புதன், 8 நவம்பர், 2017

மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் நவம்பர் 8.




மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள் நவம்பர் 8.

இன்று நவம்பர் 8 மகத்தான தமிழ் அறிஞர் வீரமாமுனிவரின் பிறந்த நாள்....

*இத்தாலியில் பிறந்தவர். கிறிஸ்தவ குருவான இவர் மதப் பிரச்சாரத்துக்காக 1710-ம் ஆண்டு கோவாவுக்கு வந்தார். அங்கிருந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

*மதத்தைப் பரப்ப உள்ளூர் மொழியைத் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை உணர்ந்தார். அதற்காகத் தமிழ் கற்றார். தமிழ் அவரைத் தன்னுள் இழுத்துக்கொண்டது.

*சுப்ரதீபக் கவிராயரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே இலக்கியப் பேருரை கள் நடத்தும் அளவுக்குப் புலமை பெற்றார்.

*கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது இயற்பெயரை முதலில் தைரியநாதன் என்றுதான் மாற்றிக் கொண்டார்.

*பிறகு அதுவும் சமஸ்கிருதம் என்று அறிந்து வீரமாமுனிவர் என்று வைத்துக்கொண்டார் இந்த முன்னுதாரணப் புலவர்.

*இலக்கணம், இலக்கியம், அகராதி ஆகியவற்றைப் படைத்தார். திருக்குறளை லத்தீன் மொழியிலும் தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திச்சூடி ஆகிய வற்றை பல்வேறு ஐரோப்பிய மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிட்டார்.

*வெளிநாட்டினர் தமிழ் கற்கவும், தமிழர்கள் பிறமொழி களைக் கற்கவும் உதவியாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். ஆயிரம் தமிழ்ச் சொற்களுக்கு லத்தீனில் விளக்கம் கொடுத்தார்.

*தொடர்ந்து 4400 சொற்களைக் கொண்ட தமிழ் -போர்ச்சுகீசிய அகராதியைப் படைத்தார். நிகண்டுக்கு மாற்றாக பெயர் அகராதி, பொருள் அகராதி, தொகை அகராதி, தொடை அகராதி ஆகிய பகுப்புகளைக் கொண்ட சதுரகராதியைத் தொகுத்தார்.

*அந்த காலத்தில் சுவடிகளில் மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்காமல் கோடு போடுவது வழக்கம். நெடில் எழுத்துகளைக் குறிக்க, ‘ர’ சேர்த்தனர். இதை மாற்றி ‘ஆ’, ‘ஏ’, ‘ஓ’ ஆகிய நெடில் எழுத்துகளைக் கொண்டுவந்தார்.

*பல்வேறு தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கவிதை வடிவில் இருந்தன. மக்கள் சிரமமின்றிப் படிக்கவேண்டும் என்ற நோக்கில் அவற்றை உரைநடையாக்கினார்.

*தொன்னூல் விளக்கம் என்ற நூலில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களைத் தொகுத்தார். கொடுந்தமிழ் இலக்கணம் என்ற நூலில் தமிழில் முதன்முதலாகப் பேச்சுத் தமிழை விவரித்தார்.

*உரைநடையில் வேத விளக்கம், வேதியர் ஒழுக்கம், ஞானக் கண்ணாடி, செந்தமிழ் இலக்கணம், வாமன் கதை ஆகியவற்றைப் படைத்தார்.

*தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் என்று போற்றப்படும் ‘பரமார்த்த குருவின் கதை’ நூலைப் படைத்ததும் இவரே.

*இயேசு காவியமான தேம்பாவணியை இயற்றினார். இவரைப்போல வேறு எந்தக் காப்பியப் புலவரும் சிற்றிலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என பல இலக்கிய வகைகளிலும் நூல்கள் படைத்ததில்லை.

*தமிழில் 23 நூல்களை எழுதியுள்ளார். ஒன்பது மொழிகளில் புலமை பெற்றவர். பெயராலும், பண்பாட்டாலும் தமிழராகவே வாழ்ந்தவர், தனது 67-வது வயதில் மறைந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக