புதன், 6 மே, 2020

தமிழ் மாதங்களையும், மாதங்கள் பற்றிய சொலவடைகளையும் அறிவோம்

தமிழ் மாதங்களையும், மாதங்கள் பற்றிய சொலவடைகளையும் அறிவோம்


நமது முன்னோர்கள், எந்த மாதத்தில் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என அனைவரும் அறியும்  வண்ணம்    சொலவடைகளின் மூலம் தனது சந்ததிகளுக்கு வழிகாட்டியுள்ளனர். அப்படி, அவர்கள் ஒவ்வொரு   தமிழ் மாதத்திற்கும் வழங்கிய சில  சொலவடைகளை, இங்கே காண்போம்.
சித்திரை மாதம்:
"சித்திரை ஐப்பசி சீர் தூக்கும்".
"சித்திரை எள்ளை சிதறி விதைக்கும்". 
"சித்திரை புழுதி பத்தரை மாத்துத் தங்கம்". 
"விட்ட பாம்பும் செத்து போகும் சித்திரை வெயில்". 
"சித்திரையில் பிறந்து சீர்கேடானவனும்  இல்லை; ஐப்பசியில் பிறந்து அதிர்ஷ்டக்காரனும் இல்லை". 
"சித்திரை மாதம் சீருடையோர் கல்யாணம்;வைகாசி மாதம் வரிசையுள்ள கல்யாணம்;  ஆனிமாசம் மாதம் அரை பொருக்கி கல்யாணம்". 
"சித்திரை பெய்தால் பொன்னேர் கட்டலாம்".

வைகாசி மாதம்:
"வைகாசி மாசம் ஆத்துல தண்ணி". 
"வைகாசி மாசம் வறுத்துக்  குத்தணும்". 
"வைகாசி மாசம் வாய் திறந்த கோடை". 
"வைகாசி மழை வாழை பெருகும்".

ஆனி மாதம்:
"ஆனியில் அடி  வைத்தாலும் கூனியில் குடிபுகாதே". 
"ஆனி ஆறாந் தேதி இடி இடித்தால், ஆறு மாதத்திற்கு மழை இல்லை". 
"ஆனி  மாதம் கொரடு  போட்டால், அடுத்த மாதம் மலை இல்லை". 
"ஆனி குமுறினால், அடுத்த அறுபது நாளைக்கு மழை  இல்லை". 
"ஆனி அடைச்சாரல்; ஆவணி முச்சாரல்".

ஆடி மாதம்:
"ஆடிக்கு அழைக்காத மாமியாரை தேடி பிடித்து அடி".
"ஆடி பிறந்தால் ஆசிரியர். தையில் பிறந்தால் தச்சப்பயல்".
"ஆடி பிறந்தால் வெல்லப் பானையை திற; தை பிறந்தால் உப்பு பானையை திற".
"ஆடியில் ஆனையொத்த கடா புரட்டாசியில் பூனை போல ஆகும்".
"ஆடிக் காத்துல ஆலே அசையும் போது, மேயும் கழுதைக்கு என்ன கதி?". 

ஆவணி மாதம்:
"ஆடி முதல் பத்து , ஆவணி நடு பத்து , புரட்டாசி கடை பத்து , ஐப்பசி முழுதும் நடலாகாது". 
"ஆடி விதைப்பு ஆவணி முளைப்பு". 
"ஆனி அரை ஆறு , ஆவணி முழு ஆறு".

புரட்டாசி மாதம்:
"புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும்; ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்". 
"புரட்டாசியில் பொன்  உருகக் காயும; ஐப்பசியில் மண் உருகப் பெய்யும்". 

ஐப்பசி  மாதம்:
"ஐப்பசி மாதம் அடை மழை.கார்த்திகை மாதம் கன மழை".  
"ஐப்பசி நெல் விதத்தால், அவலுக்கும் ஆகாது". 
"ஐப்பசி மருதாணி அரக்கா புடிக்குமாம்". 

கார்த்திகை மாதம்:
"கார்த்திகைக்கு பின் மழையும் இல்லை; கர்ணனுக்கு பின் கொடையும் இல்லை". 
"கார்த்திகை மாசம், கல்லுக்குள் இருக்கும் நெல்லும் கதிராகும்".
"கார்த்திகை மாசம், கால் கொள்ளு விதைத்தால் மேல் கொள்ளு  முதலாகாது".  
"கார்த்திகை மாத பனி பாக்காம கட்டி ஓட்டு ஏர் மாட்டை". 

மார்கழி மாதம்:
"மார்கழி பிறந்தால் மழையும் இல்லை; பாரதம் முடிந்தால் படையும் இல்லை". 
"மார்கழி மழை மண்ணுக்கும் உதவாது". 
"மார்கழியில் மழை பெய்தால் மழை மேலே நெல் விளையும்".
"மார்கழி வெற்றிலையை மாடு கூட தின்னாது". 

தை மாதம்:
"தையில் வளராத புல்லும் இல்லை; மாசியில் முளைக்காத மரமும் இல்லை". 
"தையிலே நெல் விதைத்தால்   தவிட்டுக்கும் ஆகாது".  
"தை பிறை தடவிப் பிடி ; ஆடி பிறை தேடி பிடி". 
"தை பனி தரையை துளைக்கும் ; மாசி பனி மச்சை துளைக்கும்".

மாசி மாதம்:
"மாசி மின்னலில் மரம் தழைக்கும்". 
"மாசி நிலவும் மதியாதார் முற்றமும் வேசி உறவும் வியாபாரி நேசமும் நில்லாது".  
"மாசி பிறையை மறக்காமல் பாரு". 

பங்குனி மாதம்:
"பங்குனி மாதம் பத்துக்கும் நஷ்டம்". 
"பங்குனி மாதம் பந்தலை தேடு".
"பங்குனி என்று பருப்பதும் இல்லை; சித்திரை என்று சிறுப்பதும்  இல்லை"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக