விலங்கினங்கள் பற்றி...
சந்தரசேகரன் முதுகலை தமிழாசிரியர் . விலங்கினங்களின் பேச்சு
நமது பூமியில் உயிர் வாழ்க்கை துவங்கியதும், எங்குமே அமைதியே நிலவிருந்தது. இயற்கையால் ஏற்பட்ட இடி முழக்கங்கள், கடல்களில் பெரிய அலைகள் பாறைகள் மீதும், கரைமீதும் வந்து மோதிச் செல்லும்போது ஏற்பட்ட ஓசை மட்டுமே கேட்டன. விலங்கினங்கள் தோன்றிய பிறகு அவை அங்கும், இங்கும் உணவிற்காக அலைந்து திரிந்தன. ஒன்றையொன்று கொன்று தின்னத்துவங்கியதும், அவைகளிடம் இருந்து முதலில் அபாய ஓசை கேட்கத் துவங்கின. இதுவே செவிப்பறைப் பகுப்பியும், ஒலியும் வளர்ச்சியடைய தூண்டியது. மிருகங்களின் மூளை மனித மூளையளவு வளர்ச்சி அடையவில்லை. இருப்பினும் அவைகளுக்கும் உணர்ச்சி உண்டு. ஆனால் இதை வெளிப்படுத்த மொழியோ, சொற்களோ கிடையாது. ஆகவே இவைகள் ஒலியையும், சைகைகளையும் பயன்படுத்தி, அன்பு, பாசம், கோபம், வெறுப்பு ஆகிய உணர்ச்சிகளையும், பசி, தாகம், தற்காப்பு போன்றவற்றை வெளியிடுகின்றன. எந்த ஒலியையும் எழுப்பாத நேரத்தில் கூட அவற்றுக்கிடையே தொடர்ந்து கருத்து பரிமாற்றம் நிகழ்கிறது.
ஒலிப்பகுப்பிதான் முதலில் தோன்றியது. ஏனெனில் பகைவர்களிடமும் இரைகளிடமும் இருந்து வெளியிடப்படும் ஒலியைக் கேட்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.
விலங்கினங்கள் காதுகளைப் பெற்றதும் தங்களது இனத்தவரிடமிருந்து மிக முக்கிய தகவல்களை எளிதில் பெற முடிந்தது. மேலும் ஒன்றுடன் ஒன்று தகவல்களை பரிமாறிக்கொள்ள ஒலிகளை உருவாக்கும் திறனை பெற்றன. அதேசமயத்தில் ஒரு விலங்கு ஒலிகளை போதிய அளவு துல்லியமாக உருவாக்க வேண்டும் என்றால் அது ஒலியை நன்றாக கேட்கும் திறனையும் பெற்றிருக்க வேண்டும்.
ஒலிப்பகுப்பிகள் தோன்றாத கீழ்மட்ட உயிரினங்கள்கூட தங்களது தகவலைப் பரிமாறிக்கொள்கின்றன. அதற்கு அவை வேதி மூலக்கூறுகளைப் பயன்படுத்துகின்றன. பாக்டீரியா, அமீபா, பூஞ்சைகள், பாசி இனங்கள் போன்றவை செய்திகளை சிறு வேதி மூலக்கூறுகளாக, தாம் வாழும் நீர் நிலைகளில் கரைத்து வெளியிடுகின்றன. தமது உடல் முழுபரப்பிலும் பிற உயிரிகளிடம் இருந்து வரும் செய்தி மூலக்கூறுகளை பெற்று உணர்கின்றன.
சமுத்திரத்திலிருந்து தான் உயிரினங்கள் நிலத்திற்கு வந்தன. அதன் பிறகுதான் காற்றில் கரைந்த மூலக்கூறுகளை உணர மூக்கு என்கிற உறுப்பைப் பயன்படுத்தின. செய்திகளை காற்றில் உலவவிட்டு, அதனை முகர்ந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டன. அதன்மூலம் அவை ஒன்றுடன் ஒன்று கருத்துகளை பரிமாறிக்கொண்டன.
விலங்கினங்களைப் பொருத்தவரை ஒலியை உணரும் நினைவுகளை விட மோப்ப சக்தியே அதிகம். விலங்குகளின் உலகம் முழுக்க முழுக்க வாசனையின் மூலம்தான் நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக நண்பன், பகைவன், தன் இனம், வேற்றினம், தம்மக்கள், எச்சரிக்கை, அபயம் போன்றவைகளை வெளியிடுகின்றன. மேலும் அதனை நன்கு அறிந்தும் தெரிந்தும் கொள்கின்றன ஆகவே இவைகளுக்கு மனிதனைவிட அபரிமிதமான மோப்பச்சக்திகள் இருக்கின்றன.
வாசனைப் பொருட்கள் சின்ன மூலக்கூறுகளான கார்பன் அணுக்களைக் கொண்டது. இவற்றின் முக்கிய ஆக்கப்பொருள் 14 அல்லது 16 கார்பன்கள் கொண்டவையாகும்.
பெரோமோன்கள் என்பது ஒரு உயிர் வேதியியல் பொருள் ஆகும். பல ஆண், பெண் உயிரினங்களில் ஆண், பெண் உறவை நிறுவுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனைத் தவிர மற்ற விலங்குகள் அதிக வீரியத்தன்மை கொண்டிருக்கிறது. மனிதன் தன் பரிணாம வளர்ச்சியின்போது பெரோமோனை இழந்துவிட்டான்.
சங்கேத மூலக்கூறுகளை பெரோமோன்கள் (Pheromones) என்று அழைக்கிறார்கள். பட்டுப்பூச்சி, வண்டினம், கொசு, ஈக்கள், தத்துப்பூச்சி போன்றவைகளைத் தத்தம் இனத்தோடு பிணைத்து வைப்பவை இந்த பெரோமோன்கள் ஆகும். பெரோமோன்கள் மிகுந்த சக்தி மிக்கவை. ஒரு கிராம் எடுத்து டிரில்லியன் லிட்டர் நீரில் கரைத்தாலும் அதன் செய்தி அளிக்கும் திறன் குறைவதில்லை. பெரோமோன்கள் எப்போதும் ஆம் அல்லது இல்லை என்ற ஒரே பொருளைத் தரும்.
பெரோமோன்கள் உடலின் மேற்பரப்பு அல்லது முகரும் உறுப்பின் மீதுபட்ட உடனேயே வேலை செய்கிறது. பெரோமோன்கள் விலங்குகளில் உடலில் பிரத்தியோகமான சுரப்பிகளிலிருந்து சுரக்கப்படுகின்றன. உடனே ஆவியாகிக் காற்றில் அல்லது நீரில் கலந்து விடும் இயல்பு கொண்டவை. பெரோமோன்கள் வாசனை தரக்கூடியதாகவோ, செய்தி உடையதாகவோ இருப்பதில்லை. காற்றிலுள்ள ஆக்ஸிஜன், ஓசோன் உடன் சேர்ந்த பின்னரே அவ்வாறு செயல்படுகின்றன. சில உடல்மீது இருக்கும் பாக்டீரியாக்களினால் மாற்றம் செய்யப்பட்ட பிறகே செய்தி உடையதாக ஆகின்றன.
ஒவ்வொரு உயிரினமும் தம் உடலிலிருந்து தனித்தனி வாசனைகளைக் காற்றில் கலக்கிறது. வண்ணத்துப்பூச்சி தன் வாசனையால் பல மைல்களுக்கப்பாலுள்ள தன் இணையைக் கவரும். வண்ணத்துப்பூச்சிகளும், தேனீக்களும் தங்களின் உடலில் சுரக்கும் வேதிப்பொருளைப் பயன்படுத்தி தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன.
ஓநாய், நரி போன்ற விலங்குகளைப் பிடித்து வைக்கப்பயன்பட்ட கூண்டினுள் மற்ற விலங்குகள் செல்ல மறுக்கும். காரணம் கூண்டுக்குள் ஆபத்து என்கிற வாடை வீசும். ஆபத்து மூலக்கூறுகள் அதிகமாக கொறி விலங்குகள், மான்கள், எலி முதலியன கொண்டுள்ளது, நாய்களில் சிறுநீரில் கலந்துள்ள மூலக்கூறுகள் ‘ஜாக்கிரதை’ என் எல்லைக்குள் இருக்கிறாய் என்கிறது.
எறும்புகளும் பெரோமோன் போன்ற மூலக்கூறுகளை சுரக்கின்றன. எறும்புகள் வரிசையாக செல்வதை பார்த்திருப்போம், அது ஆச்சரியத்தைக்கூட நமக்கு ஏற்படுத்தும் எறும்புகள் இப்படி வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக செல்வதற்குக் காரணமாக இருப்பது பெரோமோன்களே. பெரோமோன்களை தேய்த்துவிட்ட கோட்டிலேயே அனைத்து எறும்புகளும் வரிசையாகச் செல்லும். ஒரு கூட்டில் உள்ள எறும்புகளை அறிந்துகொள்ள பெரோமோன்கள் உண்டு. சரியான வாசனை இல்லாத எறும்பை தனது கூட்டில் சேர்த்துக்கொள்வதில்லை.
வாசனையைக் கண்டறியும் இந்த அறிவு உணவை கண்டுபிடிப்பதற்கும் பயன்படுத்துகிறது. ஒரு எறும்பு உணவைக் கண்டுபிடித்துவிட்டால் அது தனது கூட்டிற்குத் திரும்பி வரும்போது தனது வாசனையை கசியவிட்டவாறே வரும். இது பெரோமோன் ஆகும். எறும்புகளின் வயிற்றில் பெரோமோன்கள் சுரக்கின்றன. இதுதான் மற்ற எறும்புகளுக்கு வழிகாட்டியாக உள்ளது.
விலங்குகளில் எத்தனை இனம் இருக்கிறதோ அத்தனை விதமான ஒலி இருக்கிறது. வருகைப்பதிவுக்கு ஒரு ஒலி, ஆபத்தை உணர்த்த ஒருவித ஒலி, கூடு கட்ட இடம் கிடைத்துவிட்டது என்று கூறும் ஒலி, தன் ஜோடியை அழைக்க எழுப்பும் ஒலி என்று பலவிதமான சைகைகளைப் பறவைகள் செய்கின்றன. இங்கிருந்து ஓடிவிடு கூடுகட்ட உதவி செய்யேன் என்பன போன்ற விதவிதமான வேண்டுகோள்களும் அதிகாரங்களும் இதில் அடங்கும்.
ஜந்துகளுக்கு ஒலி உறுப்புகள் கிடையாது. சில வாயினால் ஒலி எழுப்புவதில்லை. குளவி, தேனீ போன்றவை தம் சிறகுகளை அதிக வேகமாக அசைப்பதன் மூலம் ரீங்கார ஒலி எழுப்புகின்றன. நண்டுகள் தம் பெரிய கொடுக்குகளைப் பாறையில் தட்டித்தட்டி ஒலி எழுப்புகின்றன. எறும்புகள்கூடத் தங்களால் இயன்ற அளவு பின்னங்கால்களைத் தரையில் தட்டி ஒலி எழுப்புகின்றன. வெட்டுக்கிளி தனது பாதத்தை இறுக்கமான சிறகுகளின்மீது உராய்வதால், ஒலியை உண்டாக்குகின்றது. மீன்கள் தங்கள் கழுத்துப்பட்டைகளை ஒருங்கே தேய்த்து ஒலி எழுப்புகின்றன.
பாம்புகளில் சில தனது வாலை வேகமாக தரையில் அடிப்பதன் மூலமும் வேகமாக மூச்சு விடுவதன் மூலமும் ஓசை செய்கின்றன. பறக்காத பறவைகள் வாய் தவிர்த்த மற்ற உறுப்புகளினால் ஓசை எழுப்ப வல்லவை. இவை தங்களது கால்கள், இறகுகள், அலகுகள் ஆகியவற்றின் அசைவினால் ஒலி எழுப்புகின்றன. மரங்கொத்தி பறவை தனது அலகினால் மரப்பட்டையை தட்டி தனது உணர்ச்சிகளை வெளியிடுகின்றது. ஹட்சன் ஆந்தையின் சிறப்பான ஒலி, அலகைப் பலமாக அடிப்பதன் மூலம் உண்டாக்குகின்றது.
பறவைகளும், பாலூட்டிகளும்தான் மிகச்சிறந்த ஒலி சாதனங்களை கொண்டுள்ளன. பல்வேறு இனங்களின் குரல்கள் பெரிதும் வேறுபடுகின்றது. பறவைகளும், விலங்கினங்களும் தங்களது மொழியின் எல்லா சொற்களையும் பரம்பரையாகவும், பாரம்பரியமாகவும் பெறுகின்றன. மனிதக் குழந்தைகளைப் போன்று அவற்றைக் கற்றுக்கொள்வதில்லை.
தாகத்துடன் இருக்கும் நாய்க்கு ஏப்பமிடத் தெரியும். பசியுடன் இருக்கும்போது பலமாகவும் அடிக்கடி குரைக்கவும் முடியும். வெளியே செல்லும் நேரம் வந்தவுடன் சிணுங்கவும் நாய்க்குத் தெரியும். மனிதனைப் போன்ற குரல்நாண்களை கிளிகள் பெற்றிருக்கின்றன. கிளிக்கு எந்த வார்த்தையையும், எந்த மொழியிலும் கற்றுத்தரலாம். சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பயன்படுத்திக்கொள்ள கிளிக்கு கற்றுத்தர முடியும்.
கோழிகளை நாம் உற்றுக் கவனித்தால் அவை தனது குஞ்சுகளை அழைப்பதற்கு ஒருவாறு ஒலி எழுப்பும். உணவு கிடைத்துவிட்டால் வேறுமாதிரி ஒலி எழுப்பும். பருந்துகள் குஞ்சுகளை தூக்கிக் செல்லும்போது அபாயக்குரல் எழுப்பி தனது இறக்கைக்குள் மறைத்துக்கொள்ளும். இப்படி டால்பின் 32 வெவ்வேறு விதமான ஒலிகளை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு இனத்திற்கு என சைகைகளின் சுயமான பட்டியல் உண்டு.
மனிதனுக்கு மாநிலத்திற்கு மாநிலம், நாட்டிற்கு நாடு மொழி மாறுபடுகிறது. அதேபோலவே மற்ற உயிரினங்களுக்கும் மொழிவாரி பகுதி உள்ளன என்பது ஆச்சரியமான தகவல்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக