வியாழன், 8 மார்ச், 2018

தேசிய வழிகாட்டி சேவையை பற்றி நீங்கள் அறிவீர்களா?


தேசிய வழிகாட்டி சேவையை பற்றி நீங்கள் அறிவீர்களா?

👉 பட்டப்படிப்பு முடித்தவுடன் பெரும்பாலானோரின் முதல் வேலை பணி தேடுவதே ஆகும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வது, நாள்தோறும் வேலை வாய்ப்பு குறித்த விளம்பரங்களை தேடுவது போன்றவை பட்டதாரிகளின் அன்றாட பணியாக மாறிவிடுகிறது.

👉 நாட்டில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் படித்து முடித்து பட்டதாரிகளாக வெளியே வருகின்றனர். அவர்களுள் 80 சதவீதம் பேர் வேலை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். நாடு முழுவதும் ஆண்டுக்கு லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளித்தாலும், அனைவருக்கும் வேலை கிடைக்கிறதா என்றால், இல்லை என்பதுதான் உண்மை.

👉 நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டத்தை குறைப்பதற்காக மத்திய அரசு தேசிய வேலைவாய்ப்பு வழிகாட்டி சேவை எனும் பிரிவை ஏற்படுத்தி உள்ளது. அதற்காக www.ncs.gov.in என்ற இணையதளத்தையும் அறிமுகப்படுத்தி உள்ளது. படிப்பை முடித்தவர்கள் இந்த இணையதள முகவரி மூலம் தங்களுக்கென தனி கணக்கைத் தொடங்கி அதில் தங்களது படிப்பு விவரங்களையும், வேலை விபரத்தையும் பதிவு செய்ய வேண்டும். அதன்பின் வேலைவாய்ப்புக் குறித்து தகவல்கள் அவரவர் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் கிடைக்கும். இதேபோன்று வேலை தரும் தனியார் நிறுவனங்களும் இணையத்தைப் பயன்படுத்தி தங்களுக்கு ஏற்ற தகுதி வாய்ந்த நபரைத் தேர்வு செய்துகொள்ளலாம்.

👉 பட்டதாரிகள் மட்டுமின்றி 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களும் தங்களுடைய கல்வித் தகுதியை இந்த இணையதளத்தில் பதிவு செய்யலாம். தாங்கள் என்ன மாதிரியான வேலையை, எந்தத் துறைகளில் தேடுகிறோம் என்பதை தெரிவித்தால் தொடர்புடைய அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்புகளை விண்ணப்பதாரரின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் வழியாக தகவலாக தருகிறார்கள்.

👉 வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பணி தற்போது மாறி, தேசிய வேலை வழிகாட்டி பணி என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் செயல்பட உள்ளது. தமிழகத்தில் வேலூர், கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாதிரி மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

👉 இதேபோன்று வெளிநாடு செல்வோரும் இந்த இணையத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அயல்நாட்டுப் பணிக்கு குறைந்த செலவில் பதிவு செய்து, நம்பகத் தன்மையுடன் கூடிய வேலை வாய்ப்பையும் பெறலாம். இது தவிர உள்ள ர் சேவை, பணித்திறன் பயிற்சிகள், ஆலோசனைகள் உள்ளிட்டவற்றையும் பெறலாம். இந்த இணையத்தில் பதிவு செய்ய ஆதார் அட்டை, படிப்புச் சான்றிதழ் ஆகியவைக் கொண்டு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம்.

👉 இந்த சேவை தொடர்பான விவரங்களை பெற 18004251514 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் தொடர்புகொண்டு கூடுதல் விவரம் பெறலாம். ஆங்கிலம், இந்தி மொழிகளுடன் பிராந்திய மொழிகளிலும் உரிய விளக்கம் தருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக