சனி, 4 பிப்ரவரி, 2017

தந்தை பெரியார் பற்றிய சில தகவல்கள்:-

தந்தை பெரியார் பற்றிய சில தகவல்கள்:-

🎩 இவர் பிறந்த ஆண்டு - 17 செப்டம்பர் 1879
🎩 இவர் பிறந்த ஊர் - ஈரோடு
🎩 இவர் 13 வயதில் திருமணம் செய்ய கொண்டார்.
🎩 19 வயதில் இல்லற வாழ்க்கை துறந்தார்.
🎩 1919 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
🎩 1921 சென்னை மாநில காங்கிரசு கமிட்டியின் தலைமை நிர்வாகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1923 காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
🎩 1924 கேரளாவில் உள்ள வைக்கத்தில் நடைபெற்ற சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொண்டார்.
🎩 வைக்கத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலய நுழைவு சட்டத்தை எதிர்த்து போராடினார்.
🎩 வைக்கம் போராட்டத்தின் இறுதியில் திருவிதாங்கூர் அரசு ஆலய நுழைவு தடைச் சட்டம் தளர்த்தி அனைவரும் ஆலயத்திற்குள் நுழையலாம் என அறிவித்தது.
🎩 வைக்கம் போராட்டம் காரணமாக இவருக்கு "வைக்கம் வீரர்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎩 காங்கிரஸ் நிதியுதவியுடன் சேரன்மகாதேவி என்னும் இடத்தில் நடத்தப்பட்ட குருகுலம் பள்ளியை இவர் பார்வையிட்டார்.
🎩 1925 சுயமரியாதை இயக்கம் செங்கல்பட்டு நடந்த மாநாட்டில் தோற்றுவித்தார்.
🎩 இவர் நடத்திய பத்திரிகை -  குடியரசு, புரட்சி, விடுதலை
🎩 சமுதாயத்தில் நிலவும் தீமைகள் அனைத்திற்கும் காரணம் ஏழ்மையே என்பதை உணர்ந்தார்.
🎩 இவருக்கு சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் "பெரியார்" என்ற பட்டம் வழங்கப்பட்டது.
🎩 1937 நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி படுதோல்வி அடைந்தது.
🎩 1944 சேலத்தில் நடைபெற்ற மாநாட்டில் நீதிகட்சி திராவிட கழகம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
🎩 இவர் தென்னாட்டு சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டார்.
🎩23 டிசம்பர் 1973 இயற்கை எய்தினார்.

******************************************
தந்தை பெரியார் (தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ்) - வரலாற்று நாயகர்!

இந்தியா இன்று பல துறைகளில் முன்னேறி வருகிறது. போதுமான மனித வளமும், அறிவு வளமும் அதற்கு நிறையவே இருக்கிறது. அந்த மனித வளத்தையெல்லாம் சமத்துவம், சமநீதி என்ற அடிப்படையில் பயன்படுத்தினால் நமது இந்தியா உலகுக்கே ஒரு முன்னுதாரண தேசமாக விளங்க முடியும். ஆனால் உலக நாகரிகத்திற்கெல்லாம் வித்திட்ட தேசங்களில் ஒன்றான நமது இந்தியாவில்தான் பல தேசங்களில் காண முடியாத ஓர் அநாகரிகமும் வேரூன்றி இருக்கிறது. அதுதான் தீண்டாமை, சாதிப்பிரிவினை என்ற அநாகரிகம் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்துகூட விடுதலை பெற்று விட்டது நமது தேசம். ஆனால் காலங்காலமாக தங்களை மேல்சாதி என்று கூறிக்கொள்பவர்களின் அடக்கு முறையிலிருந்தும், அநாகரிகத்திலிருந்தும் விடுதலை பெற முடியாமல் தவிக்கின்றனர் கீழ்சாதி என்று வகைப்படுத்தப்பட்டவர்கள்.
மேலை நாடுகளில்கூட தோலின் நிறத்தில் அடிப்படையில்தான் இன ஒதுக்கல் கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால் நமது தேசத்தில்தான் பிறப்பின் அடிப்படையிலும், செய்யும் தொழிலின் அடிப்படையிலும் ஒருவன் மேல்சாதி என்றும், கீழ்சாதி என்றும் தரம் பிரிக்கப்பட்டான் இன்றும் பிரிக்கப்படுகிறான். இந்த அநீதிகளால் கூனிக்குறுகிப் போய் சுய மரியாதையை இழந்து தாங்கள் மனிதர்கள் என்ற உணர்வையும் மறந்துபோன உயிர்கள் எத்தனைக்கோடி இருக்கும்? அந்த எண்ணிக்கையை வரலாறுகூட மறந்துபோயிருக்கும். பாதிக்கப்பட்டோரில் பலர் அது நம் விதி என்று ஒதுங்கி நிற்க, அது விதியல்ல ஆதிக்கவர்க்கத்தின் சதி என்று துணிந்து சொன்னார் ஒருவர். அறியாமையும் மூட நம்பிக்கைகளுமே தீண்டாமைக்கும், சாதிக்கொடுமைகளுக்கும் காரணம் என்று நம்பிய அவர் தாழ்த்தப்பட்டவர்களை தூக்கி நிறுத்த சுய மரியாதை இயக்கத்தைத் தோற்றுவித்தார். சாதிக்கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, பிராமநேயம் போன்றவற்றை எதிர்த்து தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தார். அவர்தான் 'தந்தை பெரியார்' என்று தமிழுலகம் மரியாதையோடு போற்றும் திரு.ஈ.வெ.ராமசாமி.
1879 ஆம் ஆண்டு செம்படம்பர் 17ந்தேதி வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயி அம்மாள் ஆகியோருக்கு மகனாக தமிழ்நாட்டின் ஈரோட்டில் பிறந்தார் ஈ.வெ.ரா எனப்படும் ஈ.வெ.ராமசாமி. குடும்பம் வசதியானது. இருந்தும் அவர் மூன்று ஆண்டுகள்தான் கல்வி கற்றார். இளம் வயதிலேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தந்தையின் வணிக முயற்சிகளில் உதவத் தொடங்கினார். உயர்சாதி என்று கருதிக் கொண்டவர்கள் வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்க, ஈ.வெ.ராவுக்கு மட்டும் சிறு வயதிலேருந்தே சமத்துவம், சமநீதி என்ற எண்ணம் வளரத் தொடங்கியது. சமுதாயப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். 1919 ஆம் ஆண்டு 40 வயதானபோது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் கவரப்பட்ட அவர் மளிகை வியாபாரம் உட்பட நல்ல வருமானம் தந்துகொண்டிருந்த அத்தனை தொழில்களையும் விட்டுவிட்டு சமூகப்பணியில் ஈடுபடுவதற்காக இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். அப்போது ஈரோடு நகரமன்றத் தலைவர் பதவி உட்பட மொத்தம் 29 பொறுப்புகளிலிருந்தும் ஈ.வெ.ரா விலகினார். காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு அந்த இயக்கத்தில் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
1922 ஆம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கூட்டத்தில் கீழ்சாதி, மேல்சாதி என்ற பேதமில்லாமல் எல்லோரும் எல்லா கோவில்களிலும் நுழைய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். பிராமணர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். போராட்டத்தில் பின் வாங்காத ஈ.வே.ரா அடுத்த மூன்று ஆண்டுகளில் வைக்கம் (சாதி எதிர்ப்பு போராட்டம்) சத்தியாகிரகம் மேற்கொண்டார். அதன் வெற்றியால் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்டவர்கள் அச்சமின்றி பொதுச்சாலைகளைப் பயன்படுத்த முடிந்தது. நவீன இந்தியாவின் வரலாற்றில் அதுவே முதல் சமூகப் போராட்டமாக வருணிக்கப்படுகிறது. காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்ததிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமையை ஒழிக்க எவ்வுளவோ முயன்றார் ஈ.வெ.ரா சமத்துவம் கிடைக்க வேண்டுமென்றால் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறை அறிமுகமாக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு காந்தியடிகள் மறுப்புத் தெரிவிக்கவே 1925 ஆம் ஆண்டு காங்கிரஸிலிருந்து விலகினார் ஈ.வெ.ரா அதே ஆண்டு அவருக்கு மிகப்பெரிய மரியாதையைப் பெற்றுத் தந்த சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
முன்னேற்றத்திற்கு தடைக்கல்லாக இருக்கும் மூடநம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை தூக்கி எரியுமாறு தமிழர்களுக்கு கோரிக்கை விடுத்தார். பூசாரிகள் இல்லாமல் சுயமரியாதை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினார். பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சாதி வேற்றுமை பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளவும், விதவைகள் மறுமணம் செய்து கொள்ளவும் ஊக்கமூட்டினார். கோவில்களில் பின்பற்றப்பட்ட தேவதாசிகள் முறையை ஒழிக்க சட்டப்பூர்வமாக ஆதரவு திரட்டினார். குழந்தைகள் திருமணத்தை வன்மையாகக் கண்டித்தார். அவருடைய தொடர்ந்த விடாப்பிடியான முயற்சியால் 1928 ஆம் ஆண்டு அரசாங்க வேலைகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் முறையை சென்னை நிர்வாகம் அறிமுகம் செய்தது.
1937 ஆம் ஆண்டு சென்னை மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி உயர்நிலைப் பள்ளிகளில் ஹிந்தி மொழியை கட்டாயமாக்கினார் அதனை வன்மையாக எதிர்த்த ஈ.வெ.ராவின் உறுதியான தலமையில் 1938 ஆம் ஆண்டு பெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது அதனால் சிறையில் அடைக்கப்பட்டார் ஈ.வெ.ரா. அவர் சிறையில் இருந்தபோது சென்னையில் நடைபெற்ற பெண்கள் மாநாடு ஒன்றில் ஈ.வெ.ராவை இனிமேல் 'பெரியார்' என அழைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. அன்றிலிருந்துதான் ஈ.வெ.ராவுக்கு பெரியார் என்ற பெயர் நிலைத்தது. சிறையிலிருந்து வந்ததும் சுதந்திர திராவிட நாடு வேண்டும் என்ற போராட்டத்தில் இறங்கினார் பெரியார். அதே நேரம் இந்தி எதிர்ப்புப் போராட்டமும் தொடர்ந்தது இறுதியில் 1940 ஆம் ஆண்டு ஜனவரி 21ந்தேதி கட்டாய இந்தி மொழிக்கல்வியை மீட்டுக்கொண்டது சென்னை நிர்வாகம். பெரியாரின் தொடர் போராட்டத்திற்கு இன்னொரு வெற்றி கிடைத்தது 1941 ஆம் ஆண்டில் இரயில்வே நிலையங்களில் இருந்த உணவகங்களில் பிராமணர்களுக்கும், மற்றவர்களுக்கும் தனித்தனியாக உணவு பறிமாறப்படும் அருவெறுப்பான பழக்கம் அந்த ஆண்டிலிருந்து தடை செய்யப்பட்டது.
1944 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திராவிடர் கழகம்' என்று மாற்றினார் பெரியார். கழக உறுப்பினர்கள் தங்கள் பெயரிகளிலிருந்து குலப்பெயர்களையும், சாதிப்பெயர்களையும் நீக்கிவிட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். 1948 ஆம் ஆண்டு தமது 70 ஆவது வயதில் 30 வயதான மணியம்மையை மணந்து கொண்டார் பெரியார். அதனைக் காரணம் காட்டித்தான் சிலர் திராவிடர் இயக்கத்திலிருந்து பிரிந்து அறிஞர் அண்ணாவின் தலமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினர். 1952 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக வந்த ராஜாஜி ஒரு விசித்திரமான திட்டத்தை அறிவித்தார். பள்ளி சிறுவர்கள் காலை நேரங்களில் பள்ளிப் பாடங்களையும், மதிய நேரங்களில் அவர் அவரது பெற்றோர் செய்து வந்த தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த திட்டம். குலக்கல்வி திட்டம் என்று அழைக்கப்பட்ட அது தீண்டாமையைத் தொடரச் செய்யும் ஒரு சூசகமான திட்டம் என்று கொதித்தெழுந்த பெரியார் அதனை மீட்டுக்கொள்ளுமாறு முழங்கினார். அதன் விளைவாக 1954 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டிய நிலை ராஜாஜிக்கு ஏற்பட்டது.
அடுத்து முதலமைச்சர் பதவிக்கு வந்த காமராஜர் உடனடியாக குலக்கல்வித் திட்டத்தை நிறுத்தினார். முதிர்ந்த வயதிலும் சமத்துவத்துக்கும், சமநீதிக்குமுமான போராட்டத்தை நிறுத்தவில்லை தந்தை பெரியார். அதன் பலனாக 1971 ஆம் ஆண்டு ஜனவரி 12ந்தேதி சாதி, குலம் என்ற அடிப்படையில் இல்லாமல் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்புகளை வழங்கும் சட்டத்தை அமல்படுத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். பின்னர் 1973 ஆம் ஆண்டு கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினார் பெரியார். கோவில்களில் உள்ள கர்ப்ப கிரகத்துக்குள் எந்த சாதியைச் சேர்ந்த ஒருவரும் நுழைய அனுமதிக்கப்பட வேண்டும் என்பதே அந்த போராட்டத்தின் நோக்கம். இதுபோன்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு சமநீதி கிடைக்க வேண்டுமென்று தன் கடைசி மூச்சுவரை போராடி சுய மரியாதை உணர்வை விதைத்து தீண்டாமையை ஒழித்து சாதிக்கொடுமைகளை புறமுதுகிட்டோடச் செய்த தந்தை பெரியார் 1973 ஆம் ஆண்டு டிசம்பர் 24ந்தேதி தமது 94 ஆவது வயதில் காலமானார். அவரது வீரியமான பேச்சுக்களிலிருந்து இதோ ஒருசில வரிகள்...
"மூடநம்பிக்கைகளை பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழைப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது"
"சமுதாய வாழ்க்கையில் ஒழுக்கமே பக்தியைவிட இன்றியாமையாதது, ஒழுக்கம் என்பது சொல்லுகின்றபடியே நடப்பதும் நடந்துகொண்டபடியே சொல்லுவது ஆகும். பக்தி என்பது தனிச்சொத்து ஒழுக்கம் என்பது பொதுச்சொத்து பக்தி இல்லாவிட்டால் இழப்பில்லை ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே பாழ்"
தந்தை பெரியாருக்கு 1970 ஆம் ஆண்டு யுனஸ்கோ அமைப்பு விருது வழங்கிச் சிறப்பித்தது. அந்த விருதில் பொறிக்கப்பட்ட வாசகம் இது...
புதிய யுகத்திற்கான தூதுவர், தென்கிழக்காசியாவின் சாக்ரடீஸ், சமுதாயச் சீர்திருத்தத்தின் தந்தை, அறியாமை மூடபழக்கங்கள் ஆகியவற்றின் எதிரி...
இந்த அத்தனை வருணனைக்கும் பொருத்தமானவர் தந்தை பெரியார் அவர்கள். அவரைப்போல் தனக்குச் சரியென்று பட்டதை தயங்காமல் சொல்லும் அஞ்சாமையும், எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்கும் பண்பும், சமத்துவம் ஓங்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையும் இவற்றிற்கெல்லாம் மேலாக மூடபழக்கவழக்கங்களை தூக்கி எறியும் திணவும் தைரியமும் உள்ள எவருக்கும் வானம் வசப்பட்டே ஆக வேண்டும் என்பதுதான் வரலாறு சொல்லும் உண்மை.
நன்றி மணவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக