வெள்ளி, 18 மே, 2018

EC என்றால் என்ன?


EC என்றால் என்ன?
----------------------------
இந்த பதிவில் “ECUMBARANCE CERIFICATE” என்றும், சுருக்கமாக EC என்றும், தமிழில் “வில்லங்க சான்றிதழ்”  என்று புழக்கத்தில் இருக்கிறது. EC என்பது ஒரு சொத்தில் நடந்த பரிமாற்றங்களை தேதி வாரியாக  யாரிடம் இருந்து யாருக்கு உரிமை மாறி இருக்கிறது , அதனுடைய ஆவண எண் நான்குமால் எல்லை சொத்து விவரங்களை காண்பிக்கின்ற ஒரு ஆவணம் ஆகும்.

இன்னும் புரியும் படியாக சொல்ல வேண்டும் என்றால், சொத்து பதிவு அலுவலகத்திற்கு நீங்கள் சென்று உங்கள் சொத்து விவரத்தை கொடுத்து பதிவக ரெக்கார்ட்களில் மேற்படி சொத்துக்கு 2௦ (அல்லது) 3௦ (அல்லது) 5௦ ஆண்டுகளுக்கு என்னவெல்லாம் பரிமாற்றம் நடந்து இருக்கிறது என்று நீங்கள் விவரங்களை பதிவு அலுவலகத்தில் கேட்டால் அதற்கு அவர்கள் கொடுக்கும் ஆவணமே EC ஆகும்.

என்னவெல்லாம் EC யின் மூலம் தெரிந்து கொள்ளலாம்?
--------------------------------------------------------------------
ஒரு சொத்தின் பத்திரம் & தாய் பத்திரங்கள் உங்களிடம் விற்பனைக்கு வந்தால், அந்த ஆவணங்கள் எல்லாம் உண்மையானதா என்று EC யில் வருகிற ஆவண எண்களை , கையில் உள்ள ஆவண எண்களோடு ஒப்புமைப்படுத்தி பார்க்கலாம்.
உங்களுக்கு கிடைத்து இருக்கும் ஆவணங்கள் இல்லாமல் வேறு ஆவணங்கள் அந்த சொத்து தொடர்பாக கூடுதலாக இருந்தால் அதனை தெரிந்து கொள்ளலாம் .
கிரையம், கிரையம் அக்ரிமெண்ட் , தானம், செட்டில்மெண்ட், விடுதலை பவர் பத்திரம் , அடமான கடன் பத்திரம் , போன்றவற்றை அதன் ஆவண எண் விவரங்கள் உடன் தெரிந்து கொள்ளலாம் .
பிளாட், வீடுகள் கட்டி கொடுக்கின்ற பில்டர்கள் , தங்களுடைய சொத்திற்கான (COMPLETION CERTIFICATE) OCCUPY CERTIFICATE, EC யில் ஏற்றி வைத்து இருப்பார்கள் , வீடு வாங்குவதற்கு முன் அதனை தெரிந்து கொள்ளலாம்.
கூட்டுறவு, வேளாண்மை சொசைட்டி, நிலவங்கியில் வாங்கி அல்லது தனியார் நிதி நிறுவனத்திடம் வாங்கி இருக்கிற கடன்களை EC மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேற்படி சொத்தை பொறுத்து இருந்தால் நீதிமன்ற தடையாணை & உத்தரவுகள் இருந்தால் EC யில் தெரிந்து கொள்ளலாம்.
அரசு நில எடுப்பு , அரசு நில ஆர்ஜிதம் , போன்றவற்றை கூட சில நேரங்களில் EC யில் தெரிந்து கொள்ளலாம் .

EC எதற்கு தேவைபடுகிறது?
=======================
ஒரு சொத்தை வாங்கும் நபர் , அந்த சொத்தில் ஏதாவது சிக்கல்கள் இருக்கிறதா (அல்லது ) நிலத்தின் உரிமையாளர் இவர்தான் என உறுதி செய்ய தேவைபடுகிறது.
சொத்தின் பேரில் கடன் வாங்கும் பொழுது , கடன் கொடுப்பவர் சொத்தில் வில்லங்கம் இருக்கிறதா , என்று சோதனையிட EC தேவைபடுகிறது.
சொத்துக்கு பட்டா பெயர் மாற்றம் , பட்டா உட்பிரிவு செய்யும் பொழுது வருவாய் துறைக்கு சொத்து நமது பெயரிலே இருக்கிறதா, என தெரிந்து கொள்ள EC தேவைபடுகிறது.

EC யை 3வகையாக பிரிக்கலாம்;

ஆன்லைன் EC
கம்ப்யூட்டர் EC  (REGINET சேவை)
மேனுவல் EC

ஆன்லைன் EC:
---------------------
சமீபகாலமாக EC யை எங்கு வேண்டுமானாலும் இணையதளம் மூலம் எடுத்து கொள்ளலாம். கிராமங்களில் கல்வி அறிவு அற்றவர்கள் , கம்ப்யூட்டர் பழக்கம் இல்லாதவர்கள் கூட அங்குள்ள பொது சேவை மையம் , கம்ப்யூட்டர் சென்டர்களில் ஆன்லைன் EC எடுத்து கொள்கின்றனர். மேற்படி ஆன்லைன் EC யில் ‘QR’ கோடுடன் வருகிறது. அதன் மூலம் அந்த சான்றிதழின் மெய்தன்மையை அறிந்து கொள்ளலாம் .

கம்ப்யூட்டர் EC:
------------------------
இது 1980 களில் கணினி மையம் ஒவ்வொரு சார்பதிவகதிற்க்கும் நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு பார்க்கபடுகிற EC கம்ப்யூட்டர்  EC என அழைக்கிறோம் . இவை கம்ப்யூட்டர் ப்ரிண்டாக நமக்கு கிடைத்ததில் பணி சுமை இல்லாத நிலையில் உள்ள போது சார்பதிவாளர் அலுவலகத்தில் காலையில் போட்டால் மாலையில் வாங்கி விடலாம் .

இல்லையென்றால் அதிகபட்சம் 2 நாட்களில் கம்ப்யூட்டர் EC கிடைக்கும். இதில் QR கோடு வராது. சார்பதிவகத்தில் முத்திரையும், பதிவாளர் கையெழுத்தும் இருக்கும் . லீகல் பார்க்கும் வழக்கறிஞர்கள் , கடன் கொடுக்கும் வங்கிகள், பெரும்பாலும் ஆன்லைன் EC யை விட இந்த EC யை தான் விரும்புகிறது. ஆனாலும் வெகுசீக்கிரத்தில் இந்தசேவை  நிறுத்தப்படும் என்பதை அறிகிறேன்.

மேனுவல் EC:
------------------------
1980 க்கு முன் பெரும்பாலும் அனைத்து சார்பதிவகமும் கம்ப்யூட்டர் இல்லாமல், மேனுவலாக தான் பத்திரபதிவு நடந்தது. அந்த கால கட்டங்களுக்கு நாம் தற்போது EC பார்க்க வேண்டும் என்றாலும் , இந்த மேனுவல் EC தான் பார்க்க வேண்டும்.

சார்பதிவு அலுவலகத்தில் EC பார்த்து எழுதி கொடுக்கவே ஒரு சார்பதிவக பணியாளர் இருப்பார். அவர் ஒரு சொத்தில் நடந்து இருக்கும் பரிமாற்றங்களை ரெக்கார்ட்களில் பார்த்து கைகளால் எழுதி தருவார். பணி சுமை இல்லாத நாட்களில் 2 நாட்களில் EC கொடுத்து விடுவார்கள்.

இல்லையென்றால் 1௦ நாட்களில் இருந்து 15 நாட்கள் வரை ஆகும். இதிலும் சார்பதிவக முத்திரை மற்றும் சார்பதிவாளர் கையெழுத்து இருக்கும் . இது கம்ப்யூட்டர் ப்ரிண்டாக இருக்காது. ஏற்கனவே அச்சடித்து வைத்து இருக்கிற படிவத்தில் அவர்கள் எழுதி தருவார்கள் .

EC மனு செய்யும் முறை :
-------------------------------------
சார்பதிவக அலுவலகங்களில் EC மனு செய்வதற்கான மனு பாரங்கள் கிடைக்கும், மேற்படி பாரங்கள் பத்திரப்பதிவு சட்டம் மற்றும் விதிகளுக்கு உட்பட்ட ANNEXURE கள் ஆகும், மனு செய்யும் பாரம் FORM NO: 22, சார்பதிவகம் EC கொடுப்பது FORM NO :15 ஆகும்.

EC மனு செய்யும் போது சொத்து விவரங்களை தெளிவாக எழுத வேண்டும். REFERENCE காக உங்களிடம் பத்திரத்தின் ஆவண எண் கூட எழுத வேண்டும். தேவைபட்டால் உங்களிடம் இருக்கும் பத்திரத்தின் நகல் காண்பிக்க வேண்டும்.

உதாரணமாக:  உங்கள் சொத்துக்கு 6௦ ஆண்டுகளுக்கு EC வேண்டுமென்றால் 1958 லிருந்து நடந்த பத்திரபதிவு நடவடிக்கைகளை நாம் EC மூலம் பார்க்க வேண்டுமென்றால் தோராயமாக 198௦ களிலிருந்து சார்பதிவகங்கள் கணினி மயமாகி இருகின்றது. எனவே தாங்கள் EC போட போகும் பொழுது குறிப்பிட்ட காலம் வரை கம்ப்யூட்டர் EC என்றும், கம்ப்யூட்டர் EC போட வேண்டும் என்றும், மனுவல் EC போட வேண்டும் என்றும், சார்பதிவகங்களில் சொல்வார்கள்.

அதனை எளிமையாக உதாரணத்துடன் எழுதுகின்றேன்.

என்னவென்றால்உங்களுடைய  சொத்து சென்னை கொட்டிவாக்கத்தில் இருக்கிறது. அதற்கு 6௦ ஆண்டு காலம் EC போட வேண்டும் என்றால்,  இன்று தேதியிலிருந்து பின்னோக்கி  1996 வரை கொட்டிவாக்கம் சொத்திற்கு நீலாங்கரை தான்  சார்பதிவாளர் அலுவலகம் ஆகும்.

எனவே அங்கே EC போட்டு பார்க்க வேண்டும். 1996  இல் எல்லாம் கணினி மாயம் ஆகி விட்டதால் நீலாங்கரையில் கம்ப்யூட்டர் EC கிடைக்கும்.   1996 லிருந்து பின்னோக்கி   1986 வரை மேற்படி கொட்டிவாக்கம் சொத்திற்கு அடையாறு சார்பதிவகம் தான் சார்பதிவகம் ஆகும்.

1986 லிருந்து  1996 வரை  கணினி EC தான் இருந்தது. அப்பொழுது நமக்கு கணினி EC தான் கிடைக்கும் 1986 லிருந்து பின்னோக்கி 1982 வரை கொட்டிவாக்கம் சொத்திற்கு அடையாறு தான் சார்பதிவகம் என்றாலும், அப்பொழுது கம்ப்யூட்டர் இல்லாமல் மேனுவலாக பதியப்பட்டது.

எனவே அப்பொழுது நாம் போட வேண்டியது மேனுவல் EC, அதற்கு 1982 லிருந்து 1959 வரை மேற்படி கொட்டிவாக்கம் சொத்திற்கு சைதாபேட்டை தான் சார்பதிவாளர் அலுவலகம் ஆகும். அப்பொழுது எல்லாம் மேனுவல் காலம். எனவே அப்போது நமக்கு கிடைப்பது மேனுவல் EC ஆகும்.

 வரிசை       எண் சொத்தின் கிராமம்      கால இடைவெளி                     (PERIOD)   சார்பதிவாளர்       அலுவலகம்    EC யின் தன்மை
       1    கொட்டிவாக்கம் இன்று தேதியிலிருந்து பின்னோக்கி 1996  வரை   நீலாங்கரை           சர்பதிவகம்        கணினி EC
      2    கொட்டிவாக்கம் 1996 லிருந்து  1986 வரை  அடையார்   சார்பதிவகம்        கணினி EC
      3    கொட்டிவாக்கம் 1986  லிருந்து பின்னோக்கி   1982 வரை  அடையார்   சார்பதிவகம்      மேனுவல் EC
      4    கொட்டிவாக்கம் 1982  லிருந்து பின்னோக்கி   1958 வரை  சைதாபேட்டை   சார்பதிவகம்     மேனுவல் EC
இதே போன்று கொட்டிவாக்கம் கிராமத்தை எதிர்காலத்தில்  பதிவு துறை நிர்வாகத்திற்காக நீலாங்கரை சார்பதிவகத்தை இரண்டாக பிரித்து புதிய சார்பதிவகம் ஒன்றை உருவாக்கினால் , உருவாக்கிய தேதிக்கு  முன்பு EC பார்க்க வேண்டும் என்றால் நீலாங்கரை சார்பதிவகதில் EC போட்டு பார்க்க வேண்டும்.  உருவாகிய தேதிக்கு பின்பு  EC பார்க்க வேண்டும்  என்றால்  புதிய சார்பதிவகதில் EC  போட்டு பார்க்க வேண்டும்.

EC யில் என்னென்ன பிரச்சனைகள் வரும் !
====================================
உங்கள் பக்கத்து நிலத்துகார்கள் அவர்களுடைய இடத்தை கடன் அடமான பத்திரம் போடும் போதோ ,  அல்லது நீதிமன்ற தடையுத்தரவை பதிவு துறைக்கு தெரிவிக்கும் பொழுதோ, தவறுதலாகவோ அல்லது எழுத்து பிழையாகவோ,

(உதாரணத்திற்கு : சர்வே எண்  4 , 8,  6 க்கு பதிலாக   4 ,6 8 என்று நம்பர் மாற்றி அடிக்கின்ற ஆவண எழுத்தர்களால் )  உங்கள் சொத்தின் சர்வே எண்ணை இணைத்து விடுவார்கள். அதன் பிறகு உங்கள் சொத்தில் EC போடும் போது உங்கள் EC யிலும் மேற்கண்ட அடமானமோ, நீதிமன்ற தடை ஆணைகளோ பிரதிபலிக்கும்.

கூட்டுறவு சொசைட்டி , நிலவள வங்கி ஆகியவற்றில் சொத்தை வைத்து விவசாய கடன் வாங்கி இருப்பார்கள். பெரும்பாலும் அரசு மேற்படி கடன்களை தள்ளுபடி செய்து விடும். ஆனால் நாம் தான் அதற்கு ரெசிப்ட் அடித்து சார்பதிவகத்தில் வங்கி அதிகாரியை கூப்பிட்டு கடன் ரத்து அடிக்க வேண்டும்.

அவை அரசு தள்ளுபடி செய்த காரணத்தால் எந்த வேலையும் செய்யாமலேயே விட்டு விடுவார்கள். அவை EC யில் கடனாகவே காலம் முழுவதும் காட்டி கொண்டு இருக்கும்.

அரசின் சில கடன் உதவி திட்டங்களுக்கு….
=====================================
(உதாரணமாக : டிராக்டர் லோன்க்கு 8 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். கடன் வாங்க நினைப்பவரிடம் 7.75 ஏக்கர் தான் இருக்கிறது என்றால் , மீதி 25 செண்டுக்கு பக்கத்தில் உள்ள எண்ணை வேண்டுமென்றே இணைத்து விடுவார்கள் . அப்பொழுதும் EC யில் உங்கள் சொத்துக்கு வில்லங்கம் காண்பிக்கும்.

EC யை பொறுத்து இலவச சில டிப்ஸ்கள் !
--------------------------------------------------------------
என்னுடைய அனுபவத்தில் உணர்ந்ததின் மூலம் சில டிப்ஸ்களை நீங்கள் பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன்.

எப்பொழுது மேனுவல் EC போட்டாலும் 3௦ வருட , 40வருட , 50 வருட, EC பார்க்க வேண்டிய பொழுது , அந்த ரெக்கார்ட்கள் எல்லாம் பழுதடைந்து , அதில் உள்ள தாள்கள் எல்லாம் உடைந்து போயிருக்க வாய்ப்பு உண்டு. அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்து போயிருக்க  வாய்ப்புகள் உண்டு.

அப்பொழுது EC பார்த்து கொடுக்கும் பணியாளரை சந்தித்து கொஞ்சம் பொறுமையாக பார்க்க சொன்னால் நல்லது. அவசரபடுத்தினால் தெளிவாக கொடுப்பார் என்று சொல்ல முடியாது. அவரிடம் கேட்டால் ரெக்கார்டை உங்களுக்கும் காண்பிப்பார் , நீங்களும் அங்கு இருக்கும் ஆவணத்தில்  நிதர்சனத்தை   புரிந்து கொண்டு முடிவுகள் எடுப்பீர்கள்.

உங்கள் சொத்தைச் சுற்றி அருகில் இருக்கும் சொத்துக்காரர்கள் கடன் அடமானமோ, கிரையமோ, நீதிமன்ற வழக்கோ, செய்யபட்டால் கொஞ்சம் விழிப்பாக இருங்கள். நேரம் இருந்தால் பக்கத்து நிலத்துகாரர் கிரையம் , அடமானம் போடும் போது அவரை சந்தியுங்கள் , அந்த பரிமாற்றம் நடக்கும் இடங்களில் இருங்கள் . எழுத்துப் பிழைகள், டைப்பிங் தவறுகளில் உங்கள் சொத்தின் சர்வே எண்கள் இருக்கிறதா என்று அவருக்கு தெரியாமல் கவனியுங்கள்.

ஆன்லைன் EC யில் சில நேரங்களில் தவறுதல்கள் ஏற்படுகின்றன, என்பதே என் அனுபவம். குறிப்பாக பத்திரபதிவு சம்பந்தமாக நீதிமன்ற தடை போட்ட பிறகும், நடந்த பத்திரங்கள் ஆன்லைன் EC யில் காண்பிக்கவில்லை என்ற குறை  பதிவுத்துறையில் இருக்கிறது. இது தவிர சர்வே DOWN , தொழில் நுட்பக் கோளாறு என்று ஆன்லைன் EC யில் சிறு பிழைகள் ஏற்படுகின்றது. அதனால் சொத்து வாங்கவோ அல்லது வேறு பரிமாற்றங்கள் செய்யவோ நிச்சயம் பதிவு அலுவலகத்திற்கு சென்று கம்ப்யூட்டர் EC மனு செய்து வாங்கவும்.
குறைந்தது 6 மாதத்திற்கு ஒரு முறையாவது உங்களுடைய சொத்துகளுக்கு ஆன்லைன் EC ஆவது போட்டு பார்ப்பது பல தவறுகளை முன்கூட்டியே கண்டு பிடிப்பதற்கு உதவும்.

இறுதியாக அனைவரும் EC யை பற்றி நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் , நீங்கள் பணம் கட்டி சார்பதிவக அலுவலக ரெக்கார்ட்களில் உள்ள உங்கள் சொத்து  பரிமாற்றங்களை  EC யாக எடுத்து கொடுக்க சொல்லும் போது பதிவு துறை பிழையாக எடுத்து கொடுத்து, அதனை நம்பி நீங்கள் சொத்தை ஏதாவது பரிமற்றங்களுக்கு உட்படுத்தி நஷ்டமடைந்தால் பதிவு துறை பொறுப்பல்ல என்கிறது. அதனை EC யில் பின்பக்கத்திலேயே குறிப்பிட்டு இருக்கிறார்கள் . எனவே EC க்கு அரசு ” ACCOUNTABILITY ”   எடுத்து கொள்வதில்லை , எனவே நீங்கள் தான் அதிக கவனமாக இருக்க வேண்டும்.

ஆனால், நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, இது வரை ரூபாய் 1௦௦௦௦ வரை நீதிமன்றம் நஷ்டி வழங்கி உள்ளது.

நீதிமன்ற அட்டாச் விவரம் வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக