விளையாட்டு
`குரோஷியா கனவு தகர்ந்தது' - 20 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை உச்சிமுகர்ந்த பிரான்ஸ்! #FifaWorldCupFinal
ஒரு மாத காலமாக நடந்து வந்த ஃபிபா 2018 உலகக்கோப்பை கால்பந்து தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. பலத்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த தொடரில் முக்கிய அணிகளுக்கு சிறிய அணிகள் அதிர்ச்சி அளித்தன. இதனால் இந்த தொடர் முழுவதுமே எதிர்பார்ப்புக்கு ஏற்றார் போல் இருந்தது. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அர்ஜென்டினா, போர்ச்சுகல், பிரேசில், இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் சீக்கிரமே நடையை கட்டின. அதேபோல் யாரும் எதிர்பாராத விதமாக முதல் முறையாக குரோஷியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. மேலும் பிரான்ஸ் அணியும் மீண்டும் உலகக்கோப்பை பைனலுக்கு நுழைந்துள்ளது. இந்த இரு அணிகள் இடையேயான இறுதிப்போட்டி இன்று தொடங்கியது. இதில் இரு அணிகளும் ஆக்ரோஷமாக ஆடினர்.
ஆட்டத்தின் 17-வது நிமிடத்தில் பிரான்ஸிற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. தலையால் முட்டி குரோஷிய வீரர் மேண்ட்சுகிச் தடுக்க முயல, ஆனால் அவரது தலையில் பந்து பட்டு கோல் எல்லைக்குள் புகுந்தது. இதனால் ஓன் கோல் மூலம் பிரான்ஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது. இதேபோல் ஆட்டத்தின் 27-வது நிமிடத்தில் குரோஷியாவிற்கு ப்ரீ கிக் வாய்ப்பு கிடைத்தது. இதை பயன்படுத்தி குரோஷியா கோல் அடிக்க ஸ்கோர் 1-1 என சமநிலை ஆனது. பின்னர் 38வது நிமிடத்தில் கோல் ஏரியாவுக்குள் வைத்து குரோஷியா பவுல் செய்ய பிரான்ஸுக்கு பெனால்டி கிடைத்தது. இதை அசத்தலாக பயன்படுத்திய பிரான்ஸ் வீரர் கிரீஸ்மான், கோல் அடித்தார். இதனால் முதல் பாதி முடிவில் பிரான்ஸ் 2 - 1 என முன்னிலை வகிக்கித்து.
பின்னர் இரண்டாவது பாதியில் முன்பை விட பிரான்ஸ் வேகம் காட்டியது. 59-வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் போக்பா ஒரு கோல் அடித்தார். 65-வது நிமிடத்தில் ஹெர்னாண்டஸ் கொடுத்த பாஸை மப்பே அபாரமாக கோலாக்கினார். இதனால் பிரான்ஸ் 4-1 என முன்னிலைப் பெற்றுள்ளது. இதன்பின் 69வது நிமிடத்தில் பிரான்ஸ் கோல் கீப்பர் தவறால், குரோஷியா கோல் அடிக்க விறுவிறுப்பு ஏற்பட்டது. எனினும் குரோஷியாவின் உலகக்கோப்பை கனவை பிரான்ஸ் தகர்த்தது. பிரான்ஸ் வீரர்கள் தடுப்பு ஆட்டத்தை ஆட ஆட்ட நேரம் முடிந்தது. இதனால் 4 -2 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தி இரண்டாவது முறையாக பிரான்ஸ் கோப்பையை கைப்பற்றியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக