உலக தபால் தினம் அக்டோபர் 09.
அறிவியலின் வளர்ச்சியால் உலகில் நாள்தோறும் எண்ணற்ற மாற்றங்கள். இன்டர்நெட், இமெயில், ஃபேக்ஸ், ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் என்று பலவகையான நவீன தொழில்நுட்பங்கள் மூலம் இன்றைய அறிவியல் உலகம் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக உலகம் முழுவதும் நேரடியாகவே அனைத்துச் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும், ஆடியோக்களும் பரிமாறப்படுகின்றன. ஆனால், பழங்காலத்தில் இத்தகைய வசதி எதுவும் இல்லை. முதலில் செய்திகளைப் பரிமாறிக்கொள்ள ஓலை பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, காகிதத்தின் வரவால் தபால் உபயோகப்படுத்தப்பட்டது. அத்தகைய தபால் தினம் இன்று.
அறிவியல் தொழில்நுட்பத்தால் இன்றைய தலைமுறையினர் தபால் எழுதுவதையே முற்றிலும் குறைத்துவிட்டனர். இதனால் அவர்களிடம் சுயமாகக் கடிதம் எழுதும் பழக்கம் குறைந்து வருகிறது. இருப்பினும், அவர்களுடைய தினசரி வாழ்க்கையில் தபால் துறை ஏதாவது ஒரு வழியில் முக்கியப் பங்காற்றுகிறது. தற்போது அலுவலக தொடர்பான கடிதங்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பணியைத் தபால் துறையே செய்துவருகிறது.
உலக தபால் அமைப்பானது, 1874-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பில் இந்தியாவும் அங்கத்தினராக உள்ளது. உலக தபால் அமைப்பை நினைவுபடுத்தும் விதமாக 1969 அக்டோபர் 9-ம் தேதி உலக தபால் தினம் அறிவிக்கப்பட்டது. இந்தத் துறையின் சேவைகளைப் பாராட்டும் விதமாகவும், இதன் திட்டங்கள் பற்றியும் மக்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தவும் இந்தத் தினம் கொண்டாடப்படுகிறது. நம் நாட்டில் 1764-ம் ஆண்டு தபால் துறை தொடங்கப்பட்டது. சுதந்திரம் பெற்ற காலத்தில் 23 ஆயிரம் தபால் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது இந்தியாவில், ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் உள்ளன. இதில், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தபால் நிலையங்கள் கணினி மையமாக்கப்பட்டு உள்ளன. உலகிலேயே அதிக தபால் நிலையங்கள் கொண்டதாக இந்திய தபால் துறை விளங்கிவருகிறது. இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவில், அக்டோபர் 9-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தபால் வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆறு இலக்க அஞ்சல் குறியீட்டு எண்களைக்கொண்டு ஒவ்வோர் ஊர்களுக்கும் தபால்கள் அனுப்பப்பட்டு உரியோரிடம் சேர்க்கப்படுகிறது. பதிவுத் தபால், விரைவுத் தபால், இ-போஸ்ட், மணி ஆர்டர், பார்சல் சர்வீஸ் தவிர, ஸ்டாம்ப் விற்பனை, சேமிப்புக் கணக்குகள் போன்றவற்றையும் தபால் துறை செய்துவருகிறது. தற்போது 24 மணி நேரமும் செயல்படும் தபால் நிலைய ஏ.டி.எம் மிஷின்களும் உள்ளன. தந்திப் பிரிவு செயல்பாட்டில் இருந்தபோது அது, தபால் துறையிடம் மட்டுமே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக