புதன், 8 ஏப்ரல், 2020

நாம் தினசரி பயன்படுத்தும் காசு எப்படி உருவானது என்று தெரியுமா?

நாம் தினசரி பயன்படுத்தும் காசு எப்படி உருவானது என்று தெரியுமா?


மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்தில் உலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஒரு பொருளை வாங்குவதற்கும், விற்பதற்கும் பண்டமாற்று முறைதான் இருந்து வந்தது. இம்முறையில் ஒருவர் தம்மிடமிருந்த நெல்லைக் கொடுத்து மற்றொருவரிடமிருந்த பருப்பை வாங்கினார். பிறிதொருவர் தம்மிடமிருந்த மீனைக் கொடுத்துப் பால், தயிர் போன்றவற்றைப் பிறாடமிருந்து வாங்கினார். இம்முறையில் மிகுதியான பொருட்களைப் பண்டமாற்றம் செய்கையில் அவர்களுக்கு இடர்ப்பாடு ஏற்பட்டது.ஆதலால் ஒரு பொருளை மையப் பொருளாகக் கொள்ளத் திட்டமிட்டனர். தொடக்கத்தில் மாடு அம்மையப் பொருளாக இருந்தது. இந்தக் காலக்கட்டம் அரப்பன்நாகரிக காலமாக இருக்கலாம். அரப்பன் களிமண் முத்திரைத் தகடுகள் கூட அக்காலக் காசுகளாக இருக்கலாம். ஏனெனில் அரப்பன் களிமண் தகடுகளில் காளை உருவம்தான் மிகப் பெரியதாக காணப்படுகிறது.
உலோகத் தகட்டை மையப்பொருளாகக் கொள்ள முடிவெடுத்தனர். அவ்வுலோகத்திலும் செம்பு மற்றும் தங்கத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். இரண்டுமே கடினமான பொருள்கள். ஆகையால் இவை அவர்களுக்கு நன்கு பயன்பட்டன. செப்புத் தகட்டைச் சாதாரண பொருள்கள் வாங்குவதற்கும், தங்க உருண்டைகளை மதிப்பு மிகுந்த அறிய பொருள்கள் வாங்குவதற்கும் பயன்படுத்தினர். தங்க உருண்டைகள் வேப்பம்பழம் வடிவிலும், நெல்லிக்கனி வடிவிலும் நிறத்திலும் இருந்தன என்பதைச் சங்க இலக்கியங்கள் புலப்படுத்துகின்றன. இக்காசுகள் மக்கள் கூட்டு வாழ்க்கை நடத்தியபோது பயன் படுத்தப்பட்டவை.சதுரச் செப்புக் காசுகளின் காலம் இற்றைக்குச் சற்றேற குறைய 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும்.
காசு வெளியிடுவதில் இதற்கு அடுத்ததாக மன்னன் தலை உருவத்தோடு, மன்னரது பெயர் பொறிக்கப்பட்டு வெளியிடப் பெற்றிருப்பவை காணப்படுகிறது.முதல் வகைக் காசில் ஒரு பக்கம் வாயிலில் நிற்கும் மன்னன் உருவமும், அவனைச் சுற்றிப் பண்டைத் தமிழ் எழுத்தில் கொல்லிப்புறை என்ற மன்னன் பெயரும் காணப்படுகின்றன. மறுபக்கம் வில் அம்பு உருவம்.இரண்டாம் வகைக் காசில் மாக்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.மூன்றாம் வகையில் குட்டுவன்கோதை என்று மன்னன் பெயர் பண்டைத் தமிழ் எழுத்தில் தலைப்பிலும், அதற்குக் கீழே மன்னனது தலை உருவமும் காணப்படுகிறது.
மூன்றுவகைக் காசுகளிலும் கோதை, பொறை, என்ற சேர அரசர்களின் பெயரொட்டுக்கள் காணப்பெறுவதால் இவை சேரர் காசுகள் என்பது தெளிவாகிறது. இக்காசுகளின் காலம் இற்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக