புதன், 27 செப்டம்பர், 2017

இந்திய பிரதமர்கள் இதுவரை...


இந்திய பிரதமர்கள் இதுவரை...

இந்திய வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேற்பட்டது. இதிகாச கால இந்தியா, இடைக்கால இந்தியா என நகரும் இதில் 1947 ஆகஸ்ட் 15 இந்திய விடுதலைக்குப் பிறகான சுதந்திர இந்தியாவை வழி நடத்திய பிரதமர்கள் பற்றிய குறிப்புகள் இங்கே...


ஜவஹர்லால் நேரு

உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத்தில் பிறந்தவர். வழக்கறிஞரான இவர், இந்தியாவின் முதல் பிரதமர் என்ற பெருமை பெற்றவர். ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை பிரதமராக பதவி வகித்தார். பஞ்சசீலக் கொள்கையை வகுத்தவர் இவரே. இவர் பதவியில்  இருந்தது 6,131 நாட்கள். இந்திய-சீனப் போர் இவர் காலத்தில் நிகழ்ந்தது. புதுச்சேரி, கோவா என ஆங்கிலேயர் அல்லாத மற்ற நாடுகளின் ஆட்சிப் பகுதிகளை இந்தியாவுடன் சேர்த்தது இவரது ஆட்சிக்காலத்தில்தான். ‘அணிசேரா நாடுகள் அமைப்பு’ உருவாக்கி, அமெரிக்கா பக்கமோ, ரஷ்யா பக்கமோ சாயாமல் நடுநிலை வகிக்க முயன்றதன் மூலம் பல உலகத் தலைவர்களின் நட்பை சம்பாதித்தார். ‘டிஸ்கவரி ஆஃப் இண்டியா’ இவர் எழுதிய உலகப் புகழ்பெற்ற நூல்.


குல்சாரிலால் நந்தா

பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் பிறந்தவர். பேராசிரியர். இருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்தவர். 1964 மே 27 முதல்  ஜூன் 9 வரையிலும், இரண்டாவது முறையாக  1966  ஜனவரி 11 முதல் ஜனவரி 24 வரையிலும்  பிரதமராக இருந்தார்.  அப்பழுக்கில்லாத அரசியல்வாதி. தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு மிகவும் பொறுப்புடன் செயல்படக் கூடியவர் என்று பெயர் எடுத்தவர். பாரத ரத்னா விருது பெற்றவர்.

லால் பகதூர் சாஸ்திரி

உத்தரப் பிரதேச மாநிலம் முகாரி என்னும் ஊரில் பிறந்தவர். 1964ம் ஆண்டு ஜூன் 9 முதல் 1966 ஜனவரி 11 வரை பதவியில் இருந்த நாட்கள் 582. 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ‘ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’  என்ற வாசகம் புகழ்பெற்றது. பசுமைப் புரட்சி,  தேசிய பல்துறை வாரியம் ஆகியவை இவர் காலத்தில் நடந்த நிகழ்வுகள் ஆகும். வெளிநாட்டில் (தாஷ்கண்ட்-சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.


இந்திரா காந்தி

முதல் இந்தியப் பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெற்றவர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மகள். 1966 ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலும் 1980 ஜனவரி 14 முதல் 1984 அக்டோபர் 31 வரை பதவியில் இருந்தார்.  பதவியில் இருந்த நாட்கள் 5,831. இவருடைய காலத்தில்தான்  வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டதும் இவரது ஆட்சிக் காலத்தில்தான்.

மொரார்ஜி தேசாய்

1977 மார்ச் 24 முதல் 1979 ஜூலை 15 வரை பிரதமராக இருந்தார். இந்திய விடுதலைக்குப் பிறகு பதவி வகித்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாராத முதல் பிரதமர் இவர். இவர் ஜனதா கட்சியைச் சார்ந்தவர்.

ராஜீவ் காந்தி

1984 அக்டோபர் 31 முதல்  1989 டிசம்பர்  2 வரை பதவியில் இருந்தார். இந்திரா காந்தியின் மகன். மிக இளம் வயதில் (41) பிரதமரானவர்.  இந்திய - இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தானதும்,  இந்தியாவில் தொலைத் தொடர்புத்துறை வளர்ச்சி பெற்றதும் இவரது ஆட்சிக் காலத்தில்தான்.

வி.பி.சிங்

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில் பிறந்தவர். 1989 டிசம்பர் 2 முதல் 1990 நவம்பர் 10 வரை பிரதமராக இருந்தார். மண்டல் பரிந்துரைகளை அமல்படுத்தி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு பணிகளிலும் கல்வி நிலையங்களிலும் இட ஒதுக்கீடு முறையைக் கொண்டுவர முயற்சியெடுத்தவர் இவர்.

சந்திரசேகர்

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பலியா என்னும் ஊரில் பிறந்தார்.  1990 நவம்பர் 10 முதல்  1991 ஜூன் 21 வரை  பிரதமராக இருந்தார். காங்கிரஸ் ஆதரவை வாபஸ் பெற்றதால் பதவி விலகினார்.

பி.வி.நரசிம்மராவ்

ஆந்திர மாநிலம் கரீம் நகரில் பிறந்தவர். ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை ஐந்து ஆண்டுகள் பதவியில் இருந்த, நேரு குடும்பத்தைச் சேராத, காங்கிரசை சேர்ந்த முதல் பிரதமர். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவர முயன்றார்.

வாஜ்பாய்

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்தவர். 1996  மே 15 முதல் 1996 ஜூன் 1 வரையிலும்,  மீண்டும்  1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரையிலும் பிரதமராக இருந்துள்ளார். திருமணமாகாதவர். காங்கிரஸ் கட்சியைச் சாராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே. பா.ஜ.கவைச் சேர்ந்த இவரது ஆட்சிக் காலத்தில்தான் தங்க நாற்கரச் சாலை எனும் பெயரில்  இந்திய தேசிய நெடுஞ்சாலை அபிவிருத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

தேவ கவுடா

1996 ஜூன் 1 முதல் 1997 ஏப்ரல் 21 வரை பிரதமர் பதவி வகித்தார். கர்நாடகா மாநிலம்  ஹர்டன்ஹல்லி என்னும் ஊரில் பிறந்தவர் ஆவார்.

ஐ.கே.குஜ்ரால்

பஞ்சாப் மாநிலம் ஜீலம் என்ற ஊரில் பிறந்தவர். 1997 ஏப்ரல் 21 முதல் 1998 மார்ச் 19 வரை பிரதமராக இருந்தார்.

மன்மோகன் சிங்

2004 மே 21 முதல் 2014  மே 26 வரை பத்து ஆண்டுகள் பிரதமராக இருந்தார். உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதை,  நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது  மத்திய நிதியமைச்சராகப் பணியாற்றியவர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்,  தகவல் பெறும் உரிமைச் சட்டம் ஆகியவை இவரது ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டவை.

நரேந்திர மோடி

குஜராத் மாநிலம் வத் நகரில் பிறந்தவர். 2014 மே 26 முதல் பிரதமராக உள்ளார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த பிரதமர் இவரே! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக