வியாழன், 16 ஏப்ரல், 2020

ஹெலிகாப்டர் மணி #Helicopter_Money


ஹெலிகாப்டர் மணி #Helicopter_Money

 'ஹெலிகாப்டர் மணி' உத்தி என்பது நெருக்கடியில் இருக்கும் பொருளாதாரத்தை மீட்பதற்கான வழியாகும். இதை மக்களுக்கு வழங்கப்படும் இலவசப் பணம் என்றும் சொல்லலாம். இந்த உத்தியை 1969 ஆம் ஆண்டு ப்ரைட்மான் என்ற பொருளாதார அறிஞர் ஹெலிகாப்டரிலிருந்து பணத்தைக் கீழே நிற்கும் மக்களுக்கு இறைப்பதாக உருவகப்படுத்தி  விளக்கியதால் இந்த உத்திக்கு ’ஹெலிகாப்டர் மணி’ என்று பெயர் வந்தது. ஆனால் உண்மையில் ஹெலிகாப்டர் மூலமாகவெல்லாம் பணம் வீசப்படாது. வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அனைவருக்கும் ரிசர்வ் வங்கி குறிப்பிட்ட பணத்தைச் செலுத்திவிடும். சுருக்கமாகச் சொன்னால், ஹெலிகாப்டரிலிருந்து பணத்தை வாரி இறைப்பது போல.

ஒரு நாட்டின் மத்திய வங்கி பணத்தை அச்சிட அதற்கு ஈடான பத்திரங்களையும், தங்கம் மற்றும் அந்நிய நாட்டுப் பணத்தையும் இருப்பாகப் பயன்படுத்தும். இந்த ஹெலிகாப்டர் மணி உத்தியைப் பயன்படுத்தும் போது பணத்தை அச்சடிக்க எந்த விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை. இது திரும்பச் செலுத்த தேவையில்லாத பணமாகும். இப்படிச் செய்யும்போது நெருக்கடியான காலகட்டத்தில் மக்களிடம் பணப்புழக்கம் ஏற்படும். இதைக்கொண்டு பொருளாதாரத்தைப் பற்றிய நம்பிக்கையை மக்களிடம் உருவாக்க முடியும்.

ஹெலிகாப்டர் மணி உத்தியைப் பயன்படுத்தும் போது பணத்தை அச்சடிக்க வழக்கமான விதிமுறைகளையும் பின்பற்றத் தேவையில்லை.

சில பொருளாதார அறிஞர்கள் ஹெலிகாப்டர் மணி உத்தி மூலம் மக்களிடம் பணப் புழக்கம் ஏற்படும் என்கின்றனர். இதனால் மக்கள் பொருள்களை கடைகளில் வாங்கத் தொடங்குவார்கள். இதனால் தேவை அதிகரிக்கும். உற்பத்தி பெருகும். வேலை வாய்ப்புகள் உருவாகும்

இலவசமாகக் கிடைக்கும் பணத்தை மக்கள் செலவு செய்ய விரும்ப மாட்டார்கள் என்றும், இந்த உத்தியானது பண வீக்கத்திற்கு வழி வகுக்கும் என்கிற கருத்தையும் சிலர் முன்வைக்கிறார்கள். ஆனால் தற்போதுள்ள இந்தியச் சூழலில் மக்களிடமும் பணம் இல்லை, கடைகளிலும் போதுமான அளவு இருப்பில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக