வியாழன், 19 டிசம்பர், 2019

வரலாற்றில் சில சுவாரஸ்யங்கள்


வரலாற்றில் சில சுவாரஸ்யங்கள்

கழுதைப்பாலும் முட்டைக் கருவும்

எகிப்தியப் பேரழகி கிளியோபாட்ரா கழுதைப்பாலில் குளித்தாள் என்பது தெரிந்ததே. ஸ்பெயினை ஆண்ட இரண்டாம் பிலிப் மன்னனின் மனைவி ராணி எலிசபெத் தினமும் தன் மேனியை மேலும் பட்டு மேனியாகப் பளபளக்கச் செய்ய, முட்டைகளின் வெள்ளைக் கருவில் குளித்தாளாம்.

கங்கை நீர்

1902ம் ஆண்டு ஏழாம் எட்வர்டு, இங்கிலாந்தின் மன்னராக பதவி ஏற்றுக் கொண்டபோது, இந்தியாவில் இருந்து ஜெய்ப்பூர் மகாராஜா விருந்தினராகச் சென்றார். போகும்போது ஆறு மாதத்திற்குத் தேவையான கங்கை நீரையும் குடிப்பதற்காக கப்பலில் கொண்டு சென்றாராம்!

வாய் நிறைய வைரம்

ஒருவரைப் பாராட்டும்போது அவருக்கு வாய் நிறைய சர்க்கரை போட வேண்டும் என்பார்கள். ஒருவரைப் பாராட்ட வாய் நிறைய வைரங்களைப் போட்டவர் உண்டா? உண்டு. அவர் சுல்தான் முகமது. இவர், காஸ்னாவின் மன்னர். அரசவைக் கவிஞராக இருந்தவர் அன்சூர். இவரது கவிதைகள் மகத்தானவை. ஒருமுறை இவரது கவிதை இன்பத்தில் திளைத்த சுல்தான் இவருக்குப் பரிசாக விலைமதிப்பு மிக்க வைரக் கற்களை மூன்று முறை அவர் வாய் நிரம்பப் போட்டார்.

மகிழ்வுற்ற கவிஞர் அன்சூர், ‘‘எனது வாய் சிறியது சுல்தான். இப்படி எனக்கு மூன்று வாய் வைரம் பரிசு அளிப்பதாக முன்னதாகத் தெரிவித்து இருந்தால் எனக்குப் பதிலாக வாயைத் திறக்க என் மனைவியை அழைத்து வந்திருப்பேன்’’ என்றார். அதைக் கேட்டு அரசவையே சிரிப்பால் குலுங்கியது.

பூனை பக்தி!

பண்டைய எகிப்தியர்கள் பூனையை புனிதப் பிராணியாகக் கருதினார்கள். தெய்வமாக பூஜித்தார்கள். பூனையை யாராவது கொன்றுவிட்டால் அவர்களைக் கொன்றார்கள். இந்த ‘பூனை பக்தி’யால் அண்டை நாடான பெர்ஷியாவிடம் யுத்தத்தில் இவர்கள் தோல்வி அடைந்த வரலாறும் உண்டு.

2500 ஆண்டுகளுக்கு முன், பெர்ஷிய நாட்டுப் படைகள் எகிப்து நாட்டுக்கு புறப்பட்டன. எகிப்தியர்களின் ‘பூனை பக்தி’ பற்றி நன்கு அறிந்த பெர்ஷியர்கள், தங்கள் படைகளுக்கு முன் ஏகப்பட்ட பூனைகளை அழைத்துச் சென்றனர். இதைக் கண்டு எகிப்து சிப்பாய்கள் அதிர்ச்சி அடைந்தனர்! பூனைகள் மீது ஒரு அம்புபட்டால் கூட கடவுள் கோபிப்பார்.... எனவே, ஆயுதங்களை எடுக்கவோ, யுத்தம் செய்யவோ முயலவில்லை. பூனையால் எகிப்து ‘அம்பேல்’ ஆனது.

கைப்பிடி வைரம்

ஔரங்கசீப்பின் அரசவைக் கவிஞராக இருந்தவர் அரேபியக் கவிஞரான தஜ்ஹர் என்பவர். இவருக்குச் சம்பளமாக மன்னர் ஔரங்கசீப் ஆண்டுக்கு இரண்டு பிடி வைரங்கள் கொடுத்து வந்தார். தன் பிறந்த தினத்தன்று இப்புலவரை ஔரங்கசீப் தனது கஜானாவுக்கு அழைத்துச் சென்று வைரங்கள் நிறைந்த பெரிய பையில் கைகளை விட்டுப் பிடி நிறைய எடுக்கச் சொல்வாராம். இவ்வாறு அந்த அரசவைக் கவிஞர் 10 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்!

ஆற்றுக்கு தண்டனை!

பாரசீகத்தின் மன்னன் சின்டெஸ். ஒருமுறை இவன் தன் பரிவாரங்களோடு ஆற்றைக் கடக்கும்போது ஆற்றில் வெள்ளம் வந்து மன்னனின் குதிரையை அடித்துச் சென்றுவிட்டது. தான் பிரியமாக வளர்த்த குதிரையை ஆற்று வெள்ளம் கொன்றுவிட்டதாகக் கருதிய மன்னன், அந்த ஆற்றுக்கு மரண தண்டனை விதித்தான்! மரணதண்டனையும் நிறைவேற்றப்பட்டது.

 எப்படித் தெரியுமா? 360 கால்வாய்களை வெட்டி அந்த ஆற்றினை தூர்ந்து போகச் செய்தான். ஆனால், சில வருடங்களுக்குள் வாய்க்கால்கள் தூர்ந்து போய் ஆறு மீண்டும் ஓடத் தொடங்கியது. அந்த ஆறு எது தெரியுமா? தற்போது ஈராக் நாட்டில் பாயும் ‘டையலா’ நதிதான் அது!

இருமுறை முடிசூட்டு விழா!

ஒரே வருடத்தில் இரண்டு முறை முடிசூட்டிக் கொண்டார் சத்ரபதி சிவாஜி. ஏன்? 1794, ஜூன் 6ம் தேதி சிவாஜிக்கு மகுடாபிஷேகம் நடந்தது. 8ம் தேதி அவரது தளபதி மரணம் அடைந்தார். அடுத்த மூன்று நாளில் அவரது மனைவி கேஷாபாய் அமரராகிவிட்டார்.

அடுத்த எட்டு நாளில் அன்னை ஜீஜாபாய் காலமானார். நிஸ்சல்பூரி என்ற அறிஞர், ‘சிவாஜி பட்டம் சூடத் தேர்ந்தெடுத்த நாள் சரியில்லை’ என்று கூறி, மறுமுறை முடிசூடச் சொன்னார். 80 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக மீண்டும் முடிசூட்டிக் கொண்டார் சிவாஜி.

வரலாற்று விந்தைகள்

* முதல் உலகப்போரின் தொடக்கத்தில் பிரெஞ்சு அரசாங்கத்திடம் தனது படைகள் அனைத்தையும் அனுப்ப போதிய லாரிகள் இல்லை. ஆகவே, 12,000 டாக்ஸி களை வாடகைக்குப் பிடித்து அவற்றில் போர் வீரர்களை ஏற்றிப் போருக்கு அனுப்பி வைத்தது.

* முதல் உலகப் போரில், பிரான்ஸ் நாட்டின் போர் முனையிலிருந்து செய்தி கொண்டு வரவும், போர்முனைக்குச் செய்தி அனுப்பவும் பயன்படுத்தப்பட்ட புறா ஒன்றுக்கு, போர் முடிந்த பின், அதன் சேவையைப் பாராட்டி மெடல் வழங்கப்பட்டது.

* 1739ம் ஆண்டு ஸ்பெயின் மீது இங்கிலாந்து போர் தொடுத்தது. ஏன்? ஜெங்கின்ஸ் என்ற கப்பல் தலைவனின் காதை ஸ்பெயின் கப்பல் படையினர் நடுக்கடலில் துண்டித்துவிட்டார்கள். ஜெங்கின்ஸ் அறுந்து விழுந்த தன் காதைப் பத்திரமாக எடுத்து ஒரு பெட்டியில் வைத்து இங்கிலாந்துக்குக் கொண்டுவந்து பாராளுமன்றத்தில் காட்டி முறையிட்டார். உடனே போர் ஆரம்பமானது. ‘ஜெங்கின்ஸ் காதுச் சண்டை’ என்றே இதற்குப் பெயர்.

* பால பருவத்திலேயே இளவரசராக முடிசூட்டப்பட்டவர் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்டு. வேல்ஸ் நாட்டின் இளவரசராக 1841ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முடிசூட்டப்பட்டபோது அவரது வயது என்ன தெரியுமா? பிறந்து 29 நாட்கள்!

* பிரான்செல்டான் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்த பெரும் பணக்காரர். இவர் பாஸ்டில் சிறையில் 69 ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்தார். இவர் செய்த குற்றம், 14ம் லூயி மன்னனின் வழுக்கைத் தலையைப் பார்த்துச் சிரித்தது.
நன்றி முத்தாரம்.

Posted by -
#புவனாமகேந்திரன்,
#மதியழகி & #மதிவதனி,
#மதி_கல்வியகம்,
#MBM_ACADEMY
#WhatsApp_9629933144 .

*꧁☬@☬꧂*  *꧁☬@☬꧂* *꧁☬@☬꧂*

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக