ஞாயிறு, 2 அக்டோபர், 2016

அக்டோபர் 2:பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வ

அக்டோபர் 2:பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள் இன்று..: சிறப்பு பகிர்வு

* இனம் காட்டும் நிறம். குணம் சொல்லும் உடை. தைரியம் அறிவிக்கும் உடல். வணங்கத் தோன்றும் முகம்... என நாலும் இணைந்த நல்லவர் காமராஜர்!

* 'இதெல்லாம் என்ன பேச்சுன்னேன்', 'அப்படி ஏன் சொல்றேன்னேன்', 'ரொம்ப தப்புன்னேன்', 'அப்பிடித்தானேங்கிறேன்', 'அப்ப பாப்போம்', 'ஆகட்டும் பார்க்கலாம்' போன்றவை அவர் அடிக்கடி பயன்படுத்தும் வாசகங்கள்!

* நிறையப் பேரிடம் வரிசையாக ஆலோசனை கேட்கும் பிரதமர் நேரு, கடைசியில் காமராஜர் சொன்னதை அறிவித்து முடிப்பார். உயிரோடு இருப்பவர்களுக்கு சிலை வைக்கக் கூடாது என்ற கொள்கை கொண்ட நேரு, அதை மீறித் திறந்த சிலை இவருடையதுதான்!

* தன்னைப் பாராட்டி யாராவது அதிகம் பேசினால், 'கொஞ்சம் நிறுத்துன்னேன்' என்று சட்டையைப் பிடித்து இழுப்பார். அடுத்த கட்சியை மோசமாகப் பேசினால், 'அதுக்கா இந்தக் கூட்டம்னேன்' என்றும் தடுப்பார்!

* மகன் முதலமைச்சரானதும் அம்மா சிவகாமிக்கு அவருடன் தங்க ஆசை. 'நீ இங்க வந்துட்டாஉன்னைப் பார்க்கச் சொந்தக்காரங்க வருவாங்க. அவங்களோட கெட்ட பேரும் சேர்ந்து வந்துடும். அதுனால விருது நகர்லயே இரு' என்று சொல்லிவிட்டார். அந்த வீட்டையாவது பெரிதாக்கி கட்டித் தரக் கேட்டபோதும் மறுத்துவிட்டார்!

* இரண்டு முறை பிரதமர் ஆக வாய்ப்பு வந்தபோதும் அதை நிராகரித்து லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி ஆகியோரை பிரதமர் ஆக்கினார். 'கிங் மேக்கர்' என்ற பட்டத்தை மட்டும் தக்க வைத்துக்கொண்டார்!

* மூத்தவர்கள் அரசாங்கப் பதவிகளில் இருந்து விலகி, கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற 'கே.பிளான்' போட்டுக் கொடுத்த இவரே முதல் ஆளாகப் பதவி விலகினார். 'எனக்கு எந்தப் பற்றும் இல்லைன்னு காட்டினாதான் மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண முடியும்' என்றார்!

* தான் முதலமைச்சரானபோது தன்னை எதிர்த்து முதல்வர் வேட்பாளராக நின்ற சி.சுப்பிரமணியத்தையும் அவரது பெயரை முன் மொழிந்த பக்தவத்சலத்தையும் அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார்!

* தனது வலதுகரமாக இருந்த ஜி.ராஜகோபாலன் இறந்தபோது மட்டும்தான் காமராஜரின் கண்கள் லேசாகக் கலங்கினவாம். தாய் சிவகாமி இறந்தபோதுகூட அழவில்லை அவர்!

* 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளோடுஒட்டோ, உறவோ இல்லை. இந்தக் கட்சிகளோடு உறவு வைத் துள்ள கட்சிகளோடும் உறவு இல்லை' - காமராஜர் கூட்டிய கடைசி நிர்வாகக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் இது. இதை அவரது மரண சாசனம் என்பார்கள்!

* விருதுநகர் தொகுதியில் அவர் தோற்றபோது கட்சிக்காரர்கள் அழுதார்கள். 'இதுதான்யா ஜனநாயகம். ஜெயிச்சவனைக் குறை சொல்லாமல் தோத்துப் போனதைப் புரிஞ்சுக்கிட்டாதான் அடுத்த முறை ஜெயிக்க முடியும்!' என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னவர்.

* கோடை காலத்தில் இரண்டே இரண்டு நாட்கள் குற்றாலத்தில் போய் தங்கிவிட்டு வருவார். அவரது அதிகபட்ச சந்தோஷமாக அதுதான் இருந்திருக்கிறது!

* ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

* இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி அதிகமாக வியர்த்தது. டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, 'டாக்டர் வந்தா எழுப்பு... விளக்கை அணைச்சிட்டுப் போ' என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை. டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக