ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் தொகுப்பு

2016 ஆம் ஆண்டு உலகளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் சிலவற்றின் தொகுப்பு

* கோல்டன் குளோப் விருதுகளை சுவீகரித்த ‘தி ரெவனன்ட்’ மற்றும் ‘தி மார்ஷியன்’

சிறந்த திரைப்படங்கள் மற்றும் அமெரிக்கத் தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் விருது ”கோல்டன் குளோப்”. நாடகப் பிரிவில் ‘தி ரெவனன்ட்’ திரைப்படத்திற்கும், இசை அல்லது நகைச்சுவை பிரிவில் ‘தி மார்ஷியன்’ திரைப்படத்திற்கும் இந்த ஆண்டின் 73 ஆவது கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்பட்டன. நாடகப் பிரிவில் சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும் நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்கள். இசை அல்லது நகைச்சுவை பிரிவில் சிறந்த நடிகராக மேட் டாமனும், நடிகையாக ஜெனிஃபர் லாரன்ஸும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். அதேபோல், ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு சிறந்த படமாக ஸ்பாட் லைட் திரைப்படமும், சிறந்த நடிகராக லியனார்டோ டிகாப்ரியோவும், சிறந்த நடிகையாக பிரி லார்சனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

* ஸிக்கா வைரஸ் தொற்று: குழந்தை பெற்றெடுப்பதை 2 ஆண்டுகள் வரை ஒத்திவைக்க பரிந்துரை

பிரேசில் நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஸிக்கா வைரஸ் திடீரென பரவியது. இதன் காரணமாக, கொலம்பியா, எக்வடார், எல் சால்வடோர் மற்றும் ஜமைக்கா ஆகிய நாடுகளில் குழந்தைகள் பெற்றெடுப்பதை 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்குமாறு அதிகாரிகள் பரிந்துரைத்தனர். ஏடிஸ் என்கிற கொசுக்கடியால் பரவும் இது, குழந்தைகளின் மூளையில் மிகவும் அரிதான மூளைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

* சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வட கொரியா ஏவுகணை சோதனை

நீண்ட தூரம் செல்லும் ராக்கெட் ஒன்றை விண்வெளியில் வட கொரியா ஏவி, ஐ.நா சபையின் பல ஒப்பந்தங்களை மீறியது மட்டுமின்றி உலக நாடுகளின் கண்டனங்களுக்கும் உள்ளானது. இதற்கு முன்னர், ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனையை முதல் முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டதாக வட கொரியா தெரிவித்திருந்தது. தொடர் ஏவுகணை சோதனைகளால் சர்ச்சையில் சிக்கிய வட கொரியா மீது அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஐ.நா சபை பல பொருளாதாரத் தடைகளை விதித்தமை குறிப்பிடத்தக்கது.

* 75 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் முதல் இடத்தில் பில் கேட்ஸ்

2016 ஆம் ஆண்டிற்கான உலகில் உள்ள பில்லியனர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இந்த பட்டியலில் 75 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் பில் கேட்ஸ் முதல் இடத்தை வகிக்கிறார். ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஷக்கர்பெர்க் 44.6 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளார். 19.8 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் முகேஷ் அம்பானி 36 ஆவது இடத்தையும், 16.7 பில்லியன் டொலர்கள் சொத்துக்களுடன் திலீப் சங்வி 44 ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர். உலகில் உள்ள பில்லியனர்களின் எண்ணிக்கை 1,810 ஆகக் குறைந்துள்ளதை ஃபோர்ப்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

* விண்வெளியில் 340 நாட்கள்: சாதனை படைத்த அமெரிக்க, ரஷ்ய விண்வெளி வீரர்கள்

அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி மற்றும் ரஷ்ய விண்வெளி வீரர் மிகாய்ல் கொர்னியன்கோவும் தங்களுடைய 340 நாள் விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு பூமிக்குத் திரும்பினர். சாதாரணமாக விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்குத்தான் ஒருவர் தங்கவைக்கப்படுவார். ஆனால், புவியீர்ப்பு விசையின் தாக்கம் குறைவதால் உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி ஆராய்வதற்காக இவர்கள் அதிகக்காலம் தங்கவைக்கப்பட்டனர். செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பும் திட்டத்திற்கான தகவல் சேகரிப்புக்காக நாசா இந்த சோதனையை நடத்தியது.

* 90 ஆண்டுகளுக்குப் பிறகு கியூப மண்ணில் அமெரிக்க அதிபர்

அமெரிக்கா மற்றும் கியூபாவின் வரலாற்றில் இந்நாள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. அமெரிக்க அதிபர் ஒபாமா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். 1959 ஆம் ஆண்டில் நடைபெற்ற புரட்சியைத் தொடர்ந்து, அமெரிக்கா – கியூபா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இச்சூழலில், கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்டார் ஒபாமா. 90 ஆண்டுகள் கழித்து கியூபாவிற்கு விஜயம் மேற்கொண்ட முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றார். ஹவானாவில் திறக்கப்பட்ட புதிய அமெரிக்க தூதரகத்தில் உரையாற்றிய அவர் இந்த விஜயம் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டுப் பேசினார்.

* கசிந்த 11.5 மில்லியன் இரகசிய ஆவணங்கள்; கிடுகிடுக்க வைத்த பனாமா முறைகேடு

உலகின் அதிகாரமிக்க செல்வந்தர்கள் தங்களுடைய செல்வத்தை வரி ஏய்ப்பு செய்து பதுக்கத் தேர்ந்தெடுத்த நிறுவனம்தான் பனாமா நாட்டைச் சேர்ந்த சட்ட நிறுவனம் மொஸாக் ஃபொன்செக்கா. இந்த நிறுவனம் வரி ஏய்க்க உதவும் நாடுகளை எப்படி பயன்படுத்தியிருக்கிறது என்ற விபரம் கசிந்தது. இந்நிறுவனத்தின் சுமார் 11.5 மில்லியன் ஆவணங்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டன. இந்த ஆவணங்களை 78 நாடுகளின் 107 ஊடக நிறுவனங்கள் ஆராய்ந்து செய்தி வெளியிட்டன. இந்தியாவின் அமிதாப் பச்சன் முதல் ரஷ்ய அதிபர் புதின் வரை, அரசியல் தலைவர்கள், பிரபலங்கள், விளையாட்டு வீரர்களின் பெயர்கள் இதில் அடிபட்டமை குறிப்பிடத்தக்கது.

* லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்

பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் முதன்முறையாக பிரிட்டன் தலைநகர் லண்டன் மாநகரின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயர் சாதிக் கான். தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்ட சாதிக் கான் 56.8 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தன் வெற்றி குறித்து பேசிய சாதிக் கான், “அச்சுறுத்தும் அரசியலை” வாக்காளர்கள் புறக்கணித்திருப்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாகவும் லண்டன் மாநகரம் தனக்கு அளித்த அனைத்து வாய்ப்புகளையும் லண்டன் குடிமக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தமது குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

* தலிபான் தலைவரை ஆளில்லா விமானம் மூலம் வீழ்த்திய அமெரிக்கா

பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாதக் குழுவான தலிபான் அமைப்பின் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர், ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை உறுதி செய்த அமெரிக்க அதிபர் ஒபாமா, தலிபான்களை அமைதிப் பேச்சுவார்த்தையில் சேர்ந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

* கடலில் வீழ்ந்து நொறுங்கிய எகிப்து விமானம்; தொடரும் மர்மம்

ஈஜிப்ட் எயார் என்ற விமான நிறுவனத்திற்கு சொந்தமான எம் எஸ் 804 என்ற விமானம் பாரிஸிலிருந்து கெய்ரோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, மத்திய தரைக்கடல் மீது பறந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நடுவானில் ரேடாரின் பார்வையிலிருந்து விலகிப்போனது. பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் என மொத்தம் 69 பேர் அதில் பயணம் மேற்கொண்டிருந்தனர். விமானம் கடலில் மூழ்கி விபத்திற்குள்ளாகியது. யாரும் உயிர்பிழைக்கவில்லை. இந்நிலையில், உயிரிழந்த பயணிகளின் உடல்களில் வெடி பொருட்களின் தடயங்கள் இருந்ததாக எகிப்து விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் அறிவித்து, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

* கொத்துக்கொத்தாக மத்திய தரைக்கடலில் மடிந்த குடியேறிகள்

இந்தாண்டு குடியேறிகளுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. உள்நாட்டுப் போர் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த நாடுகளிலிருந்து வெளியேறி தஞ்சம் பெறுவதற்காக ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு மே 23 லிருந்து 29 ஆம் திகதி வரை ஒரு வாரத்தில் மட்டும் குடியேறிகளை சுமந்து சென்ற மூன்று கப்பல்கள் மத்திய தரைக்கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகின. இதில் சுமார் 700 பேர் மூழ்கி உயிரிழந்ததாக மீட்புதவிப் பணியாளர்கள் குறிப்பிட்டனர். குடியேறிகளின் இந்த ஆபத்தான கடல் பயணம் தொடர்கிறது.

* குத்துச்சண்டை உலகின் ஜாம்பவான் முகமது அலி மறைவு

சர்வதேச அளவில் குத்துச்சண்டையில் தனி முத்திரை பதித்து, ஜாம்பவானாக விளங்கியவர் முகமது அலி. அவர் தன்னுடைய 74 ஆவது வயதில் காலமானார். அதிக எடைப்பிரிவில் மூன்று முறை உலகப்பட்டங்களை வென்றுள்ள முகமது அலி, சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். 1964 ஆம் ஆண்டில் தன்னுடைய முதல் உலக பட்டத்தை வென்றவுடன் இஸ்லாத்திற்கு மதம் மாறினார். அவருடைய இயற்பெயர் காசியஸ் க்ளே. முகமது அலியின் மறைவிற்கு உலகத்தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினார்கள். முகமது அலி பிறந்த ஊரான லூயிஸ்வில்லில் அவருக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டன.

* அமெரிக்காவில் ஒருபாலுறவுக்காரர்கள் விடுதியில் 49 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பல்ஸ் என்ற ஒருபாலுறவுக்காரர்கள் இரவு கேளிக்கையகத்தில் ஒமர் மடீன் என்ற 29 வயது இளைஞர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 53 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டையும் நடத்திவிட்டு அது குறித்த தகவல்களையும் பதற்றமின்றி தொலைபேசி மூலம் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியிருந்தார் ஒமர் மடீன். நவீன அமெரிக்க வரலாற்றில் ஓர்லாண்டோ துப்பாக்கிச்சூடு ஒரு மோசமான படுகொலை சம்பவமாகும். ஐ.எஸ் அமைப்பினரின் விசுவாசியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் ஒமர் மடீன்.

* கொலம்பியாவில் 50 ஆண்டுகால மோதலை முடிவுக்குக் கொண்டு வந்த ஒப்பந்தம்

கொலம்பியாவில் கடந்த 52 ஆண்டுகளாக ஃபார்க் போராளிகள் மற்றும் அரசாங்கம் இடையே நடைபெற்று வந்த உள்நாட்டு மோதல், சமாதான அமைதி ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தில், ஃபார்க் போராளி குழுவின் தலைவர் டிமோலியோன் ஜிம்மேனேஸ் மற்றும் கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் ஆகியோர் கூட்டாக கையெழுத்திட்டிருந்தனர். ஆனால், இந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்த ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் கொலம்பிய மக்கள் நிராகரித்தனர். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தம் ஒன்றில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர்.

* ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய ஐக்கிய இராஜ்ஜியம்

28 நாடுகள் உறுப்பினராக உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டுமா அல்லது தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பதை முடிவு செய்ய ஐக்கிய இராஜ்ஜியத்தில் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரிட்டன் வெளியேறக் கூடாது என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். வாக்கெடுப்பின் இறுதியில் ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்பதற்கு ஆதரவாக மக்கள் அதிகளவில் வாக்களித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் பதவியை இராஜினாமா செய்தார். தற்போது ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெறியேறுவதற்கான நடவடிக்கைகள், பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக