திங்கள், 5 ஆகஸ்ட், 2019

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?
   
சுதந்திரத்திற்கு முன் பல்வேறு மன்னர்களின் ஆளுமைக்கு கீழ் இருந்துவந்த ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இந்தியா சுதந்திரம் பெற்ற 1947 ஆம் ஆண்டு, இந்தியா உடன் இணைப்பதா, பாகிஸ்தானுடன் இணைப்பதா அல்லது தனி நாடாக செயல்படுவதா என்ற குழப்பம் நிலவியது. அப்போது, காஷ்மீரின் மன்னராக இருந்த ஹரி சிங், இந்தியாவுடன் காஷ்மீரை இணைத்து, ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். அப்போதைய நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர, சிறப்பு அந்தஸ்து அளிக்க அரசியல் சட்டப்பிரிவு 370 ஐ உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால் அப்போதைய மத்திய சட்டத்துறை அமைச்சர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 வது பிரிவை வடிவமைக்க மறுத்து விட்டார்.  இதையடுத்து இலாக இல்லாத அமைச்சரான கோபாலஸ்வாமி அய்யங்கார் என்பவரால் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டது.
சிறப்பு அந்தஸ்து என்றால் என்ன?

இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் ராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி அம்மாநிலத்தில் செல்லாது.

*  இந்திய மாநிலங்களில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமே தனிக்கொடியும், தனி அரசியல் சாசனமும் உண்டு. இந்தியாவின் பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் இந்த மாநிலத்தில் நிலம் முதலான அசையா சொத்து வாங்க முடியாது.

* ஜம்மு காஷ்மீர் மாநில பெண்கள் மற்ற மாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால் அப்பெண்கள் நிலம் வாங்கும் உரிமையை இழந்துவிடுவார்கள், ஆண்கள் மற்ற மாநில பெண்களை மணந்தாலும் அவர்கள் நிலம் வாங்க முடியும்.

* ஜம்மு காஷ்மீர்  மாநில சட்டமன்றத்தின் பதவி காலம் 6 ஆண்டுகள் ஆகும், மற்ற எந்த இந்திய மாநிலங்களின் சட்டமன்ற காலம் 5 ஆண்டுகளாகும்.
 ஜனாதிபதியால் தற்காலிகமாக அங்கீகரிக்கப்படுகிற நபரே ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக மத்திய அமைச்சர்களின் அறிவுரைப்படி தற்காலிகமாக செயல்பட முடியும்”
* அரசியல் சாசனத்தின் 370 வது பிரிவின்படி மாநிலத்தின் எல்லையை இந்திய நாடாளுமன்றத்தால் கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியாது என்பது உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக