வெள்ளி, 6 ஜூலை, 2018

TNPSC குரூப்-2 எனும் குறுக்கு வழி:


TNPSC  குரூப்-2 எனும் குறுக்கு வழி:
-----------------------------------------------------

TNPSC நடத்தும் தேர்வுகளில் இரு பதவிகளை மிகவும் எளிதாக குறுக்கு வழியில் பெறலாம். அதில் ஒன்று குரூப்-4 நிலையில் வரும் தட்டச்சர் பதவி. மற்றொன்று தற்போது வரவிருக்கும் குரூப்-2 தேர்வு.

 என்னடா, குறுக்கு வழி என்றால் பணம் கொடுத்து செல்வது பற்றியா?  என்று உடனே நினைக்க வேண்டாம்.. இது ஒரு நேர்மையான குறுக்கு வழி.

அதாவது தட்டச்சர் பதவிக்காக நடத்தப்படும் அதே குரூப்-4 தேர்வின் மூலம் இளநிலை உதவியாளருக்கும் சேர்த்து தேர்வு நடத்துவார்கள். இந்தத் தேர்வில் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்களை விட ஒரு மதிப்பெண் குறைவாக பெற்ற ஒரு  போட்டியாளர் இளநிலை உதவியாளர் வேலை கிடைக்க தகுதி இல்லை என்று வெளியேற்றப்படுவார்.

ஆனால் அதே தேர்வில் இளநிலை உதவியாளர் பதவிக்கு தேவையான கட் ஆஃப் க்கு வெகு அருகில் எடுத்தும், தகுதி இல்லை என்று வெளியேற்றப்பட்டவரை விட  தமிழ்-ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை தட்டச்சு  தேர்ச்சி அடைந்த ஒரு தட்டச்சர் அதிக பட்சம் 22 மதிப்பெண்கள் வரை குறைவாக பெற்று இருந்தாலும் தட்டச்சர் பிரிவில் வேலை வாங்கி விடுவார். இது முதல் குறுக்கு வழி.

இதே போல்,

** பல வருடங்களாக ஆசை, இன்பம், பொழுது போக்கு, குடும்பம், உடல்நலம் போன்றவற்றைத் துறந்து,

** மிக மிக கடினமாகப் படித்தும், உழைத்தும் இன்னும் ஒரு வெற்றியினைக் கூட பெற முடியமால்,

** பெரும்பாலான தேர்வுகளில் தேவையான கட் ஆஃப் மதிப்பெண்ணிற்கு மிக மிக அருகில் வந்து,

** குடும்ப உறுப்பினர்களால், நண்பர்களால், சொந்தங்களால் அவமானத்திற்கு உள்ளாக்கப்பட்டு,

**மன  வேதனையில் படித்து வரும் அந்த  நண்பர்களுக்கான குறுக்கு வழி தான் இந்த குரூப்-2 தேர்வு.

கடந்த குரூப்-4 தேர்வில், இளநிலை உதவியாளர் பதவிக்கு 182 கேள்விகளை சரியாகச்  செய்தவர்களுக்குத்தான் வேலை கிடைத்தது.  வெற்றியாளர் என்ற பெயரும் கிடைத்தது. சிறந்த உழைப்பாளி என்றும் வர்ணிக்கப்பட்டார்.

ஆனால் 180 சரியான கேள்விகள் அளித்து வெறும்  இரண்டு விடைகளில் வெற்றி வாய்ப்பினைத் தவற விட்டவருக்கு அத்தைகய பெருமை கிடைக்க வில்லை.

** அவரும் உழைத்து தான் இருக்கிறார்,

** அவரது முயற்சியும் அலாதியானது,

** அவரது போராட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்று அல்ல.

** அவரது அர்ப்பணிப்பும் மிக உயர்வானது.

ஆனால், எப்பொழுதும் வெற்றி பெறுபவர்களை கொண்டாடும் இந்த சமூகம், அதற்க்காக கடுமையாக உழைத்தும், போராடியும் தோற்றவர்களைக் கொண்டாட விரும்புவது இல்லை.

இவ்வாறாக, தொடர்ச்சியான முயற்சியும், உழைப்பும் இருந்தும், அதிர்ஷ்டம் இல்லாமல், தொடர்ந்து வெற்றி வாய்ப்பினைத் தொடர்ந்து தவற விட்டுக் கொண்டிருக்கும் போட்டியாளர்களுக்கு கிடைத்த சிறந்த குறுக்கு வழிதான் இந்த குரூப்-2 தேர்வு.

எப்படி குறுக்கு வழி எனில், இதில் முதல்நிலைத் தேர்வு (Prelim), முக்கியத் தேர்வு (Main), நேர்முகத் தேர்வு (Interview) என்று மூன்று வழிகள் உண்டு.

இந்த படிநிலைகளில், முதல்நிலைத் தேர்வில் இருந்து இரண்டாவது நிலையான முக்கியத் தேர்விற்கு 1:10 என்ற விகிதத்தில் போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள். உதாரணமாக, BC பிரிவில் 300 காலியிடங்கள் எனில், முக்கியத் தேர்விற்க்கு 3000 போட்டியாளர்கள் அழைக்கப்படுவார்கள்.

இந்த 3000 நபர்களில், 170 கேள்விகள் சரியாக  போட்டு முதலிடத்தில் உள்ள போட்டியாளரும் அழைக்கப்படுவார், 155 கேள்விகள் சரியாக போட்டு இறுதியாக உள்ள போட்டியாளரும் அழைக்கப்படுவார்.

அடுத்த கட்டமான முக்கிய தேர்வு என்பது அதாவது, விரிவான விடை (Descriptive method) எழுதும் முறையைக் கொண்டது. இந்த தேர்வில், முதல்நிலைத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்பட மாட்டாது. 170 எடுத்து முதலாவதாக போட்டியாளராக இரண்டாவது நிலைக்கு தேர்வானவராக இருந்தாலும், முக்கிய தேர்வில் விரிவாக எழுத தெரியாவிட்டால், அதற்க்கு உண்டான வழி முறைகளை அறிந்து இருக்க விட்டால், போட்டியிலுருந்து வெளியேற நேரிடும்.

இதே, தேர்வில் 145 எடுத்து இறுதியாக தேர்வானவர் விரிவான விடை அளிப்பில் சிறப்பாக செயல் படும் தகுதி இருந்தால் எளிதாக நேர்முகத் தேர்விற்கு செல்வார்.

தொடர்ந்து விளிம்பு நிலையில் வெற்றி வாய்ப்பினை இழந்து தவிக்கும் ஒரு போட்டியாளர்,விரிவான விடை அளிக்க இயல்பிலேயே சிறப்பான திறமை கொண்டவராக இருந்தால் அவருக்கு கிடைத்த வரப்பிரசாதம் தான் இந்த குரூப்-2 தேர்வு. இது தான் நான் சொன்ன நேர்மையான குறுக்கு வழி.

எனக்கு தெரிந்த ஒரு தகவலைச் சொல்கிறேன். கடந்த குரூப்-2 நேர்முகத் தேர்வில் எனக்கு தெரிந்து 13 சகோதர சகோதரிகள் தேர்ச்சி அடைந்து பணி சேர் ஆணை பெற்று உள்ளார்கள். அவர்களில், இரு தங்கைகள்  மட்டுமே முந்தைய குரூப்-4 (Lathu Latha) மற்றும் குரூப்-2A (கௌதமி சக்திவேல்) தேர்வுகளில் தேர்ச்சி பெற்று தற்போது அரசு ஊழியர்களாக உள்ளனர். 

மற்ற 11 பேரில் ஒருவர் கூட இதற்க்கு முன்னர் ஒரு தேர்வில் கூட தேர்ச்சி பெற வில்லை. ஆனால் பல வருடங்களாக  தொடர்ந்து மயிரிழையில்  வெற்றியைத் தவற விடுபவர்கள்.

இவர்கள் கடந்த 2016-ல் நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற வில்லை, தற்போது தேர்வு முடிவு வந்து இருக்கும் குரூப்-2A தேர்விலும் பெரும்பாலானோர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு கூட அழைக்கப்பட வில்லை. அதே சமயம் 2018-ல் நடந்த குரூப்-4 தேர்விலும் சொல்லிக் கொள்ளும்படியான மதிப் பெண்கள் இல்லை. ஆனால், இவர்கள் புத்திசாலித்தனமாக தங்களுக்கு கைவந்த குரூப்-2 தேர்வில் சிறப்பாக செயல்பட்டு பணியினை வாங்கி அரசு ஊழியர்களாக ஆக உள்ளனர்.

இது போல் எதிர் வரும் குரூப்-2 தேர்வினை தொடர்ந்து உழைத்தும், வெற்றி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருப்பவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த தேர்வு பழைய முறையிலேயே நடை பெறுகிறது என்பது ஆறுதல் செய்தி. உங்களுக்கான, கடைசி வாய்ப்பாகக் கூட இது இருக்கலாம். ஏனெனில் அடுத்த தேர்வு, இந்த முறையிலிருந்து மாற்றப்பட்டு இருக்கலாம்.

பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக