வெள்ளி, 24 ஏப்ரல், 2020

லைரிட்ஸ் விண்கல் பொழிவு Lyrid Meteor Shower


லைரிட்ஸ் விண்கல் பொழிவு 
Lyrid Meteor Shower

இன்று (22-04-2020) பின்னிரவில் வானில் ஒரு அற்புத நிகழ்வை உங்களுக்கு வாய்பிருந்தால் காணலாம். சந்திரன் இல்லா இருண்ட, தெளிவான வானம் தற்போது. நீங்கள் நீண்ட நேரம் விழித்திருப்பவர்களானால்  இரவு பன்னிரண்டு மணிக்குப்பிறகு வானில் லைரிட் விண்கற்கள் பொழிவைக் காணலாம். 
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மூன்றாவது வாரம் நிகழும் லைரிட் விண்கல் பொழிவு நிகழ்கிறது. பத்து நாட்கள் நடக்கும் இந்நிகழ்வு இவ்வாண்டு ஏப்ரல் 21 முதல்ஏப்ரல் 23 அதிகாலை வரை உச்சத்தில் ஒரு மணி நேரத்திற்கு 10 என்ற எண்ணிக்கையில் இருக்கும். இது 2,700 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இதுவே பதிவு செய்யப்பட்ட மிகப் பழமையான விண்கல் பொழிவு ஆகும்.

லைரிட் விண்கல் பொழிவு என்றால் என்ன?

விண்கற்கள் வானிலிருந்து வளிமண்டலத்திற்குள் நுழையும்போது உராய்வினால் எரிந்து விழும் என நமக்குத் தெரியும். வழக்கமாக ஒன்றோ இரண்டோ எப்போதாவது விழுவதைப் பார்த்திருப்போம். குறைந்த காலஅளவில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகமான எண்ணிக்கையில் கற்கள் விழுவதை பொழிவு என்கிறோம். தற்போது இப்பொழிவு "லைரா" விண்மீன் தொகுதியிலிருந்து விழுவதால் லைரிட் பொழிவு எனப்படுகிறது. இதுபோல ஓரையானில் நிகழும் பொழிவு ஓரைனைட், பெர்சியஸில் நிகழும் பொழிவு பெர்சியட் எனப்படுகின்றன. 

லைராவை எங்கே பார்ப்பது?

ஒளிமிகுந்த விண்மீனான சுவாதியை (Arcturus) மாலை கிழக்குவானில் அடையாளம் காண்பதில் உங்களுக்கு இடர்பாடு இருக்காது. நேரம் செல்லச் செல்ல இம்மீன் மேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதையும் பார்ப்பீர்கள். நடு இரவில் இம்மீன் நம் தலைக்கு மேலே வரும்போது கிழக்கு வானில் 'வேகா' என்ற மிகவும் பொழிவுமிக்க விண்மீன் கிழக்கே உயர்ந்திருக்கும். இந்த வேகா இடம்பெற்றுள்ள சிறிய விண்மீன் தொகுதியே லைரா என்கிற "யாழ்" தொகுதி.  நாற்கரமும் முக்கோணமும் சேர்ந்த வடிவிலுள்ளது இந்த யாாழ். வேகா இந்திய மரபில் "அபிஜித்" எனப்படுகிறது. வேகாவுக்கு சற்று மேலாகப் பார்க்கவேண்டும்.

C/1861 1G (Thatcher) என்னும் வால்மீன் பூமிக்கருகே சென்றபோது விட்டுச்சென்ற தூசி, கற்கள் போன்றவை உள்ள பகுதியின் வழியே பூமி செல்லும்போது இவை நமது வளிமண்டலத்தினுள் நுழைகின்றன. இதுவே விண்கற்கள் பொழிவாகத் தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக