வியாழன், 19 ஜூலை, 2018

உடல் நலக் கல்வி

உடல் நலக் கல்வி...

அறிமுகம்
"நோய் இல்லாத உடல் நிலை பெற்றவர்களே முழுமையான உடல் நலம் உடையவர்கள்” என்றும் நல்ல உடற்கூறு, நல்ல மன நலம், சமூக நல வாழ்வு பெற்றவர்களே, நல்ல உடல் நலம் மிக்கவர் என்றும் உலகச் சுகாதார நிறுவனம், விளக்குகின்றது. முழுமையான ஒருவன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்வதை, நல்ல உடல் நலத்தின் மற்றொரு விளக்கமாகக் கொள்ளலாம். நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பதை மக்கள் நோய் வரும் வரை அதன் மதிப்பினை உணர்வதில்லை. நல்ல உடல் நலம் ஒருவரின் வாழ்க்கையின் வழிகாட்டியாக அமைகிறது. தனி ஆளுமை திறமையை வளர்க்க பல விதங்களிலும் உதவுகிறது. வாழ்க்கையின் குறிக்கோளை அடைவதற்கு துணை செய்கிறது. ஒருவன் உயர்ந்த உடல் நலக்கூறு பெற, அவன் சிறந்த உடல் நலக் கல்வியின் விழிப்புணர்வைப் பெற்றிருக்க வேண்டும். இந்த நல்ல உடல் கூறுகளே மனிதனுக்குச் சிறந்த வழிகாட்டியாகி, முக்கியமான எல்லாவற்றிற்கும், வெளிப்படுத்தும் கருவியாக அமைகிறது.
உடல் நலக் கல்வியின் விளக்கம்
  • உலக சுகாதார நிறுவனக் கூற்றுப்படி, உடல் நலக் கல்வி என்பது அனுபவங்களின் மொத்தக் கூறு, திறமைகள், மனப்பான்மைகள், தனிமனிதனின் ஆளுமையும் சமுதாய நலமும் சார்ந்தவையாகும்.
  • உடல் நலக் கல்விக்கு இன்னொரு விதமாகவும் விளக்கம் அளிக்கலாம். அது மனிதனின் ஆளுமை திறமையையும் சமுதாய நலத் தன்மையையும் அடைய முக்கிய குறிக்கோளாகவும் அமைகிறது.
  • 1978 அல்மா அட்டாவின் கொள்கைப்படி, உடல் நலக் கல்வி என்பது உடல் நலத்தோடு இருக்க விரும்பும் தனி நபரையோ, சமுதாயத்தையோ உற்சாகப்படுத்தும் நோக்கமுடையது.
  • உடல் நலக் கல்வி என்பது மக்கள் அவர்களுக்காக நல்ல உடல் நலனைப் பெற தேவைப்படுகிறது.
  • பாமர மக்களுக்கு மட்டும் உரிய வெறும் பேச்சாக அமையாமல், ஏழை, பணக்காரர், இளைஞர், முதியவர், என்றும், கல்வி கற்றவர், கல்லாதவர், உடல் நல மற்றவர், உடல் நலமானவர் என்று கருதாமல், அவர்களின் தேவைகளுக்கேற்ப உடல் நலக் கல்வி அமைதல் வேண்டும்.
  • உடல் நலக் கல்வி என்பது உடல் நலத்தைக் குறைக்க கூடிய காரணிகளைக் கற்பிப்பதோடு, ஒருவருடைய தனித்திறமையை உயர்த்துவதோடு, சிறப்பான பாதுகாப்பான உடல் நல முறைகளை மேற்கொள்வதும் ஆகும்.
உடல் நலக் கல்வியின் நோக்கமும் குறிக்கோளும்
  1. உடல் நல தேவைகளுக்கும் பிரச்சினைகளுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த / வளர்க்க மக்களுக்கு உதவுதல் வேண்டும்.
  2. உடல் நலத்தையும், அதற்கான காரணிகளையும் மக்கள் அறிந்து கொள்வதற்கு, பொது அறிவும், திறமையும் பெற முயல வேண்டும்.
  3. தனிநபரின் நலம் மற்றும் சமுதாய நலம் சார்ந்த ஆரோக்கியமான மனப்பான்மையை வளர்ப்பதற்கும் மற்றும் உடல் நலம் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் தாங்களாகவே முயற்சிகளிலும் செயல்களிலும் ஈடுபடவேண்டும்.
  4. சுகாதார பணியாளர்களுடன் பங்கேற்று அவர்களுடைய சுகாதார சேவையில் தங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
  5. இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்ட உடல் நலமும் நலம் சார்ந்த பணிகளையும் பின்பற்றுதல் வேண்டும்.
உடல் நலக் கல்வியின் கொள்கைகள்
உடல் நலக் கல்வியை அளிக்கும் பொழுது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்
  1. ஆர்வம் : தனிப்பட்டவர்களின் ஆர்வம் அல்லது குழுவினுடைய ஆர்வத்தை கருத்தில் கொள்ளுதல். உதாரணமாக நோயாளி சுற்றுப்புறச்சுகாதாரச் சூழலை விட தன் நோயைப் பற்றி அறிவதில் ஆர்வம் காட்டுகிறான்.
  2. ஏற்றுக் கொள்ளுதல் : மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுதலோடு சமுதாயத் தலைவர்களால் இவை ஏற்றுக் கொள்ளப்படுதல் வேண்டும். மக்களின் தொன்றுதொட்டு வரும் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், வாழ்வியல் நடைமுறை இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக சைவ உணவு உண்பவர்களை மாமிச உணவு உண்ணுமாறு அறிவுறுத்தல் கூடாது.
  3. நடைமுறை: இது நடைமுறைக்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். கல்வித்தரம், குடும்ப வருமானம், புரிந்து கொள்ள கூடிய மனநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க கூடிய குறைந்த வருமானமுடைய ஏழைத் தாயிடம் அதிகப் பாலையோ, மாமிசத்தையோ உட்கொள்ளுவது என்பது இயலாத ஒன்று. மற்றும் அவர்களை நமது நாட்டில் அதிகம் கிடைக்காத கீரை வகை உணவினை உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவது நடைமுறைக்கு சாத்தியமன்று. இரும்பு சத்து, கால்சியம், புரதம் ஆகியவைகளை தனித்தனியாக மாத்திரைகளாக உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவதை விட, மேற்கூறப்பட்ட சத்துள்ள இயற்கையான உணவினை உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவது மிகவும் பயனுள்ளது.
  4. பங்கேற்றல் : இதை கலந்துரையாடல் மூலம் நடைமுறைப் படுத்தலாம்.
  5. தெரிந்ததிலிருந்து தெரியாதது: ஒருவர் பாடம் கற்பிப்பிக்க முனையும் பொழுது கற்றுக் கொள்பவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்கனவே அறிந்தவைகளிலிருந்து, புதிதாக அறிய வேண்டுவனவற்றை விளக்குதல் வேண்டும்.
  6. மீண்டும் நினைவு கூர்தல் : திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் கற்றல் அதிகரிக்கிறது. தெளிவான கருத்துக்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும் திரும்பத் திரும்பக் கூறுதல் அவசியம்.
  7. ஆயுத்தப் படுத்துதல் : கற்பித்தலின் முக்கிய கூறு. கற்றலில் மற்றும் நடத்தை மாற்றத்திற்கு உரிய ஆர்வத்தை கற்பவரிடம் உருவாக்க வேண்டும்.
  8. செய்முறை : உண்மையான விளக்கங்களை செயல்முறைகளின் வாயிலாக மாணவர்களுக்குக் காண்பித்தல்.
  9. செய்து கற்றல் : ஒவ்வொரு மாணவனும் தானாகவே சிந்தித்து செய்து கற்றுக் கொள்ளும் வாய்ப்பினை அளித்தல் அதற்கான நேரத்தையும் ஒதுக்குதல்.
  10. ஆசிரிய மாணாக்கரிடையே இணக்கமான உறவுமுறை நிலவ வேண்டும். இவ்வுறவுமுறை தொடக்கத்திலே அமைதல் நலம் பயக்கும்.
  11. செவிலியர், படிப்பில்லாத ஏழை மக்களுடன் உரையாடும் போது அதிக பதற்றமோ, மரியாதையில்லாமலோ இருக்கக் கூடாது. குழுக்களாகவோ, (அ) தனித்தனியாகவோ அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தச் செய்து சந்தேகங்களை நிவிர்த்தி செய்ய வேண்டும். ஐந்து நிமிட உரையாடலுக்கு கூட போதுமான அளவுத் திட்டம் இருத்தல் இன்றியமையாதது.
  12. சமூகத்திலுள்ள பள்ளி ஆசிரியர்கள், உள்ளூர் தலைவர்கள், சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்களுடைய ஒத்துழைப்புடன் சுகாதாரக் கல்வி தொகுக்கப்படல் வேண்டும்.
சேவையின் மூலம் அணுகுதல்
அரசு மற்றும் அரசு சாரா அமைப்பின் சுகாதார ஊழியர்கள் இத்துறையின் முழுப் பொறுப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும். சமுதாயத்திற்குத் தேவையான அனைத்துச் சுகாதார வசதிகளையும் இந்த அமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தால், மக்கள் தங்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவார்கள். மனிதர்களுடைய தேவைகளின் அடிப்படையில் சேவை அமையவில்லையெனில் இந்த அணுகுமுறை பயனற்றதாகி விடும். எனவே சுகாதார ஊழியர்கள் மக்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் புரிந்து கொண்டு அதற்கேற்ற முறையில் செயலாற்ற வேண்டும்.
கல்வியின் மூலம் அணுகுமுறை
மனிதனுடைய சுகாதாரத் தேவைகளை புரிந்து கொள்ளவும் சுகாதாரமான முறையில் தன்னை மாற்றிக் கொள்ளவும் இந்த கல்வி அணுகுமுறை தேவைப்படுகிறது. சமுதாயத்தில் மனிதன் சுகாதாரத்தைப் பற்றி சரியான முடிவெடுக்க இந்த முறை சரியான முறையில் ஊக்குவித்தலையும் தகவல் தொடர்பையும் தருதல் வேண்டும். இந்த முறை நல்ல முறையாக இருந்தாலும் நிதானமான முறையில் செயலாற்றினால் நிரந்தரமான நல்ல பயன் கிடைக்கும். இந்த கல்வி அணுகுமுறை குறைந்த அளவே இருந்தாலும் இதனைக் கீழ்க்கண்ட முறையில் வகைப்படுத்தலாம்.
தனி மனித அணுகுமுறை
சுகாதார ஊழியர் (செவிலியர்) தான் செல்லுமிடங்களில் எல்லாம் தனிமனிதனின் சுகாதாரத் தேவைகள், பிரச்சினைகளை கேட்டறிந்து தேவையான அறிவையும் ஆலோசனையும், வழி காட்டுதலையும் வழங்குதல் வேண்டும். திட்டமிட்டும் திட்டமிடாமலும் அவர்களிடம் நேர்காணல் நடத்தலாம். தனி மனிதச் சுகாதாரம் பற்றிய கல்வியை மருத்துவமனைகள் வீடுகள் மற்றும் சுகாதாரத்தில் கவனம் செலுத்தும் நிறுவனங்களில் கற்பிக்கலாம். சுகாதாரக் கல்வியில் தனிமனிதனுக்கு முழு நம்பிக்கை கிடைப்பதற்கு அவர்களிடையே திறமைகளையும் போதுமான அறிவையும் வளர்க்க வேண்டும். (எ.கா) சுகாதாரமான சூழ்நிலையில் வாழக் கூடிய வழிமுறைகளைப் பின்பற்றக் கூடிய செவிலியர் முன் மாதிரியாக இருக்க வேண்டும். (எ.கா) நல்ல கற்பித்தல் முறை. செவிலியரிடையே நல்ல சுகாதாரப் பழக்கங்களான சீரான உடற்பயிற்சி, தூக்கம், ஓய்வு, தூய்மை, சுத்தமான ஆடை அணிந்திருத்தல் வேண்டும், தொற்று நோய் கிருமிகள் தாக்கப்பட்ட பொருட்களை தொட்டபின்னும் மற்றும் உணவு உண்ணும் முன்னும் கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
நல்ல உணவு பாதுகாக்கப்பட்ட குடிநீர் சுகாதாரமாக பயன்படுத்துவது ஆகிய செயல்கள் மனிதனுக்கு வருகின்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது. நாம் உண்ணும் உணவை தேர்ந்தெடுப்பது சமைப்பது போன்றவற்றில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும். நாம் எங்கு வாழ்ந்தாலும் வேலை செய்தாலும் சுத்தமான ஆரோக்கியமான சூழ்நிலை தேவை. சுத்தம் என்பது கடவுளுக்கு அடுத்தபடியாகப் போற்றப்பட வேண்டியது. மற்றும் சுகாதார பணியாளர்கள் சுத்தமான முறையிலும் தாங்கள் உபயோகப்படுத்திய பொருள்களை சரியான முறையிலும் கையாள வேண்டும். கழிவுப் பொருட்களை சரியான முறையில் உரிய இடத்தில் இருந்து அகற்ற வேண்டும். இந்த மாதிரியான சூழ்நிலைகளைப் பின்பற்றினால் நோய் பரவுவதிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். முக்கியமான மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் திட்டமிட்டு அடிக்கடி சுகாதார போதனைகள், நடத்துவதற்கு போதிய காலமின்மை ஆகையால் பணியில் உள்ள செவிலியர்கள் வைத்தியம் செய்கின்ற பொழுது அவ்வப்பொழுது சுகாதார போதனைகளாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக செவிலியர்கள் நோயாளிகளை கவனிக்கின்ற பொழுதே சுகாதார சம்மந்தமான அறிவுரைகளை வழங்கலாம்.
அதாவது சரிவிகித உணவு உண்ணுவது, கை கால்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல் போன்றவைகள் மூலம் சில வகையான நோய்கள் வருவதைத் தடுக்கலாம். இப்போதனைகள் நோயாளிகளின் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கு கொடுக்கலாம். நோய் வந்தவர்கள் நோய் வந்த காலத்திலும் அதன் பின்னரும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கலாம். சுகாதார போதனை மருத்துவ மனைகளில் பணிபுரிகின்ற தடைநிலை ஊழியர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். மருத்துவ மனைகளில் சுற்றுப்புற சூழ்நிலைகளை சரியான முறையில் பராமரித்து தொற்று நோய்கள் போன்றவைகள் பரவாமல் தடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் பணிபுரிகின்ற துப்புரவாளர்களை மேற்பார்வையிடும் பொழுது அவர்கள் எவ்வாறு தேவையற்ற பொருள்களைச் சேகரிப்பது அதை அப்புறப்படுத்துவது போன்றவைகளை கற்றுத் தர வேண்டும். மற்றும் நோயால் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனை கழிவறைகள் மற்றும் பயன்படுத்தும் பொருள் போன்றவைகளை பயன்படுத்தும் முறையைக் கற்று தர வேண்டும்.
குடும்பத்தினர் அணுகுமுறை
ஒரு தனிமனிதன் செயல்பாடு ஒரு குடும்பத்தினர் மற்றும் சமூகத்தின் அங்கம் என்பதால் தனிமனிதன் தூய்மை செயல்பாடு மிகவும் முக்கியமானது. தனிமனிதரின் செயல்பாடு சரியில்லை என்றால் குடும்பத்தை பாதிக்கும். மற்றும் தனிமனிதன் உடல் நலக் குறைவு முழுக் குடும்பத்தினரின் மன எழுச்சியை பாதித்து அனைவருக்கும் நிம்மதியில்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கும். செவிலியர்கள் வீடுகளுக்கு சென்று அறிவுரை வழங்குகின்ற பொழுது உடல் நலம் இல்லாதவரை எவ்வாறு கவனிப்பது, வீட்டல் விபத்துகளை தவிர்த்தல், திட்டமிட்டு உணவு கொடுப்பது குழந்தைகள் கவனிப்பு, கற்பினி தாய்மார்கள், குடும்ப நல சேவைகள் குடும்ப கட்டுப்பாடு, நோய் தடுக்கும் முறை போன்றவைகள் கவனிப்பது பற்றியும் சுற்றுப்புற தூய்மை பற்றியும் விளக்கிக் கூற வேண்டும்.
குழு அனுகமுறை
சிறு குழுக்களுக்கு போதிக்கின்ற பொழுது குழு விவாதம், கருத்துக்களை பரிமாறிக் கொள்ளுதல், சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளுதல் ஆகியவற்றை போதனைக்குப் பின் பின்பற்றச் செய்ய வேண்டும். ஒத்த கருத்துள்ள குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் குழு விளைவு சிறப்பாக அமையும். எடுத்துக்காட்டாக ஒரே மாதிரியான பிரச்சனையுள்ள நோயாளிகளின் ஆர்வம் மற்றும் தேவைகளை அறிந்து செயல்பட்டால் சிறப்பாக அமையும். மற்றும் பள்ளிக்குழந்தைகள் குமாரப் பருவத்தினர் தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றவர்களுக்கு குழு விவாதம் தனியாக நடை பெற வேண்டும் மற்றும் தாய் தந்தையர்களுக்கு குழுவிவாதம் தனியாக நடைபெற வேண்டும். குழுவிவாதம் செய்கின்ற பொழுது சுகாதார பணியாளர்கள் நடத்துகின்ற முறையை முன்கூட்டியே திட்டமிட்டு அமைப்புக் குழுக்கள் மற்றும் மருத்துவமனை பிரிவுகள் நோய் பார்க்குமிடங்கள், மற்றும் நேரத்தை தேர்ந்தெடுத்து சமூகக் கூட்டம் மற்றும் உகந்த இடங்களைத் தேர்ந்தெடுத்து பொருத்தமான ஒளி, ஓலி உபகரணங்களைப் பயன்படுத்தினால் அவர்கள் போதனை சிறப்பாக அமையும்.
நோயாளிக்கு எவ்வாறு கற்பிப்பது
  • செவிலியின் தோற்றம், தொழிலை அக்கறையோடு செய்கின்ற முறை, உடல் நல விதிகள், சுகாதார விதிகள், உடல் நலத்திற்கான பயிற்சிகள் ஆகியவற்றை நோயாளிகளைக் கூர்ந்து கவனித்து, பின்பற்றுவார்கள்.
  • எடுத்துக் கூறுதல் : செவிலியானவர் தன்னுடைய கற்பித்தலின் போது நோயாளியின் நம்பிக்கையை பெறுவதற்கு நல்ல உறவு முறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் எளிமையான மொழியைப் பயன்படுத்தி அந்நிய மற்றும் கடினச் சொற்களைத் தவிர்த்து, மிக முக்கியமான, ஒன்று அல்லது இரண்டு கருத்துக்களைக் கற்றுத் தர வேண்டும். செய்ய வேண்டாதனவற்றை விட, நேர்மறை செயலை செய்ய வேண்டுவனவற்றிற்கு வலியுறுத்த வேண்டும்.
  • காண்பித்தல் : ஒரு பார்வை நூறு வார்த்தைகளுக்குச் சமம்". தான் சொல்லுகின்ற பொருளை காண்பித்து வீட்டில் எவ்வாறு பயன்படுத்துவது என்று கூற வேண்டும். நோயாளி அதைத் தொட்டுப் பிடித்துக் கொள்ளட்டும். நோயாளிகளிடம் நீங்கள் என்ன செய்கிறீர்கள், ஏன் செய்கிறீர்கள் என்று விளக்கவும். எப்பொழுது தேவையோ அப்பொழுது நோயாளி திரும்ப செய்து காண்பிக்கட்டும். படங்கள், மின் அட்டைகள், புத்தகங்கள், மாதிரி பொருட்கள், மற்றும் மாதிரிகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • திரும்பக் கூறுதல் - கற்பித்தல் : கலந்துரையாடலுக்கு இறுதியிலும், மறுநாளும் நோயாளியிடம் நீங்கள் கற்பித்தவற்றை திரும்பச் சொல்லக் கேட்க வேண்டும். தேவையானால் திருத்தங்களையோ, சேர்க்கையையோ செய்ய வேண்டும் நோயாளிகள் சரியான உண்மைகளை சொல்ல அனுமதிக்க வேண்டும்.
  • இசைவு தெரிவித்தல் : கற்றுக் கொள்வதற்கும் முன்னேற்றத்தை உருவாக்குவதற்கும் பாராட்டி அங்கீகாரம் அளிக்க வேண்டும்.
சிறிய குழுக்களுக்கு கற்பித்தல்
  • சாதனங்களைத் திட்டமிடுதல்: விளக்கச் சாதனங்களை திரட்டி பாடத்தை முழுமையாக உணர்ந்து கற்பித்தலின் குறிக்கோளைக் கொண்டு இருக்க வேண்டும். மூத்த செவிலியர் உடன் பணிபுரிவோர், மற்றும் பாடப்புத்தகங்களைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  • குழுக்களைத் திட்டமிடல் : நேரத்தை முன் கூட்டியே தேர்ந்தெடுத்து சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். பொதுவான ஆர்வமுள்ள மக்களை தேர்ந்தெடுக்க வேண்டும். குழுக்களை சிறிதாக வைத்துக் கொள்ளவும் வட்டமாக அமரவும். படங்கள், மாதிரிகள் அல்லது முக்கிய வினாக்களில் ஆர்வம் செலுத்த வேண்டும். பாடத்தை சுமார் ஐந்து நிமிடங்களுக்கு எளிய மொழியில் கற்பிக்க வேண்டும்
  • பார்த்தல் - கேட்டல் துணைக் கருவிகள், கரும்பலகை படங்கள், மாதிரிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டும். பேசும்போது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • வினாக்கள் மற்றும் கருத்துக்களை அனுமதித்து ஊக்கவிக்க வேண்டும். பாடத்தோடு இயைந்து இருக்க வேண்டும். ஆனால் பிற வினாக்களுக்கு இடமளிக்கலாகாது அவற்றை பிறிதொரு சமயம் திரும்பப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • ஏதேனும் ஒரு குழு ஒரு தொகுதியாக பங்கேற்க வேண்டும். ஆனால் குழப்பமான நிலையை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு குழுவும் செயல்முறை விளக்கத்தை அளிக்கலாம்.
  • வகுப்பின் இறுதியில் கற்பித்ததை திருப்பிப் பார்த்து தொகுத்துக் கூற வேண்டும்.
  • பொதுவாக கற்பித்தல் என்பது தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி பெரிய குழுக்களுக்கு கல்வி அளித்தல் ஆகும். இரு வழி தகவல் தொடர்போ முடிவுகள் நல்ல ஊக்கம் அளிப்பனவாக இல்லையென்றாலும் சுகாதார தகவலில் பயனுள்ளதாக இருக்கிறது.
கற்பித்தல் முறைகள்
  • குழு கலந்தாய்வு : அ) கருத்தரங்கம், ஆ) ஆய்வாளர் கலந்தாய்வு - இது ஒரு இருவழி தொடர்பு, மக்கள் தங்கள் கருத்துக்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வதன் மூலம் கற்கின்றார்கள். 8 முதல் 12 பேர் உள்ள சிறு குழுக்கள் சுறுசுறுப்பான பயனுள்ள முறையில் செயல்படும். குழு உறுப்பினரின் பங்கேற்பு ஊக்குவிக்கப்படுகிறது.
  • விரிவுரை முறை: இது ஒரு வழி கற்பித்தல் முறையாகும். ஒலியும் ஒளியும் கருவியின் மூலமும், கலந்தாய்வின் மூலமும் இதனை அதிகப் பொருளுள்ளதாகச் செய்ய முடியும்.
  • வினா-விடை முறை (சாக்ரட்டிக் முறை) : இம்முறை தனி நபருக்கும், குழுக்களுக்கும் பொருந்தும், வினா - விடை கேட்பதன் மூலம் கற்றல் நடைபெறுகிறது.
  • செய்து காட்டும் முறை : சிலவற்றை எவ்வாறு செய்வது என்பதைக் காட்டுதலே இதனுடைய நோக்கம். கற்பவருக்கு (நோயாளிக்கு) மிகவும் பழக்கமான எளிய உபகரணங்களைக் கொண்டு செய்து காட்டுதல் வேண்டும்.
  • தனிநடிப்பு மூலம் : குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் வார்த்தைகளின் மூலம் விளக்க முடியாத பல விவரங்களை குழு நாடகங்கள் நடத்துவதன் மூலம் அச்சூழ்நிலை பற்றிய விவரங்களைப் பயனுள்ள முறையில் அளிக்க முடியும்.
  • திட்ட முறை: இம்முறைக்கு செயல்பாடுகள் தேவைப்படுகிறது. அவ்வாறு செய்வதால் நல்ல முறையில் செய்த ஒரு திருப்தி கிடைக்கிறது.
  • ஒலி ஒளி உபகரணங்கள் : ஒலி-ஒளி உபகரணங்கள் சுகாதாரக் கல்வியில் முக்கிய பணியாற்றுகின்றன. அவை முற்றிலும் கேட்கக் கூடியவை, முற்றிலும் பார்க்கக் கூடியவை, இரண்டும் கலந்தவை என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்படுகிறது.
  • தகவல் சாதனங்கள் சுகாதார துறையில் பல்வேறு பயன்களுக்காகவும், பல்வேறு பிரிவு மக்களுக்காகவும் பயன்படுத்தப் படுகிறது. தகவல் சாதனங்கள், தொடுதல், பார்த்தல், கேட்டல் ஆகிய புலன்களை சென்றடைவதன் மூலம் கற்றல், புரிந்து கொள்ளுதல் ஆகியவற்றை அடைய முடிகிறது. இச்சாதனங்கள் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டால் மக்களிடையே ஆர்வத்தை உண்டாக்கிப் படிக்கத் தூண்டுகிறது. இக்கருவிகளை சரியான முறையில் பயன்படுத்தினால் நினைவுகளின் தொகுப்பினை விட நிரந்தர கற்றலை உருவாக்க முடியும்.
உபகரணங்களின் வகைகள்
அ) தகவல் தொடர்பு சாதனங்கள்
  1. சலனப் படங்கள்
  2. படச் சுருள்
  3. கண்காட்சி
  4. வானொலி
  5. தொலைக்காட்சி
தகவல் தொடர்பு : இவை தகவலைப் பரப்புதல் மூலமும், விளம்பரத்தின் மூலமும் அதிக அளவு மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுகிறது.
ஆ) பிற உபகரணங்கள்
  1. கரும் பலகை
  2. அறிவிப்புப் பலகை
  3. வெட்டப்பட்ட வண்ணப்படங்கள் : உப்புக் காகிதம் அல்லது சொரசொரப்பான வேறு காகிதங்களில் ஒட்டப்பட்டு அவை மின்னல் அட்டை பொருந்தும் பலகையில் பொருத்தப்பட்டு பாடம் நடத்த உபயோகப்படுத்தப்படுகிறது. பாடம் நடத்துவதற்கு முன்னால் நல்ல முறையில் தயார் செய்து கொண்டால் அது கற்பவரின் கவனத்தைக் கவரும். கதையின் கரு முன்னரே தீர்மானிக்கப்பட்டு, அதற்கேற்ற உருவங்கள் தாமதமின்றி பயன்படுத்துவதற்கேற்ற தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
  4. காட்சி அட்டைகள்: இவை ஒருக் கதையை விளக்கும் வகையில் வரிசைப்படுத்தப்பட்ட படங்களாகும்.
  5. சுவரொட்டிகள்: சுவரொட்டிகள் கண்கவரும் வகையிலும், எளிதாகப் புரிந்துக் கொள்ளும் வகையிலும் இருத்தல் வேண்டும். எளிய மொழியில் சிறு சிறு வார்த்தைகளாக அமைந்து இருக்க வேண்டும். மருத்துவமனை, புறநோயாளிகள் துறை மற்றும் சுகாதார நிலையங்களில் பயன்படுத்தும்போது அடிக்கடி மாற்றம் செய்ய வேண்டும். முடிந்தால் செய்திகளை படிப்பவர்களுக்கு விளக்கி இதன் மூலம் நலக்கல்வியை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
  6. புதிர் அட்டைகள் : முழுவதுமாக விளக்கம் தராமல், ஒவ்வொரு பகுதியாக, விளக்கப்படும். இவை கதையாகவோ, அல்லது கற்பனையாகவோ இருக்கலாம்.
  7. பொம்மலாட்டம் : கைகளினால் செய்யப்பட்ட பொம்மைகளைக் கொண்டு ஒரு கதையை உருவாக்குவது தான் இந்த பொம்மலாட்டம். நலக்கல்விக்கு இது ஒரு பிரபலமான கருவியாகும். சிறுவர் முதல் பெரியோர் வரை இந்த பொம்மலாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைவர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக