திங்கள், 30 டிசம்பர், 2019

டிசம்பர் 31... வரலாற்றில் என்ன நடந்தது?...



டிசம்பர் 31... வரலாற்றில் என்ன நடந்தது?...

வரலாற்றில் இன்று !!
ச.வே.சுப்பிரமணியன்



செந்தமிழ் மொழிக்கு சிறப்பாக தொண்டாற்றிய தமிழறிஞர் ச.வே.சுப்பிரமணியன் 1929ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நெல்லை மாவட்டம் வீரகேரளம்புதூரில் பிறந்தார்.

மூன்றாண்டுகள் தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்பு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும், திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறை தலைவராக வழிநடத்தினார்.

இவர் இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கை கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

1969ஆம் ஆண்டு; நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். 1985ஆம் ஆண்டு; நெல்லை மாவட்டத்தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் 'தமிழூர்" என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்தார். இவரது வீட்டின் பெயரே 'தமிழகம்".

இவர் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு, ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, அவ்வை தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். இந்திய சாகித்ய அகாடமியின் 'பாஷா சம்மான்" விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர்.


வாழ்நாள் முழுவதும் தமிழுக்காகவே வாழ்ந்த ச.வே.சுப்பிரமணியம், 2017ஆம் ஆண்டு மறைந்தார்.தியாகி விஸ்வநாத தாஸ்



இன்று இவரின் நினைவு தினம்..!!
சுதந்திரப் போராட்ட தியாகியும், மேடை நாடகக் கலைஞருமான எஸ்.எஸ்.விஸ்வநாத தாஸ் 1886ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி சிவகாசியில் பிறந்தார்.

தேசிய உணர்வால் உந்தப்பட்ட இவர், மகாத்மா காந்தியின் அகிம்சை கொள்கையில் ஈடுபாடு கொண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். மேடை நாடகங்கள் வாயிலாக, மக்களிடையே சுதந்திர உணர்வை தீவிரமாக வளர்த்ததால், வீரத் தியாகி என்றும் அழைக்கப்பட்டார்.

ஜாலியன் வாலாபாக் சம்பவத்தையடுத்து இவர் எழுதிய, பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது என்ற பாடல் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய இடம் பிடித்தது. புராண நாடகங்களின் வாயிலாக விடுதலை அரசியலை புகுத்தினார்.

விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றதால் பலமுறை ஆங்கிலேய அரசால் சிறையில் அடைக்கப்பட்டார். முருகன் வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது மேடையிலேயே விஸ்வநாத தாஸ் 1940ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மறைந்தார்.முக்கிய நிகழ்வுகள்
1879ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெள்ளொளிர்வு விளக்கு முதல்முறையாக தாமஸ் ஆல்வா எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1909ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி மான்ஹட்டன் பாலம் திறக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக