திப்பு சுல்தானைப் பற்றி நாம் அறியாத விஷயங்கள்!
1. திப்பு சுல்தான் ஆண்ட காலகட்டத்தில் பிரிட்டிஷ்காரர்களை மிகவும் நடுங்கவைத்த இந்திய அரசர். அவர் இறந்தபோது பிரிட்டனில் ஆனந்தக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்தக் கொண்டாட்டத்துக்காக நூலாசிரியர்கள், நாடகாசிரியர்கள், ஓவியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட்டனர். திப்பு சுல்தானின் தலைநகரம் ஸ்ரீரங்கப்பட்டினம் முற்றுகையிடப்பட்டு கொள்ளையிடப்பட்ட விஷயம், வில்கி கோலினின் தி மூன்ஸ்டோன் என்ற பிரபல நாவலின் தொடக்கக் காட்சியாக அமைந்தது.
2. பிரிட்டிஷாரின் வரவு இந்தியாவுக்கு எவ்வளவு ஆபத்தை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொண்ட ஒரே இந்திய ஆட்சியாளர் இவர்தான். இந்தியாவிலிருந்து அவர்களை விரட்டியடிப்பதற்காக நான்கு பெரும் யுத்தங்களை நடத்தினார். இந்த வகையில், இந்தியத் துணைக்கண்டத்தின் முதல் சுதந்திர போராட்ட வீரராக இவர் குறிப்பிடப்படலாம்.
3. திப்பு சுல்தான் பிரிட்டிஷாரை இந்தியாவை விட்டு வெளியேற்றத் தன்னுடன் கூட்டு சேருமாறு ஓட்ட்டோமான் மற்றும் பிரான்ஸ் ஆட்சியாளர்களுக்கு செய்தி அனுப்பினார்.
4. திப்பு ஐரோப்பியர்களின் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் வசீகரிக்கப்பட்டார். பிரான்ஸிலிருந்து துப்பாக்கித் தயாரிப்பாளர்கள், பொறியாளர்கள், கடிகாரம் தயாரிப்பாளர்கள் மற்றும் பிற நிபுணர்களை மைசூருக்கு வரவழைத்தார். பிறகு சொந்தமாக, “மேக் இன் மைசூர்” என்று குறிப்பிடப்பட்ட, வெண்கல பீரங்கிகள், வெடிபொருள்கள் மற்றும் குழல்களைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.
5. திப்பு தனது அற்புதமான சக்தியின் உணர்வை வெளிப்படுத்த புலி பிம்பத்தை விரிவாக பயன்படுத்தினார். புலிச் சின்னங்கள் அவரது தங்க சிம்மாசனம், ஆடைகள், நாணயங்கள், வாள்கள் மற்றும் இவரது சிப்பாய்களின் சீருடைகளை அலங்கரித்தன. இவர் இந்து குடிமக்கள், ராஜாக்களோடு நீண்ட காலம் தொடர்புடைய சூரிய சின்னத்தைப் பயன்படுத்தினார்.
6. திப்பு, ‘க்வாப் நாமா’ (கனவுகளின் நூல்) என்ற ஒரு நூலை எழுதினார். இதில் தனது கனவுகளைப் பற்றிக் கூறியிருந்தார். தான் பங்கேற்கும் போர்களின் விளைவுகள் பற்றித் தனது கனவுகளில் அறிகுறிகளையும் எச்சரிக்கைக் குறிப்புகளையும் பார்த்ததாக இதில் எழுதியுள்ளார்.
7. இவர் வெளியிலிருந்து வந்த ஆக்கிரமிப்பாளரல்லர். மண்ணின் மைந்தர். தென்னிந்தியாவில் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்தவர்.
8. இவருடைய முதலமைச்சர் பூர்ணியா ஒரு இந்து. இவரது அவையில் இடம்பெற்றிருந்த பல முக்கிய அதிகாரிகளும் இந்துக்களே.
9. திப்பு பல இந்து கோயில்களுக்குத் தாராளமாக நிதி உதவி அளித்த புரவலராகத் திகழ்ந்தார். இதில் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் இவரது பிரதான அரண்மணைக்கு அருகில் இருந்த ஸ்ரீ ரங்கநாதா கோயில், ஸ்ரீநெகரி மடம் ஆகியவை அடங்கும். இதன் ஸ்வாமிஜியை மதித்துப் போற்றிய இவர், அவரை ஜகத்குரு என்று அழைத்தார்.
திப்பு சுல்தானும் பிரிட்டிஷாரும்
முப்பதாண்டுக் காலமாக, முதலில் இவரது தந்தை ஹைதர் அலி பின்னர் திப்பு சுல்தான் ஆகிய இருவருமே பிரிட்டிஷ் பொதுமக்களின் பிரக்ஞையில் முதலிடம் பெற்றிருந்தனர். பிரிட்டிஷ் படைகள்மீது இவர்கள் நடத்திய பயங்கரத் தாக்குதல்கள் பற்றிய கதைகள், மெட்ராஸ் போன்ற வர்த்தக செட்டில்மென்டுகளுக்கான அச்சுறுத்தல்கள் ஆகியவை பிரிட்டனின் அன்றைய நாளேடுகளை அலங்கரித்தன.
பல ஆண்டுகளாக நான்கு ஆங்கிலேயர் - மைசூர் யுத்தங்கள் நடைபெற்ற சமயங்களில் கொடுங்கோலர்கள் என்று அழைக்கப்பட்டவர்களால் அரங்கேற்றப்பட்ட சமீபத்திய ஆக்ரோஷமான செய்திகளுக்காக ஆவலுடன் காத்திருந்தனர். போர்க்களத்தில் பிடிபட்ட பிரிட்டிஷ் கைதிகள் திரும்பி வந்த சம்பவங்கள் ஆங்கிலேயர்களால் ஏராளமான நூல்கள் படைப்பதற்குக் களம் அமைத்தன. அவற்றில் மைசூரில் பல ஆண்டு காலம் சிறைபட்டிருந்த அனுபவங்கள், அவர்கள் அங்கு அனுபவித்த கஷ்டங்களும் சித்ரவதைகளையும் விவரிக்கப்பட்டிருந்தன.
ஆங்கிலேயர்கள் தங்களுக்குச் சாதகமான வகையில் முன்வைத்த இப்படிப்பட்ட சித்திரிப்புகளைப் சம்பவங்களைப் பற்றி அந்நாட்டு வாசகர்கள் அந்த அளவு ஆர்வம் கொள்ளவில்லை. எனவே, 1799இல் ஜெனரல் ஹாரிஸ் படைகள் திப்பு இறந்தபோது பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் வில்லனாக அல்லாமல் மிகவும் பிரபலமான இந்தியராகவே திப்பு சுல்தான் திகழ்ந்தார்.
திப்பு சுல்தான் இறந்த செய்தி பிரிட்டனை அடைந்தபோது, எதிர்பார்த்தபடியே நாட்டில் பல இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு ஆக்கபூர்வமான படைப்புகள் எழுந்தன. எழுத்தாளர்கள் மற்றும் நாடகாசிரியர்கள் மட்டும் அல்லாமல், கலைஞர்களும் தங்கள் பங்குக்கு இந்த வெற்றியை பெருமைப்படுத்தும் விதமாக கேன்வாஸ்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டன.
வெலிங்டனின் ட்யூக்காகப் பின்னாளில் பதவி வகித்தவரும், வாட்டர் லூ போரில் நெப்போலியனைத் தோற்கடித்தவராக உலகம் முழுவதும் பிரபலமடைந்தவருமான ஆர்தர் வெல்லஸ்லி ஸ்ரீரங்கப்பட்டினத்துக்குப் பொறுப்பேற்றார். அஸாயே யுத்தத்தில் மராட்டாவைக் கைப்பற்றினார். இந்தியா வெல்லஸ்லி தன்னை நிரூபிக்கும் களமாக மாறியது.
19ஆம் நூற்றாண்டில், திப்பு சுல்தானின் புகழ் பொதுமக்களிடையே மங்கி வந்தது. 1868 இறுதிகளில் ஸ்ரீரங்கப்பட்டித்தின் முற்றுகை மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெற்ற கொள்ளைச் சம்பவங்கள் வில்கி கோலின்சின் வெற்றிகரமாக விற்பனையான மூன்ஸ்டோன் நாவலின் ஆரம்பமாக அமைந்தன.
தனது பகைவர்களை அச்சுறுத்துவதுதான் திப்புவின் இலக்காக இருந்தது, அதில் அவர் வெற்றியும் பெற்றார். இதைத் தனது செயல்கள் மூலமாக மட்டுமல்லாமல், இமேஜ்கள் மற்றும் குறியீடுகளைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவது மூலமாகவும் இதை அவர் செய்தார். இதை அவர் உணரவில்லை என்றாலும், இவர் புலி உருவத்தைத் தனது முத்திரையாகப் பயன்படுத்தியது, சிங்கத்தைத் தங்கள் சின்னமாக வைத்திருக்கும் பிரிட்டாஷாரிடம் வலுவான தாக்கங்களை ஏற்படுத்தின.
ஸ்ரீரங்கப்பட்டின முற்றுகையில் பங்கேற்றவர்களுக்கு மல்லாந்து படுத்திருக்கும் புலியை சிங்கம் மூர்க்கமாகத் தாக்கும் உருவம் பொறிக்கப்பட்ட பதக்கம் வழங்கப்பட்டது தற்செயலானது அல்ல. இவரது மறைவின்போது பிரிட்டனில் நடைபெற்ற கொண்டாட்டக் களிப்புகள், கிழக்கு இந்திய நிறுவனத்தின் விரிவாக்கச் செயல்பாடுகள் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் அதன் குடிமக்களின் சுதந்திரத்துக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தல் என்ற இவரது மனதில் இருந்த கணிப்பு சரியானது என்பதை உறுதிசெய்தன. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆசைகளுக்கு எதிராகக் கடைசி அரணாகச் செயல்பட்டவர் இவர்தான்.
திப்புவும் அவரது தந்தையும் தங்கள் சமகால ஆட்சியாளர்களிலிருந்து மாறுபட்டிருந்தனர். திப்புவின் மறைவுக்குப் பிறகு பிரிட்டிஷார் தங்கள் அதிகார எல்லையை இந்தியாவில் மிக ஆழமாக வேரூன்ற முடிந்தது.
டைகர்: தி லைஃப் ஆஃப் திப்பு சுல்தான் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
தமிழில்: ராஜலட்சுமி சிவலிங்கம்