பிடியாணை (Warrant) பற்றிய விளக்கம்
குற்றம் செய்த ஒருவரை அல்லது குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படுகின்ற ஒருவரை எங்கு பார்த்தாலும் கைது செய்து தன் முன்னால் ஆஜர் படுத்துவதற்கு காவல்துறைக்கு நீதிமன்றம் இடுகின்ற ஆணை பிடியாணை (Warrant) ஆகும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-70
ஒரு பிடியாணை என்பது எழுத்து வடிவத்தில் எழுதப்பட்டு, நீதிமன்றத்தில் தலைமைப் பொறுப்பு வகிக்கின்ற அலுவலரால் கையெழுத்து போடப்பட்டு, அந்த நீதிமன்றத்தின் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும். இந்த பிடியாணை அதனை பிறப்பித்த நீதிமன்றத்தால் ரத்து செய்யப்படுகின்ற வரையிலோ அல்லது உரிய காவல்துறை அதிகாரியால் நிறைவேற்றப்படுகின்ற வரையிலோ அமுலில் இருக்கும்.
பிடியாணைகள் ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை, ஜாமீனில் விடமுடியாத பிடியாணை என்று இரண்டு வகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை (Cr.P.C:71 - Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால் அவரிடமிருந்து தக்க பிணையத்தை (Surity)பெற்றுக்கொண்டு அவரை காவல்துறை பாதுகாப்பில் இருந்து விடுவிக்கலாம் என்று அந்தப் பிடியாணையில் குறிப்பிடப்பட்டிருந்தால் அது ஜாமீனில் விடக்கூடிய பிடியாணை ஆகும்.
ஜாமீனில் விட முடியாத பிடியாணை (Non-Bailable Warrant)
ஒருவர் பிடியாணையின் மூலம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டால், அவரை பிணையில் விடுவிக்க அந்த பிடியாணையில் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்றால் அது ஜாமீனில் விடமுடியாத பிடியாணை ஆகும். இருந்த போதிலும், கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் சமயத்தில், அவருக்கு அந்த நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜாமீன் வழங்கலாம்.
வாரண்ட் இருக்கா?
சில திரைப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். காவல்துறையினர் யாராவது ஒருவரை கைது செய்ய முற்படும் சமயத்தில், அவர் அவர்களிடம் “வாரண்ட் இருக்கா?” என்று கேட்பார். காவல்துறை அதிகாரி வாரண்டை எடுத்து காண்பிப்பார்.
பிடியாணையின் சாராம்சம் (Cr.P.C:75)
பிடியாணையினை நிறைவேற்றுகின்ற காவல்துறை அலுவலர் அல்லது வேறு நபர் அதில் கூறப்பட்டுள்ள சாராம்சத்தை கைது செய்யப்பட வேண்டிய நபருக்கு அறிவிக்க வேண்டும். அவர் பிடியாணையை பார்க்க வேண்டும் என்று கேட்டால் அதனை அவருக்கு காண்பிக்க வேண்டும்.
24 மணி நேரத்திற்குள் ... (Cr.P.C:76)
பிடியாணையின்படி கைது செய்யப்பட்ட நபரை பிணையில் விடாத பட்சத்தில் அவரை 24 மணி நேரத்திற்குள் காவல்துறை அலுவலர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும்.
பிடியாணையை நிறைவேற்றும் இடம் (Cr.P.C:77)
நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட ஒரு பிடியாணையை இந்தியாவின் எந்த ஒரு இடத்திலும் நிறைவேற்றலாம்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-78
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு ஒரு பிடியாணையை பிறப்பிக்கும் நீதிமன்றம், அதன் அதிகார வரம்பிற்கு வெளியே அந்த பிடியாணையானது நிறைவேற்றப்பட வேண்டியதிருக்கும்போது, அந்த மாவட்ட நீதித்துறை நடுவர் அல்லது காவல் ஆணையர் அல்லது மாவட்ட கண்காணிப்பாளர் ஆகியவர்களில் ஒருவருக்கு தபால் மூலமாகவோ, அதனை அனுப்பி அதனை நிறைவேற்றச் செய்யவேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-79
ஒருவரை அல்லது பலரை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையானது, அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நிறைவேற்றப்பட வேண்டியதிருந்தால், அந்தப் பகுதிக்குரிய நீதிமன்ற நடுவரிடமோ, தகுதி வாய்ந்த காவல்துறை அதிகாரியிடமோ ஒப்புதல் கையொப்பம் பெறுவதற்கு அந்த பிடியாணை கடிதம் காவல்துறை அலுவலர் ஒருவரால் எடுத்துச் செல்லப்பட வேண்டும். அப்பிடியாணையில் மேற்கண்ட அதிகாரிகளால் ஒப்புதல் செய்யப்பட்டால் அந்த காவல்துறை அலுவலர் அந்த பிடியாணையை நிரைவேற்றும் அதிகாரத்தை பெற்றவர் ஆவார்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-80
சரி, பிடியாணையின்படி அதனை பிறப்பித்துள்ள நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு வெளியே நியமிக்கப்பட்ட காவல்துறை அலுவலர் ஒருவரை கைது செய்து விட்டார். அதன் பிறகு என்ன செய்ய வேண்டும்?
பிடியாணையை பிறப்பித்த நீதிமன்றமானது (பிடியாணை கைதி) கைது செய்யப்பட்ட இடத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்திற்குள் இல்லை என்றால், அந்த வட்டார எல்லைக்குள் அதிகாரமுடைய காவல்துறை அதிகாரி முன்னால் கைதியை ஆஜர் படுத்த வேண்டும்.
கைது செய்யப்பட்ட நபர் பிடியாணையில் குறிப்பிட்டுள்ளவர்தான் என்று தங்களுக்கு தோன்றினால், நீதித்துறை நடுவர் அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது காவல் ஆணையர் அந்த கைதியை நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட வேண்டும். பிணையம் கொடுக்கக்கூடிய குற்றம் என்றால் பிணையம் கொடுக்கலாம். அந்த பிணைய பத்திரத்தை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு-81
பிணையில் விட முடியாத குற்றமாக இருந்தால், எந்த மாவட்டத்தில் கைது செய்யப்பட்டதோ அந்த மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அல்லது செஷன்ஸ் கோர்ட் நீதிபதியோ தக்க பரிசீலணை செய்து அந்த கைதியை பிணையில் விட உத்தரவிடலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக