சனி, 16 மார்ச், 2019

அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக என்னென்ன தகுதிகள் வேண்டும்.. தெரிந்துகொள்ளலாம்


அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிக்கான நிபந்தனைகள்:
ஒரு கட்சி மாநில கட்சி அங்கீகாரத்தை பெற கீழுள்ள நிபந்தனைகளில் ஏதாவது ஒன்றில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.
மாநில சட்டப் பேரவை தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 2 இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அதேபோல அம்மாநிலத்தில் நடைபெறும் லோக்சபா தேர்தலில் பதிவாகிய வாக்குகளில் 6 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அந்தத் தேர்தலில் 1 நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிப் பெற்றிருக்க வேண்டும்.
மாநில சட்டப் பேரவை தேர்தலில் மொத்த தொகுதிகளில் 3 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை 234 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் 3 சதவீதம், அதாவது 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில், மாநிலத்தில் உள்ள எம்.பி. தொகுதிகளில் ஒவ்வொரு 25 இடத்திலும் ஒரு இடத்தில் வெல்ல வேண்டும். அதன்படி, தமிழகத்தில் உள்ள 39 மக்களவை தொகுதியில் 2 தொகுதிகளில் வெல்ல வெண்டும். மாநிலத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப் பேரவை தேர்தலில் 8 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சி நிபந்தனைகள்:
ஒரு கட்சி தேசிய கட்சி அங்கீகாரத்தை பெற .. 
நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டப்பேரவை தேர்தலில் 4 வெவ்வேறு மாநிலங்களில் பதிவாகும் வாக்குகளில் 6 சதவீத வாக்குகள் பெறுவதோடு, 4 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தலில் மொத்த உள்ள தொகுதிகளில் 2 சதவீத இடங்களை(11 இடங்கள்) 3 வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வெற்றி பெற வேண்டும்.
ஒரு அரசியல் கட்சி 4 அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் அங்கீகரிப்பட்ட மாநில கட்சியாக இருக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகள் அனைத்தும் 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடக்கும் தேர்தல்களின் முடிவுகளை வைத்து கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது.
இதனை 2016 ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் திருத்தியுள்ளது. அதன்படி தற்போது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிபந்தனைகள் அடிப்படையில் கட்சிகளுக்கு அங்கீகாரம் வழங்கவுள்ளது. இந்தியாவில் தற்போது 7 தேசிய கட்சிகள் உள்ளன. அவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், சிபிஐ, சிபிஐ(எம்), பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளாகும்.
தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கான சலுகைகள்:
ஒரு அரசியல் கட்சி தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டால் அக்கட்சிக்கு சில சலுகைகள் கிடைக்கும் அவை:
கட்சிக்கு என சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுவிடும். அதை மற்ற கட்சிகள் பயன்படுத்த முடியாது.
அக்கட்சியின் வேட்பாளருக்கு போட்டியிடும் தொகுதியிலுள்ள வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.
மேலும் அந்தக் கட்சியின் வேட்பாளரை ஒரே ஒரு நபர் மட்டும் முன்மொழிந்தால் போதும்.
அக்கட்சியின் வேட்பாளர் தேர்தலுக்கு முன் இறந்துவிட்டால் மாற்று வேட்பாளரை அறிவிக்க 7 நாட்கள் அவகாசம்.
தேர்தல் பிரச்சாரத்திற்கு 40 நட்சத்திர நபர்கள் பயனபடுத்தலாம்.
தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு அரசின் தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் நேரம் ஒதுக்கப்படும்.