புதன், 28 செப்டம்பர், 2016

நாடகக்கலை....


நாடகக்கலை

தமிழ்மொழிக்கு முத்தமிழ் எனச் சிறப்பிக்கப்படும் பெருமையுடையது. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என முப்பெரும் பாகுபாடுகொண்டது.

நாடகம் - பொருள் விளக்கம்

நாடகம் என்னும் சொல் நாடு + அகம் எனப் பிரியும். நாட்டை அகத்தில் கொண்டது நாடகம். நாட்டின் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் தன் அகத்தே காட்டுவதனால், நாடகம் எனப் பெயர் பெற்றது என்பர்.

அகம் - நாடு; உன்னுள் நோக்கு; உன்னை உணர்; அகத்தை நாடு என்றெல்லாம் பலவாறு அறிஞர் பொருள் கூறுகின்றனர்.

நாடகம் என்பது உலக நிகழ்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி என்பது முற்றிலும் பொருந்தும்.

கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக் காட்டுவதும், கூத்தாக ஆடிக்காட்டுவதும் நாடகம் என்பர். இதற்குக் கூத்துக்கலை என்னும் பெயரும் உண்டு.

நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்

தமிழின் தொன்மையான கலை வடிவம் நாடகம் ஆகும்.

நாடகத்தில் போலச் செய்தல் என்னும் பண்பு அடிப்படையாக அமைதலைக் காணலாம்.

பிறர் செய்வதனைப்போலத் தாமும் செய்து பார்க்கவேண்டும் என்னும் மனித உணர்ச்சிதான் நாடகம் தோன்றக் காரணமானது.

பண்டைய மரப்பாவைக்கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்த பின்னர், தோல்பாவைக் கூத்து, நிழற்பாவைக் கூத்து ஆகியன முறையே பாவைக்கூத்தின் வளர்ச்சி நிலைகளாக மக்களிடையே வழக்கிலிருந்தன.

பாவைக்கூத்துமுதல் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி அடைந்த நாடகம், நாட்டியமாகி, நாட்டிய நாடகமாகி இன்று நாம் காணும் புதிய நாடக உலகில் அடியெடுத்து வைத்துள்ளது.

இலக்கியங்களில் நாடகம் பற்றிய குறிப்புகள் தொல்காப்பிய மெய்ப்பாட்டியல், நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்து இருக்கிறது.
‘கூத்தாட்டவைக்குழாத் தற்றே’ என்னும் குறள்வழியாக நாடக அரங்கம் இருந்த செய்தி தெரிய வருகிறது.

சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள், நாடகமேத்தும் நாடகக் கணிகை என்று நாட்டியமாடும் மாதவியைக் குறிப்பிடுகிறார்.

தனிப்பாடல்களுக்கு மெய்ப்பாடு தோன்ற ஆடுவதனை நாட்டியம் என்றும், ஏதேனும் ஒரு கதையைத் தழுவி வேடம்புனைந்து ஆடுவதனை நாடகம் என்றும் குறிப்பிட்டு வந்துள்ளனர்.

‘நாட்டியம்’, ‘நாடகம்’ இரண்டிற்கும் பொதுவாகக் கூத்து என்னும் சொல்லே வழக்கில் இருந்தது.

சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார் கூத்துவகைகளைப் பற்றியும், நாடகநூல்கள் பற்றியும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

இலக்கணம் வகுத்த நாடக நூல்கள்

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படும் தமிழ் நூல்களில், முறுவல், சயந்தம், செயிற்றியம், மதிவாணர் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து, குணநூல், கூத்து நூல் முதலிய பல நாடக நூல்கள் நாட்டியத்திற்கும் நாடகத்திற்கும் இலக்கணம் வகுத்துள்ளன.

சிலப்பதிகாரம், நாடகக் கலையைப் பற்றியும் காட்சித் திரைகளைப் பற்றியும் நாடக அரங்கின் அமைப்புப் பற்றியும் விரிவாகக் கூறியுள்ளது.

பரிதிமாற்கலைஞர், செய்யுள் வடிவில் இயற்றிய தம் நாடகவியல் என்னும் நூலில், நாடகம் அதன் விளக்கம்,  வகைகள், எழுதப்பட வேண்டிய முறைகள், நடிப்புக்குரிய இலக்கணம், நடிப்பவர்களுக்குரிய இலக்கணம் போன்றவற்றைக் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி விபுலானந்தர் எழுதிய மதங்க சூளாமணியும் மறைமலையடிகள் எழுதிய சாகுந்தலமும் நாடகத்தைப்பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்.

நாடகப் பேராசிரியர் பம்மல் சம்பந்தனார், நாடகத்தமிழ் என்னும் தம்நூலில் தொழில்முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்.
காலம்தோறும் நாடகக்கலை:
ஏழாம் நூற்றாண்டில் மகேந்திரவர்ம பல்லவன் மத்தவிலாசம் என்னும் நாடக நூலை எழுதியுள்ளான்.

பதினோராம் நூற்றாண்டில் இராசராசசோழன் ஆட்சிக் காலத்தில் இராசராசேச்சுவர நாடகம் நடைபெற்றதாகக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
தஞ்சாவூரை ஆண்டபோது கோவிலில் நாடகங்கள் மராத்திய மன்னர்களால் நடத்தப்பெற்றன.

நாயக்க மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் குறவஞ்சி நாடகங்கள் தோன்றின.
பள்ளு நாடகவகை, உழவர்களின் வாழ்க்கையைச் சித்திரித்துள்ளன.

பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், நொண்டி நாடகங்கள் தோன்றின. செல்வக்குடியில் பிறந்த ஒருவன், ஒழுக்கங்கெட்டு, நோயும் வறுமையும் உற்று இறுதியில் திருந்தி வாழ்வதாக இவ்வகை நாடகங்கள் அமைந்தன.

பதினெட்டாம் நூற்றாண்டில் அருணாசலக் கவிராயரின் இராம நாடகம், கோபால கிருட்டின பாரதியாரின் நந்தனார் சரித்திரம் ஆகியன கட்டியங்காரன் உரையாடல்களோடு முழுவதும் பாடல்களாக அமைந்தன.

இக்காலத்தில் தோன்றிய பெரும்பாலான நாடகங்கள், மகாபாரதம், இராமாயணம் முதலிய காவியங்களின் கதைக்கூறுகளிலிருந்து படைக்கப்பட்டன. ஊர்களில், தெருக்கூத்து என்னும் நாடகவகை, புராணக்கதைகளையே மையமாகக் கொண்டு நடத்தப் பெற்றது.

பின்னர், நாடகங்களில் உரையாடல் சிறப்பிடம் பெற்றது; விடிய விடிய நடைபெற்று வந்த நிலைமாறி நாடகம் மூன்று மணி நேரத்திற்குள் முடிக்கப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் சமுதாயச் சீர்திருத்தம் தொடர்பான நாடகங்கள் சிறப்பிடம் பெற்றன.

காசி விசுவநாதரின் டம்பாச்சாரி விலாசம் குறிப்பிடத் தக்கது.

பேராசிரியர் சுந்தரனார் மனோன்மணியம் என்னும் கவிதை நாடகக் காப்பியத்தைக் கி.பி.1891ஆம் ஆண்டில் வெளியிட்டார். இந்நூல் லார்ட் லிட்டன் எழுதிய மறைவழி என்னும் ஆங்கிலக் கதையைத் தழுவியதாகும்.

நாட்டு விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில், பல்வேறு காலத்திய தேசிய நாடகங்கள் அரங்கேறின.

கதரின் வெற்றி நாடகம்தான் தமிழ்நாட்டில் முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும்.

இதனைத் தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள் நடத்தப்பட்டன. நாடக மேடைகளில் தேசியப்பாடல்கள் முழங்கின.

சங்கரதாசு சுவாமிகள்
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்துறைக்குப் பெருந்தொண்டு புரிந்தவர் சங்கரதாசு சுவாமிகள்.
நாடக உலகின் இமயமலை என்றும், தமிழ்நாடகத் தலைமையாசிரியர் என்றும் சுவாமிகள் அழைக்கப்பட்டார்.

பிரகலாதன், சிறுத்தொண்டர், இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும் மேற்பட்ட நாடகங்களை சங்கரதாசு சுவாமிகள் எழுதியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக