் இருந்து வீசும் காற்று, வாடை; தெற்கில் இருந்து வீசும் காற்று, தென்றல்;

கிழக்கில் இருந்து வீசும் காற்று, கொண்டல்; மேற்கில் இருந்து வீசும் காற்று, கோடை.

காற்று இல்லாத இடமே இல்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.

காற்றை நம்மால் உணர முடிகிறதே தவிர பார்க்க முடியாது. காற்றுக்கு எடையும் உண்டு. காற்றில் எப்போதும் ஈரம் உண்டு. இதற்குக் காரணம் அதில் உள்ள நீராவிதான்.

நாம் உயிர் வாழ ஆக்சிஜன் ஆதாரமாக உள்ளது. மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது. மனிதர்கள் ஆக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள். இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஆக்சிஜனை வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.

மனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை.

உணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.

காற்று- இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள துணை புரியும் அற்புத சான்றாகும்.

“நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும்-பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும்-விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன” (திருக்குர்ஆன் 2:164) என்றும்,

“இரவு-பகல் மாறி மாறி வருவதிலும், வானத்தில் இருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (45:5) என்றும் இறைவன் கூறுகின்றான்.

எந்தக் காற்றினால் இந்த உலகம் உயிர் வாழ்கிறதோ அதே காற்றினால் உலகத்திற்கு பேரழிவும் ஏற்படுவதுண்டு. புயல், சூறாவளி போன்றவற்றைக் காணும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக