வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

தமிழ்நாடு அரசின் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்


Chithirai New year award
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள்
தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழா ஆண்டுதோறும் தைத்திங்கள் 2-ஆம் நாளான திருவள்ளுவர் திருநாளில் நிகழ்த்தப்பெற்று வருகிறது. இவ்விழாவில், தமிழின் பெருமையை நிலைநிறுத்துவதோடு தமிழன்னைக்குப் பெருமை சேர்த்திடும் வகையில் தம் வாழ்நாளெல்லாம் தமிழ்ப்பணியாற்றி வரும் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வண்ணம் பின்வரும் விருதுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன.

1. தமிழ்த்தாய் விருது (2012 முதல்) தமிழ் அமைப்புகளுக்கு வழங்கப்படும் விருது



தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழர்கள், தங்களது பண்பாட்டு வேர்களைக் காப்பதற்காகப் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி மொழி இலக்கியம், கலை ஆகியப் பணிகளை மேற்கொண்டு வரும் சிறந்த அமைப்புக்கு “”””தமிழ்த்தாய் விருது”” வழங்குதல். (விருதுத்தொகை ரூ.5.00 இலட்சம், தகுதியுரை)

2. கபிலர் விருது (2012 முதல்)



பழந்தமிழர், தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும் தமிழுக்கு அணி சேர்க்கும் வகையிலும் மரபுச் செய்யுள் / கவிதைப் படைப்புகளை புனைந்து வழங்கும் தமிழறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

3. உ.வே.சா விருது (2012 முதல்)



கல்வெட்டுகள், அகழாய்வு, ஓலைச்சுவடிகள் அரிய கையெழுத்துப்படிகள், கிடைத்தற்கரிய நூல்கள் முதலியவற்றை அரும்பெரும் முயற்சியால் காணக்கிடைத்து வெளிக்கொணர்ந்தும், தமிழுக்கு வளம் சேர்க்கும் வகையில் பதிப்புப் பணிகளை மேற்கொண்டு வரும் அறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

4. கம்பர் விருது (2013 முதல்)



தமிழ் இலக்கிய உலகில் சிறந்து விளங்கிய கம்பரைப் பற்றித் திறனாய்வு செய்வோர், கம்பர் படைப்புகளை ஆய்வு செய்வோர், கவிபாடும் ஆற்றல் கதை நிகழ்ச்சி பாத்திரப்படைப்பு மற்றும் அவரது புகழ் பரப்பும் வகையில் கவிதை நூல்களை படைப்போர் மற்றும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்து வரும் தமிழறிஞருக்கு வழங்குதல்.
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

5.சொல்லின் செல்வர் விருது (2013 முதல்)



சிறந்த இலக்கியப் பேச்சாளராகவும், தமிழர் நாகரீகம் பண்பாட்டை மக்கள் மனதில் சொற்பொழிவு வழி விதைப்பவராகவும் பிற வகையில் தமிழ்த் தொண்டு செய்வோராகவும் உள்ளவருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

6. உமறுப் புலவர் விருது (2014 முதல்)



இஸ்லாமிய தமிழ் காப்பியங்களில் சிறந்த காப்பியமான சீறாப்புராணத்தை இயற்றிய உமறுப் புலவர் தமிழுக்கு ஆற்றிய அருந்தொண்டை போற்றும் வகையில், தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றிவரும் தமிழறிஞருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

7.ஜி.யு.போப் விருது (2014 முதல்)



அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழி பெயர்ப்பாளருக்கு வழங்குதல்
(விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

8. இளங்கோவடிகள் விருது (2015 முதல்)



இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ அல்லது சிலப்பதிகாரத்தின் புகழ் பரப்பி வருபவருக்கோ வழங்குதல் (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

9. முதலமைச்சர் கணினித் தமிழ் விருது (2013 முதல்)



சிறந்த தமிழ் மென்பொருளுக்கு வழங்கப்படும் விருது (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை) சிறந்த தமிழ் மென்பொருள் தயாரித்த நிறுவனம்/தயாரித்தவருக்கு.

10. அம்மா இலக்கிய விருது (2015 முதல்)



மகளிர் இலக்கியங்களைப் படைப்பதில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தித் தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளர் ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்மா இலக்கிய விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

11. மொழி பெயர்ப்பாளர் விருது (2015 முதல்)



பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்”” என்ற பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தரமான பிறமொழிப் படைப்புகளைச் சிறந்த முறையில் தமிழாக்கம் செய்யும் 10 மொழி பெயர்ப்பாளர்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை, தங்கப்பதக்கம் இல்லை)

12. சிங்காரவேலர் விருது (2018 முதல்)



தமிழில் அறிவியல் கருத்துக்களை நூலாக எழுதுபவர்களிலும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும், சமத்துவ கொள்கைக்காகவும், தொழிலாளர் நலனுக்காகவும் போராடுபவர்களிலும் சிறந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் சிங்காரவேலர் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

13. அயோத்திதாசப்பண்டிதர் விருது (2019 முதல்)



சமத்துவம், பொதுவுடைமை, தமிழியல் ஆகிவற்றில் தனக்கென தனிமுத்திரைப் பதித்த தகைமையாளர் தமிழறிஞர் அயோத்திதாசப் பண்டிதர் பெயரில் அவர்தம் இலட்சிய நோக்கோடு செயன்மையாற்றும் ஒருவருக்கு ஆண்டுதோறும் அயோத்திதாசப் பண்டிதர் விருது வழங்கப்படும்.  (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை,   பொன்னாடை)

14. மறைமலையடிகளார் விருது (2019 முதல்)



தனித் தமிழில் படைப்புகள் அருகிவரும் நிலையில் தனித் தமிழில் படைப்புகளை உருவாக்கும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழறிஞர் ஒருவருக்கு ஆண்டுதோறும் மறைமலையடிகளார் விருது என்ற புதிய விருது வழங்கப்படும். (விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை)

15. சி.பா. ஆதித்தனார் விருது (2020 முதல்)



தமிழ் மொழியில் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் போற்றியும், பிறமொழிக் கலப்பின்றி எழுதியும் வெளியிடப்பட்டுவரும் நாளிதழ், வாரஇதழ் மற்றும் திங்களிதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழைத் தெரிவு செய்து “”””தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்”” அவர்களின் பெயரில் ஆண்டுதோறும் நாளிதழ் விருது, வார இதழ் விருது, திங்களிதழ் விருது என மூன்று விருதுகள் வழங்கப்படும். இவ்விருது ஒவ்வொன்றிற்கும் விருதுத்தொகையாக ரூபாய் 1.00 இலட்சமும், கேடயம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படும்.

16. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது (2020 முதல்)



சமரச நெறிகளால் ஆன்மீகத் தொண்டாற்றும் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

17. காரைக்கால் அம்மையார் விருது (2020 முதல்)



காரைக்கால் அம்மையாரின் படைப்பிலக்கிய நெறிகளில் தமிழ்த் தொண்டாற்றி வரும் மகளிர் ஒருவருக்கு வழங்குதல்.விருதுத் தொகை ரூ.1.00 இலட்சம், தங்கப்பதக்கம், தகுதியுரை, பொன்னாடை வழங்கப்படும்.

18. தமிழ்ச்செம்மல் விருது (2015 முதல்)



தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் வழங்குதல். (விருதுத் தொகை ரூ. 25,000/- மற்றும் தகுதியுரை வழங்கப்படும். மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 32 பேருக்கு வழங்கப்படும்).

நன்றி தமிழ்த்துறை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக