ஞாயிறு, 29 டிசம்பர், 2019

கடந்து வந்த பாதை.. 2019 சினிமா.. இவர்கள் மறையலாம்.. நினைவுகள் மறையுமா?


கடந்து வந்த பாதை.. 2019 சினிமா.. இவர்கள் மறையலாம்.. நினைவுகள் மறையுமா?

2019 சினிமா.. இவர்கள் மறையலாம்... நினைவுகள் மறையுமா?...
2019ஆம் ஆண்டு தமிழ் திரையுலகம் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்து உலகளவில் பிரபலமானாலும் சில இழப்புகளையும் சந்தித்திருக்கிறது.

2019ஆம் ஆண்டில் நம் மனதை விட்டு நீங்காமல் நினைவில் இருக்கும் முக்கிய சினிமா பிரபலங்களை பற்றி பார்க்கலாம்.
கிரேஸி மோகன்
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் மாரடைப்பு காரணமாக கடந்த ஜூன் மாதம் காலமானார். கிரேஸி மோகன், பொய்க்கால் குதிரை படத்தின் மூலம் திரையுலகிற்குள் நுழைந்தார். அபூர்வ சகோதரர்கள் படம் மூலமாக கமல்-கிரேஸி இணைந்த கூட்டணி மகளிர் மட்டும், சதிலீலாவதி, அவ்வை சண்முகி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் எனப் பல படங்களில் இணைந்து ரசிகர்களை மகிழ்வித்தது.
ஜே.கே.ரித்தீஷ்
நடிகரும், ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ், கடந்த ஏப்ரல் மாதம் ராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். பொறியியல் பட்டதாரியான இவர் கானல் நீர், பெண் சிங்கம், நாயகன், சின்னபுள்ள மற்றும் எல்.கே.ஜி. உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் மகேந்திரன்
பிரபல இயக்குநர் மகேந்திரன் உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் காலமானார். இவர் முள்ளும் மலரும் படத்தினை இயக்கி தமிழில் அறிமுகமானவர். மேலும் உதிரிப் பூக்கள், ஜானி, நெஞ்சத்தை கிள்ளாதே, கை கொடுக்கும் கை போன்ற முக்கியமான தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் தெறி, சீதக்காதி, நிமிர், பேட்ட போன்ற படங்களில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நடிகை கீதாஞ்சலி
தெலுங்கு திரைப்படத்துறையின் முன்னணி நடிகையாக இருந்த கீதாஞ்சலி நவம்பர் மாதம் காலமானார். தெலுங்கில் வெளியான சீதாராம கல்யாணம் திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நடிகர் கிரீஷ் கார்னாட்
பன்முகக்கலைஞர் கிரீஷ் கார்னாட் உடல்நலக்குறைவால் கடந்த ஜுன் மாதம் காலமானார். அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், 3 நாள்களுக்கு துக்கம் அனுசரிப்பதாக கர்நாடக அரசு அறிவித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர், நாடகக் கலைஞர், நடிகர், திரைப்பட இயக்குநர், முற்போக்கு சிந்தனையாளர் என்று பன்முகம் கொண்டவர் கிரீஷ் கார்னாட்.
நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி
நான் கடவுள், தவசி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தவர் கிருஷ்ணமூர்த்தி. படப்பிடிப்பில் இருந்தபோது கிருஷ்ணமூர்த்திக்கு மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
இயக்குநரும், நடிகருமான ராஜசேகர்
திரைப்பட இயக்குநரும், நடிகருமான ராஜசேகர் உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் மாதம் காலமானார். பாரதிராஜாவின் நிழல்கள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கவிஞர் வைரமுத்து எழுதிய முதல் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது" பாடலில் நடித்தவர். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் நடித்துள்ளார்.
நடிகர் பாலாசிங்
நடிகர் பாலாசிங் மாரடைப்பு காரணமாக நவம்பர் மாதம் சென்னையில் காலமானார். 1995ஆம் ஆண்டு வெளிவந்த அவதாரம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு வந்தார். இந்தியன், ராசி, புதுப்பேட்டை, என்.ஜி.கே உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக