வியாழன், 6 அக்டோபர், 2016

சிந்து சமவெளி நாகரிகம்


சிந்து சமவெளி நாகரிகம்

பண்டைய நாகரிகங்கள்

வெளிச்சத்துக்கு வந்த புதையல்!
சுமேரியன், சீனா, எகிப்து நாகரிகங்களைப் பார்த்துப் பிரமித்துவிட்டோம். ஆனால், சொர்க்கமே என்றாலும், நம்ம ஊரைப் போல் ஆகுமா? இப்போது வருவது சிந்து சமவெளி நாகரிகம்.
ஆரம்பம்
1856. ஜான் பிரன்ட்டன் (John Brunton) , வில்லியம் பிரன்ட்டன் (William Brunton) ஆகிய இருவரும் சகோதரர்கள். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள். பொறியியல் வல்லுநர்கள். கிழக்கு இந்தியக் கம்பெனி (இப்போது பாகிஸ்தானில் இருக்கும்) கராச்சிக்கும், முல்த்தான் என்னும் நகரத்துக்குமிடையே ரயில் பாதை போடும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதை மேற்பார்வை செய்வதற்காகச் சகோதரர்களை இந்தியாவுக்கு அழைத்திருந்தது.
கட்டுமான வேலைக்குச் செங்கற்கள் தேவைப்பட்டன. அந்தச் செலவைக் கட்டுப்படுத்த விரும்பிய சகோதரர்கள், அருகில் இருந்த பிரமனாபாத் என்னும் ஊரில் பழைய காலச் செங்கற்கள் இருப்பதை அறிந்தார்கள். அவற்றைக் கொண்டுவந்தார்கள், பயன்படுத்தினார்கள். அடுத்து, ஹரப்பா* என்ற ஊரிலும் பழங்காலச் செங்கற்கள் கிடைத்தன. அவையும் ரயில் பாதை அமைக்கப் பயன்பட்டன. பிரன்ட்டன் சகோதரர்களுக்குத் தெரியாது – அவர்கள் பயன்படுத்தியவை வெறும் செங்கற்கள் அல்ல, மறைந்துவிட்ட ஒரு மாபெரும் நாகரிகத்தின் நினைவுச் சின்னங்கள் என்று. தாங்கள் அறியாமலே, சில புராதனப் பெருமைகளை அவர்கள் அழித்துவிட்டார்கள்.
1921. ராக்கல் தாஸ் பானர்ஜி (Rakhal Das Banerjee) என்னும் ஆராய்ச்சியாளர் இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருந்தார். சிந்து நதிக்கரையில் இருந்த மொஹஞ்சதாரோ * நகரத்தில், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பௌத்த மத ஸ்தூபி பற்றி அகழ்வாராய்ச்சி செய்துகொண்டிருந்தார். ஸ்தூபியைச் சுற்றியிருந்த இடங்களில் தொழிலாளிகள் நிலத்தைத் தோண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது மண்ணுக்குள் புதைந்துகிடந்த படிக்கட்டுகளைப் பார்த்துத் திகைத்தார்கள். பானர்ஜியை அழைத்தார்கள். அவர் இன்னும் தோண்டச் சொன்னார். தோண்டத் தோண்ட, படிக்கட்டுகள் நீண்டுகொண்டே போயின.
(* பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப் மாநிலத்தில் சாஹிவால் மாவட்டத்தில் ஹரப்பா இருக்கிறது. இங்கிருந்து 640 கிலோமீட்டர் -தூரத்தில் சிந்து மாநிலத்தின் லர்க்கானா மாவட்டத்தில் மொஹஞ்சதாரோ உள்ளது.)
படிக்கட்டுகளுக்கு அப்பால், சுவர்கள் – அத்தனையும் சுட்ட செங்கற்களால் கட்டப்பட்டவை; பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியவை; ஒரு மாபெரும் நாகரிகம் அங்கே நிலவியிருக்கிறது என்பதை நிரூபிப்பவை. மொஹஞ்சதாரோ என்றால், சிந்தி மொழியில் “இறந்தவர்கள் மேடு’ என்று அர்த்தம். காரணமாகத்தான் இந்தப் பெயர் வந்தது என்பது பானர்ஜிக்குத் தெரிந்தது.
மொஹஞ்சதாரோ ஆதாரங்கள்
அகழ்வாராய்ச்சியைப் புதிய உத்வேகத்தோடு தொடர்ந்தார் பானர்ஜி. தோண்டத் தோண்ட, சரித்திரச் சுவடுகள் குவிந்தன. தன் மேலதிகாரி சர் ஜான் மார்ஷலிடம் பானர்ஜி விவரங்களைத் தெரிவித்தார். இதே நேரத்தில் சிந்து நதிக்கரையில் இருந்த ஹரப்பாவிலும் இதேபோன்ற இடிபாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டு இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட மண் சாமான்கள், கட்டடங்களின் சிதிலங்கள் ஆகியவற்றில் ஒற்றுமை இருப்பதை மார்ஷல் உணர்ந்தார்.
மொஹஞ்சதாரோவுக்கும் ஹரப்பாவுக்கும் தொடர்பு இருக்கிறது என்பது அவருக்குப் புரிந்தது. தொடர்ந்துவந்த நாள்கள் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் எத்தனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நிரூபித்தன.
பானர்ஜிக்கும், மார்ஷலுக்கும் முன்னதாகவே, பல ஆராய்ச்சியாளர்கள் மொஹஞ்சதாரோ, ஹரப்பா பகுதிகளில் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். 1826 ல் சார்ல்ஸ் மேஸன் என்னும் பிரிட்டீஷ் ராணுவ அதிகாரி, “மொஹஞ்சதாரோ பகுதியில், பூமிக்கடியில் செங்கற்களால் கட்டப்பட்ட கோட்டைகள் இருப்பதாகத் தெரிகிறது “ என்று குறிப்பு எழுதினார். அவர் அகழ்வியல் ஆராய்ச்சியாளரல்ல. எனவே, அவர் கருத்து அதிகக் கவனத்தை ஈர்க்கவில்லை.
அதுவரை, கங்கை சமவெளியில்தான் நாகரிகம் உருவாகி வளர்ந்ததாக நம்பப்பட்டு வந்தது. பானர்ஜியின் அறிக்கைகளின் அடிப்படையில், இந்த நம்பிக்கை தவறு, இந்திய நாகரிகத் தொட்டில் சிந்து சமவெளிதான் என்று நிரூபிக்கும் மாபெரும் வாய்ப்புக் கதவுகளைப் பானர்ஜியின் கண்டுபிடிப்புகள் திறப்பதை மார்ஷல் உணர்ந்தார். இரண்டு பகுதிகளிலும், விரிவான அகழ்வாராய்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்தார்.
தொடங்கின முயற்சிகள். உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் வடமேற்குப் பகுதிக்கு வந்து குவிந்தனர். அவர்களது ஆராய்ச்சியில் இன்னும் பல ஊர்கள் தோண்டியெடுக்கப்பட்டன. ஏறக்குறைய ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி கி.மு. 2500- 1700-ல் செழிப்பின் உச்சத்தில் இருந்த சிந்து சமவெளி நாகரிகம் வெளிச்சத்துக்கு வந்தது.
நிலப்பரப்பு
சிந்து சமவெளி நாகரிகம் பிரம்மாண்டமான பதின்மூன்று லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது. இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் பஞ்சாப் மாநிலங்கள், இந்தியாவின் குஜராத், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், காஷ்மீர் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளைத் தன்னுள் அடக்கி, பாகிஸ்தான் தாண்டி பலூச்சிஸ்தான், ஆப்கானிஸ்தான் வரையும் வியாபித்திருந்தது. சுமார் இரண்டரை லட்சம் மக்கள் வாழ்ந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகிறார்கள்.
கிடைத்த ஆதாரங்கள்
மொஹஞ்சதாரோ, ஹரப்பா ஆகிய இடங்களில் கிடைத்த பல்வேறு அகழ்வாராய்ச்சி ஆதாரங்கள் அனைத்துக்கும் ஒரு பொதுத்தன்மை இருக்கிறது. இவை அத்தனையும் ஒரே நாகரிகத்தின் சின்னங்கள்தாம் என்பதை இந்தப் பொதுத்தன்மை நிரூபிக்கிறது. களிமண் சாமான்களை உருவாக்குதல், செங்கல் தயாரித்துக் கட்டடங்கள் கட்டுதல், நகர நிர்வாகம், குடியிருப்பு அமைப்புகள் போன்ற துறைகளில் அன்றைய சிந்து சமவெளியினர் தேர்ச்சி பெற்றிருந்தார்கள் என்பதை இந்த ஆதாரங்கள் சந்தேகமே இல்லாமல் நிரூபிக்கின்றன.
விவசாயம்
சிந்து சமவெளிப் பகுதி பல நகரங்களும், ஏராளமான கிராமங்களும் கொண்டது. மொத்த உணவுப் பொருட்களும் கிராம விவசாயிகள் தயாரித்தார்கள். விரிந்து பரந்த நிலங்களில் விவசாயம் செய்தார்கள். மாடுகளால் இழுக்கப்பட்ட ஏர்களை நிலம் உழுவதற்குப் பயன்படுத்தினார்கள். பல கலப்பை பொம்மைகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன. தங்கள் வாழ்வின் ஆதார சுருதியாக, அவர்கள் கலப்பைகளை மதித்ததால், இதன் அடையாளமாகத் தங்கள் குழந்தைகளுக்கு அவற்றை பொம்மைகளாகக் கொடுத்திருக்கலாம்.
மழை காலங்களில் சிந்து நதியில் வெள்ளம் பெருகி ஓடும். வெள்ளம் வடியும்போது, நிலங்களைச் செழுமையாக்கும். அப்போது சிந்து சமவெளிச் சகோதரர்கள் விதை விதைப்பார்கள், விவசாயம் தொடங்குவார்கள். நதியிலிருந்து கால்வாய்கள் வெட்டி, விவசாயத்துக்குப் பயன்படுத்தினார்கள். கிணற்று நீரும் பயன்படுத்தப்பட்டது. கோடை காலங்கள், குளிர் காலங்கள் என்னும் இரு பருவ விவசாயம் நடத்தினார்கள். கோடை காலங்களில் திணை, எள், பருத்தி ஆகியவை பயிரிட்டார்கள். கோதுமை, பார்லி, ஆளி விதை, கடுகு, பட்டாணி ஆகியவை குளிர்காலப் பயிர்கள். சணல் இரண்டு பருவங்களிலும் வளர்க்கப்பட்டது. நெல் விவசாயம் நடந்ததா என்று தெரியவில்லை.
உலகத்திலேயே, சிந்து சமவெளியில்தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது. பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர். சிந்து சமவெளியிலிருந்து, கிரேக்கத்துக்குப் பருத்தி ஏற்றுமதி ஆகியிருக்கவேண்டும் என்பதற்கு இது சான்று என்பது வரலாற்றாளர்களின் யூகம்.
அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன. உபரி தானியங்களைப் பாதுகாத்துவைக்கும் களஞ்சியங்களும் இருந்தன.
வீட்டு மிருகங்கள்
அகழ்வாராய்ச்சிகளில், ஏராளமான காளை மாடுகளின் எலும்புகள் கிடைத்துள்ளன. அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது. ஏர் பூட்டி உழுவதற்கும், தானியப் போக்குவரத்துக்கும் பயன்பட்டு, அவர்கள் வாழ்வில் காளை மாடுகள் முக்கிய இடம் வகித்ததற்கு இவை முக்கிய அடையாளங்கள்.
பிற்காலத்தில் பசு வளர்ப்பு தொடங்கியது: பால் அன்றாட வாழ்க்கை உணவானது. ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன. ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது. வீட்டுக் காவலுக்கு நாய்கள். தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள். யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள் போன்றவற்றை எப்படிப் பயன்படுத்தினார்கள் என்று தெரியவில்லை.
உணவு
கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன் ஆகியவை முக்கிய உணவுகள். விவசாயத்தோடு, வேட்டையாடுதல், மீன் பிடித்தல் ஆகியவையும் முக்கியத் தொழில்களாக இருந்தன. எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன. இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
உடைகள்
பருத்தி உற்பத்தியில் சிந்து சமவெளி முன்னோடியாக இருந்தபோதும், உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக