வெள்ளி, 13 ஜூலை, 2018

மனித உரிமைகள் என்றால் என்ன?

​ 
மனித உரிமைகள்:

மனித உரிமைகள் என்றால் என்ன?

 பேச்சுரிமையும், எழுத்துரிமையும் மட்டும்தான் மனித உரிமைகளா?

 இல்லை! மனித உரிமைகள் பற்றிய சில அடிப்படைத் தகவல்கள் உங்களுக்காக...

நம்முடைய மதம், இனம், மொழி, தேசம், நிறம், மொழி, பிறப்பிடம், இருப்பிடம், பால் எதுவாக இருந்தாலும் மனிதர்களுக்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள, இயற்கையாய் அமையப்பெற்ற அனைத்து உரிமைகளும் மனித உரிமைகளே.

 மனிதம் என்ற வார்த்தையில் நாம் அனைவரும் சமமாகப் பிணைக்கப்பட்டுள்ளோம். மனித உரிமைகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை, பிரிக்கமுடியாதவை, ஒன்றையொன்று சார்ந்து நிற்பவை.

சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் வழியாக மனித உரிமைகள் அனைத்தும் வரையறுக்கப்பட்டு, உறுதிப்படுத்தப்படுகின்றன. அவையே மனித உரிமைகளைக் காத்து, தனி மனித மற்றும் குழு உரிமைகளை நிலைநாட்டுகின்றன.

மனித உரிமைகளுக்கான பொது அம்சங்கள்

 உலகளாவிய அளவில் அனைவருக்கும் சமமானது.

மாற்றத்துக்கோ, திருத்தத்துக்கோ உட்படாதவை.

ஒன்றுக்கொன்று சார்ந்து நிற்கும் தன்மை கொண்டவை.

பிரிக்க முடியாதது.

அனைத்து மக்களுக்கும் சமமான உரிமைகள்.

மக்களிடையே பாகுபாடுகளோ, பாரபட்சமோ காட்டாத பண்பு கொண்டவை.

உரிமைகள் மட்டுமல்ல

அரசியல் சாசனத்தின் படி, மனித உரிமைகள் வெறும் உரிமைகள் (Rights) மட்டுமல்ல. அடிப்படை உரிமைகளைப் போல இவை நமது கடமைகள் (Duty) ஆகும்.

மனித உரிமைகளுக்கு முன் நிற்கும் சவால்கள்

மனித உரிமைகளுக்குள் சமத்துவம் இல்லாமல் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட ஏராளமானவை காரணிகளாக அமைகின்றன.

வறுமை

பாகுபாடு

மோதல் மற்றும் வன்முறை

 சிலருக்கு மட்டும் தண்டனைகளில் இருந்து விடுதலை

ஜனநாயகத்தின் மீதான பற்றாக்குறை

 பலவீனமான நிறுவனங்கள்

மனித உரிமை மீறல்கள்

உலகமெங்கும் மனித உரிமைகள் தினந்தோறும் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கின்றன. இந்திய அளவில் இதுகுறித்து நாம் பேசும்போது, பெண்ணுரிமை, காவல்துறை அடக்குமுறை, மத வன்முறைகள், குழந்தைத் தொழிலாளர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் இருக்கின்றன.

மனித உரிமைகள் ஆணையம்

இந்தியாவில் மனித உரிமைகளைக் காப்பதற்காக 1993-ம் ஆண்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது.

 இதன் தலைமையிடம் புதுடெல்லியில் அமைந்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இருப்பார்.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரும், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஒருவரும் உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர்களோடு மனித உரிமைகள் செயற்பாட்டில் ஈடுபாடு கொண்ட இருவர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இவர்களோடு தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, சிறுபான்மையின மற்றும் பெண்கள் உரிமைகள் ஆணைய தேசிய தலைவர்களும் இருப்பது வழக்கம்.

இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறித்து மேலும் அறிந்துகொள்ள >ஆணையத்தின் இணையதளம்

உரிமை மீறல்கள் மீதான புகார்கள்

உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவருக்கோ மனித உரிமைகள் மீறல் நடைபெறுவதாகத் தெரிந்தால், மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.

அலுவலகம் இருக்குமிடத்தை தேடி அலைய வேண்டியதில்லை. இணையம் வழியாகவே உங்கள் புகார்களை அளிக்கலாம்.

குழந்தைகள் மீதான மீறல், பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல்கள், உடல்நலம், சிறையில் நடந்த கொடுமைகள், வெளிநாட்டவர் மீதான புகார்கள், நீதித்துறை, சிறார் கூர்நோக்கு இல்லங்களில் நடைபெற்ற பிரச்சனைகள், தொழிலாளர்கள் மீதான வன்முறை, கொள்ளைக் கும்பல்கள், மாஃபியாக்களின் செயல்பாடுகள், சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மீதான் உரிமை மீறல்கள், ராணுவம், காவல்துறை மீதான புகார்கள், சுற்றுச்சூழல், மாசுபாடு குறித்த தகவல்கள், அகதிகள் மற்றும் இடம்பெயர்ந்தோருக்கு ஏற்படும் இன்னல்கள், சாதி, மத வன்முறைகள், போராட்டங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஆகிய பிரிவுகளில் நீங்கள் புகார் அளிக்கலாம்.

இதில் ஒவ்வொரு பிரிவுக்கும் உள்ளே உட்பிரிவுகள் உள்ளன. இவற்றில் தொடர்பு இல்லாத மீறல்கள் இருக்குமானால், அதை நீங்களே பூர்த்தி செய்து மனித உரிமைகள் ஆணையத்துக்கு அனுப்ப முடியும்.

தனி ஒருவர் சார்ந்த, குடும்பம், அலுவலகம், சுற்றுப்புறம் சார்ந்த மனித உரிமைகள் மீறல்கள் குறித்து மட்டும் பேசாமல் உலகளாவிய மீறல்களையும் முன்னெடுக்க வேண்டியது நமது கடமை.

காஷ்மீரில் வன்முறைகள் என்ற பெயரில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து மற்ற மாநிலங்கள் அக்கறை கொள்ளுங்கள். வட மாநிலங்களில் தாண்டவமாடும் ஊட்டச்சத்து குறைபாடு பற்றிப் பேசுங்கள். படிப்பில் பின் தங்கிய மாநிலங்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துங்கள்.

மனித உரிமைகள் காப்போம்; மனிதம் வளர்ப்போம்!


      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக