வெள்ளி, 1 ஜூன், 2018

பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா?



பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா?

மனித சமுதாயத்தின் சட்ட திட்டங்களைக் கொண்டு அந்த மனித சமுதாயம் எப்படிப்பட்ட இலக்கை நோக்கிச் செல்கின்றது என்பதை கணித்து விடலாம். நாம் மனித வரலாற்றைப் புரட்டினால் சமுதாயம் மாற்றம் அடைய அடைய அதன் சட்டத்திட்டங்களும் மாற்றம் அடைந்து கொண்டே வந்திருக்கின்றது என்பதை அறியலாம்.

சமூகம் மாற ஆரம்பித்ததும் குற்றங்களும் நடைபெற ஆரம்பித்தன. சமூகத்தை ஒருங்கிணைக்கவும் பாதுகாக்கவும் சட்டங்கள் வரையறுக்கப்பட்டன. ஆனால் சட்ட விழிப்புணர்வு மட்டும் இன்றும் தோன்றவே இல்லை. குறிப்பாக பெண்கள், அடிப்படை சட்டங்களை அறிந்து கொள்வதின் மூலம் தன்னம்பிக்கையும், எதையும் எதிர் கொள்ளும் துணிவும் பக்குவமும் அதிகரிக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை.

சொத்தில் பங்கு உண்டா..?

ஆண்களைப் போல பெண்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்று சில பேருக்கு பொதுவாய் தெரிகிறது. “மகிழ்ச்சி”. ஆனால் பெண்களுக்கு என்னென்ன உரிமை இருக்கிறது என்ற அடிப்படைகளைக்கூட இன்றைய பெண்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.

நமது சட்ட முன்னோர்களும் அரசாங்கமும் எத்தனையோ நல்ல சட்டங்களையும் இயற்றியுள்ளார்கள்.

பெண்களுக்கான சொத்துரிமை என்ன?

திருமணத்தின்போது கொடுக்கப்படும் நகைகளும், சீர்வரிசைகளும் மட்டுமே பெண்களுக்கான சொத்து என்று ஒரு காலத்தில் இருந்தது.

ஆனால் பெண்களுக்கான சொத்துரிமையை 1956ல் இந்து வாரிசு உரிமைச் சட்டப்படி சொத்து உரிமைகளை நிலை நாட்டியது என்றால் மிகையில்லை.

இந்த சட்டம் வருவதற்கு முன்பு ‘இந்து பெண்கள் சொத்து சட்டம்’ என்று ஒன்று இருந்தது. இந்த சட்டத்தின் மூலம் பெண்களுக்கு, பிறந்த வீட்டில் தங்குவதற்கான உரிமை மட்டும்தான் இருந்தது. சொத்தில் எவ்வித உரிமையும் கிடையாது. பிறந்த வீட்டிலிருந்து கொடுக்கப்பட்ட சீதனம் மட்டுமே பெண்களுக்கான சொத்தாக கருதப்பட்டது.

1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட ‘இந்து வாரிசு உரிமை சட்டம்-1956’ பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என்று சொன்னது.

உதாரணமாக ஓர் இந்து ஆணுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மூன்று மகள்கள் இருக்கிறார்கள் எனில், அந்த ஆண் இறக்கும் பட்சத்தில் அவரது சொத்துக்கள் மனைவி, மகன்கள் மற்றும் மகள்களுக்கு சம பங்குகளாக கிடைக்கும்.

இதில் அனைவருக்கும் சம உரிமை உண்டு. அதன் பிறகு 1956- சட்டத்தில் சில மாற்றங்கள் வந்தன. 1989-ல் மேலும் சில மாற்றங்கள் வந்தது.

ஆனாலும் 09.09.2005-ல் மத்திய அரசாங்கம் கொண்டு வந்த சட்டமே ஒரு தெளிவை தந்தது. அவற்றை கொஞ்சம் விரிவாக பார்க்கலாமா..?

சொத்துகளின் வகைகள் என்ன..?

சொத்துரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளும் முன்னர் சொத்துகளின் வகைகளையும் அவற்றின் விளக்கங்களையும் ஓரளவு அறிந்து கொள்ளுதல் அவசியம். பாட்டன் முப்பாட்டன் வழி வந்த சொத்துகளே பூர்வீக சொத்துகள். அதைத்தான் பூர்வீக சொத்துகள் என்று சட்டம் சொல்கிறது.

ஆனால் ஒருவர் தன் சுய சம்பாத்தியத்தில் அவரது வாழ்நாளில் வாங்கிய சொத்துகளை தனிப்பட்ட சொத்தாக உரிமை கொண்டாடவும், அவர் விருப்பப்படி அனுபவிக்கவும் சுய விருப்பத்தின் பேரில் தன் சொந்தங்களுக்கு எழுதி வைக்கவும் முழு உரிமை உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதையே தனிப்பட்ட சொத்தாக சட்டம் வரையறுக்கிறது.

பாகப்பிரிவினை என்றால் என்ன?

“பாகப்பிரிவினை”, நடிகர் திலகம் நடித்து பீம்சிங் இயக்கிய அருமையான திரைப்படம் என்று தெரியும். ஆனால் சட்டத்தின் பார்வையில் பூர்வீக சொத்துகளை அவரது வாரிசுகள் முறைப்படி பிரித்துக் கொள்வதே பாகப்பிரிவினை என்று விவரிக்கப்பட்டுள்ளது.

பூர்வீக சொத்துகளை மட்டுமே பாகப்பிரிவினை செய்ய இயலும்.

ஒருவர் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய தனிப்பட்ட சொத்துகளின் பெயரில் எவரும் உரிமை கொண்டாட இயலாது. அவரின் தனிப்பட்ட விருப்பத்தையே சாரும்.

எவரும் எதற்காகவும் அதை கட்டுப்படுத்த இயலாது. அவரின் விருப்பப்படி விலைக்கு விற்கலாம். தானமாக தரலாம். எவருக்கும் உயில் எழுதலாம்.

பாகப்பிரிவினைகளை பொறுத்தவரை அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் பிரிக்க வேண்டும். அப்படி பிரிக்காத பட்சத்தில் வழக்கு தொடுத்து அதை செல்லாததாக்கவும் முடியும் என்பதை சட்டம் சொல்கிறது.

ஆனாலும் அதில் இருந்த சந்தேகங்களையும் குழப்பங்களையும் 2005ல் வந்த மத்திய அரசாங்க சட்டம் களைந்து தெளிவாக்கி உள்ளது.

ரியல் எஸ்டேட் எனும் பெரும் பூதத்தால் வந்த பயன்கள் என்ன?

“காணி நிலம் வேண்டும் பராசக்தி” என்று பாடினான் பாரதி. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு அடிமைப்பட்டிருந்த காலத்தில் தனி மனித விடுதலை குறித்தும், உரிமை குறித்தும் அப்படிப் பாடினான் மகாகவி.

ஆனால் இன்றோ நவநாகரக வளர்ச்சி என்னும் நுகர்வு கலாசார மாயையில் வீழ்ந்த சிலரின் பேராசையால் சுயநலத்தால் குடும்ப உறவுகளை சிதைத்துக் கொண்டிருக்கிறோம்.

நிலங்களின் மதிப்பு கோடிகளில் புரளுவதால் உறவுகளில் பல ‘கேடிகளை’ உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். விளை நிலங்கள் ரியல் எஸ்டேட் ஆகி, ரியல் எஸ்டேட் விலை என்பதே வளர்ச்சியாகி, வளர்ச்சி என்பதே வியாபாரமானது.

வியாபாரம் என்பது அரசியலின் ஒரு பிரிவாக மாறி அதிலும் ரியல் எஸ்டேட் புகுந்து விளையாடி கொண்டிருக்கிறது. இதுவா வளர்ச்சி? இதுவா நாம் ஆயிரம் ஆண்டுகளாக வளர்த்த நாகரிகம், பண்பாடு?

தமிழகத்தில் மட்டும் சுமார் எட்டு லட்சம் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. கட்டப்பஞ்சாயத்துகள் கணக்கிலடங்காது. ரியல் எஸ்டேட் குற்றங்களை எழுதி மாளாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் நமது சொத்துகளை சட்டத்தின் உதவியோடு பாதுகாக்க வேண்டும்.

காலம் கடத்தாது அவற்றை பராமரிக்கவும் ஆவணமாக்கவும் வேண்டும். சொத்துகள் மட்டுமல்லாது அவற்றின் சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் நிலையாக பாதுகாக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

பாசமலர் சகோதரர்களே கொஞ்சம் அட்டென்ஷன் ப்ளீஸ்…

ஒரு ஆண்மகனுக்கு எப்படியெல்லாம் பூர்வீக சொத்தில் உரிமை உள்ளதோ அதன் படியே பெண்ணுக்கும் உரிமை உண்டு. அவற்றில் இரண்டு முக்கிய விதிமுறைகளையும் சட்டத்தின் கூடவே அருமையாக சொன்னது.

2005ம் ஆண்டின் இந்து வாரிசு உரிமை சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்னர் சொத்தை பாகப்பிரிவினை செய்திருக்க கூடாது.

பெண்கள் உரிமை கொண்டாட, நினைக்கும் சொத்தை அவரது தந்தை 2005-க்கு முன்னர் வேறொருவருக்கு விற்பனை செய்திருந்தால் அதில் பெண்கள் பாகமோ, உரிமையோ கோர முடியாது.

யாரெல்லாம் சொத்துக்கு உரிமையாளர்?

இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி, இது இந்துக் களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மதத்தினருக்கு வித்தியாசப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

∆ திருமணமான ஆணின் சொத்துக்கு உரிமை: மனைவி, மக்கள் – தாய்

∆  திருமணமான பெண்ணின் சொத்துக்கு உரிமை: கணவன் – பிள்ளைகள்.

∆  திருமணமாகாத ஆணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்

∆  திருமணமாகாத பெண்ணின் சொத்துக்கு உரிமை: – பெற்றோர்.

∆  பெற்றோர்கள் இல்லையென்றால் இருதரப்புக்குமே சகோதர சகோதரிகள் சொத்துக்கு உரிமை கொண்டாடலாம்.

∆  திருமணம் ஆகிவிட்ட ஓர் ஆணின் மனைவி, மக்கள் இறந்து விட்டால், அவருடைய மகன் அல்லது மகள் வயிற்று வாரிசுகளுக்கு நேரடியாக சொத்துப் போக நேரிடும்.

∆  கணவர் இறப்பிற்கு அவரது மனைவியே காரணம் என்று சட்டத்தின் மூலம் நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கணவரது மரண வழக்கில் மனைவி சம்பந்தப்பட்டு இருந்தாலோ மனைவி கணவரது சொத்தில் பங்கு கேட்க முடியாது.

∆  தாத்தா மற்றும் தந்தை சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இணையாக பெண்ணுக்கும் உரிமை இருக்கிறது. நிலம், வயல் மற்றும் அசையா சொத்துகளை பெண்களும் பிரித்து கொள்ளலாம். ஆனாலும் பாரம்பரியமாக இருக்கும் வீட்டை சகோதரன் விரும்பும் வரை அவரின் சம்மதமில்லாமல் அதை விற்கவோ, விற்பனை செய்து பணம் கொடுக்க வேண்டும் என்றோ அடம் பிடிக்க முடியாது.

இந்த உரிமைகள் எல்லாம் தனிப்பட்ட முறையில் யாருக்குமே உயிலோ அல்லது பாகப்பிரிவினை செய்து வைக்காமல் இருந்தால் மட்டுமே பொருந்தும். உயில் எழுதி வைத்து விட்டால் உயிலின் தன்மையை பொறுத்துதான் அந்த சொத்துக்களை பிரிக்க முடியும்.

முன்பே சொன்னது போல உயிலை எத்தனை முறையும் எழுதலாம். மாற்றி அமைக்கலாம். கடைசியாக எழுதிய உயிலே செல்லுபடியாகும். எனவே காலம் கடத்தாது உயில் எழுதுங்கள்.

//தானப்பத்திரம் என்றால் என்ன?//

ஆங்கிலத்தில் செட்டில்மென்ட் என்று சொல்லுவார்கள் (Settlement Deed). தன்னுடைய சொத்தை மற்றவரின் பெயருக்கு மாற்றி கொடுப்பது தான் தானப்பத்திரம்.

தானமாக தருவது என்றால் தானப்பத்திரம் என்றும் சொத்தை செட்டில்மெண்ட் செய்வது போல எழுதினால் செட்டில்மென்ட் என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆனால் மிக மிக முக்கியமானது என்னவெனில் ‘செட்டில்மென்ட்’. இதை மாற்ற இயலாது. ஒரு முறை எழுதினால் எழுதியதுதான்.

ஆனால் உயில் அப்படி அல்ல. மாற்றி மாற்றி எழுத முடியும். எனவே அவசர கதியில் செட்டில்மென்ட் எழுதுவதற்கு முன் பல முறை யோசித்து முடிவெடுப்பது சாலச் சிறந்தது. இதை உரிய கட்டணம் செலுத்தி சார்-பதிவாளர் அலுவலகத்தில் பதிய வேண்டும்

   தகவல் :- சுரேஷ், வழக்கறிஞர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக