ஞாயிறு, 6 அக்டோபர், 2019

ஆறுகளும்...தமிழ் பெயர்களும்...


ஆற்றுப் பெயர்கள் தமிழ் வழக்குப்படி ...

ஆற்றுப் பெயர்களை நம் விருப்பப்படி எழுதிக்கொண்டுள்ளோம். அவற்றுக்கு முறையான பெயர்கள் இருக்கின்றன. இன்றைய திரிபு எப்படி இருப்பினும் பழைமையான தமிழ்ப் பெயர்களும் இருக்கின்றன. அவற்றை அறிந்துகொள்ள வேண்டும். ஆற்றுப் பெயர்களைத் தமிழ் வழக்குப்படி எழுதுங்கள்.

1. காவிரியும் காவேரியும் ஒன்றுதானே என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஒன்றுதான். ஆனால், காவிரி என்பது தூய தமிழ் வழக்கு. காவேரி அதிலிருந்து மருவியது. வடமொழியில் காவேரி என்றே வழங்குவர். அதனால்தான் ஆங்கிலேயர்கள் தம் வடசொல் அணுக்கத்தின்படி Cauvery என்று எழுதினர். காவிரி என்பதே தமிழ் வழக்கு.

2. ஆந்திரத்தில் உள்ள கிருட்டிணை ஆற்றினைத் தமிழில் வழங்க முடியும். கன்னபெண்ணை, கரும்பெண்ணை என்பனவே கிருஷ்ணா ஆற்றின் தமிழ்ப் பெயர்கள். கிருஷ்ணன் என்பதற்குக் கருமை சார்ந்த பொருளுண்டு. பெண்ணை என்பது ஆற்றைக் குறிக்கும். கருமையான நீர் என்பது பொருள். கருமை என்பதற்கு வளமை என்ற பொருளுமுண்டு. வளமான ஆறு என்றும் கொள்ளலாம். அங்கே கரும்பெண்ணை ஆற்றுக்குத் தெற்கே உள்ள இன்னொரு பேராறு பெண்ணை என்ற பெயராலே வழங்கப்படுகிறது.

3. தாமிரபரணி ஆற்றின் பெயரிலேயே அது வடசொல் என்று உணர முடியும். தண்பொருநை என்ற பெயரே உரிய தமிழ்ச்சொல். தண்மை என்பது நீரின் குளிர்மை. நீர்வளம் (குளிர்மை) மிக்க ஆறு என்று பொருள்.

4. அமராவதி ஆற்றினை ஆன்பொருநை என்று வழங்க வேண்டும். ஆவினங்கள் மந்தை மந்தையாக நீர்குடிக்கவும் மேய்ந்து வாழவும் பயன்பட்ட ஆறு.

5. பெரியார் (Periyar) என்று ஆங்கிலத்திலிருந்து பெற்று வழங்கப்படும் ஆற்றின் தமிழ்ப்பெயர் பேரியாறு. பேரி என்பது பேரிகையைக் குறிக்கும். பேரிகை என்றால் முரசு. முரசுபோல் மலை இடுக்குகளில் கொட்டி முழங்கியவாறு பேரொலி எழுப்பியபடி பாயும் ஆறு என்பதால் பேரியாறு.

6. அரக்கோணத்திற்கு அருகே பாய்ந்து எண்ணூரில் கடல்கலக்கும் ஆற்றினைக் கொசஸ்தலை ஆறு என்கின்றனர். அதன் தூய தமிழ்ப்பெயர் ‘கொற்றலை’. கொற்றுதல் என்றால் கொத்துதல். கல்லுருச்செய்ய உளியால் கொற்றுவதைப்போல அலைகள் ஓசை எழுப்பியபடி பாயும் ஆறு. கொற்று அலை ஆறு. கொற்றலை ஆறு.

7. திருக்காளத்தியில் பாயும் ஆற்றினைச் சுவர்ணமுகி என்பர். சுவர்ணம் என்றால் பொன். அதன் தூய தமிழ்ப்பெயர் பொன்முகலி ஆறு.

8. கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் அடையார் என்று எழுதக்கூடாது. அடையாறு என்றுதான் எழுத வேண்டும்.

9. கபினி ஆறு என்று எழுதுவது பிறமொழி வழக்கு. கப்பினி ஆறு என்றே எழுத வேண்டும்.

10. பவானி ஆறு காவிரியின் மிகப்பெரிய துணையாறு. அந்த ஆற்றின் பெயர் பவானி என்ற வடசொல்லாக இருக்க முடியாது என்று தேடினேன். சங்க இலக்கியத்தில் அவ்வாற்றின் பெயர் ‘வானி’ என்பது. வானி என்ற தமிழ்ப்பெயர் எப்படியோ பவானி ஆகிவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக