வியாழன், 6 ஜூன், 2019

ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019 சூழ்நிலையியல் - ஆற்றல்


ஆசிரியர் தகுதித் தேர்வு - 2019
சூழ்நிலையியல் - ஆற்றல்

🍀 வேலை செய்யத் தேவையான திறனே ஆற்றல் ஆகும். ஆற்றலை ஜூல் (Joule) எனும் அலகால் குறிப்பிடுகிறோம்.

🍀 பேருந்து, படகிற்குத் தேவையான ஆற்றல் அதன் எரிபொருளிலிருந்து கிடைக்கிறது. அதேபோல் பாராசு%2Bட்டில் காற்று ஆற்றலும், புவியிர்ப்பு விசையும் பயன்படுகிறது.

🍀 வெப்பம் ஒரு வகை ஆற்றல் என்பதைக் கண்டுபிடித்தவர் ஜேம்ஸ் ஜூல். இதனால் தான் ஆற்றலின் அலகை ஜூல் (Joule) என்கிறோம்.

🍀 மேட்டூர், பவானி சாகர் முதலிய இடங்களில் நீர் ஆற்றல் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆற்றலின் வகைகள் :

🍀 இயந்திர ஆற்றல், வேதியாற்றல், ஒளியாற்றல், ஒலி ஆற்றல், மின்னாற்றல், வெப்ப ஆற்றல், காற்றாற்றல் முதலியவை ஆற்றலின் பல்வேறு வகைகள்.

இயந்திர ஆற்றல்

🍀 ஒரு பொருள் நிலையாக இருக்கும் பொழுதோ அல்லது இயக்கத்தில் இருக்கும் பொழுதோ பெற்றிருக்கும் ஆற்றல் இயந்திர ஆற்றல் எனப்படும். இயந்திர ஆற்றல் இருவகைப்படும்.

1. நிலை ஆற்றல்

2. இயக்க ஆற்றல்.

1. நிலை ஆற்றல் :

🍀 ஒரு பொருள் அதன் நிலையைப் பொருத்தோ (Position) அல்லது வடிவத்தைப் பொருத்தோ (Configuration) பெற்றுள்ள ஆற்றல் நிலை ஆற்றல் எனப்படும்.

🍀 அணைக்கட்டில் உள்ள நீர், மேல்நிலைத்தொட்டியில் உள்ள நீர், மலை உச்சியில் உள்ள கல் போன்றவை சற்று உயரத்தில் நிலையாக இருப்பதனால், அவை நிலை ஆற்றலைப் பெற்றுள்ளன.

🍀 அதேபோல் அமுக்கப்பட்ட சுருள்வில், இழுக்கப்பட்ட இரப்பர் வளையம் போன்றவை கூட நிலைஆற்றலைப் பெற்றுள்ளன.

2. இயக்க ஆற்றல் :

🍀 இயக்கத்தில் உள்ள பொருள் பெற்றுள்ள ஆற்றல் இயக்க ஆற்றல். நகரும் பேருந்து, ஓடும் குதிரை, பாயும் நீர், கீழே விழும் கல் போன்றவை இயக்கத்தில் உள்ளதனால், அவை இயக்க ஆற்றலைப் பெற்றுள்ளன.

🍀 நிலையாற்றலும் இயக்க ஆற்றலும் ஒன்றிலிருந்து மற்றொன்று மாற்றத்தக்கவை. இதன் அடிப்படையில் தான் நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

🍀 அணைக்கட்டில் தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர் அதிக நிலை ஆற்றலைப் பெற்றிருக்கும். அணையிலிருந்து கீழேவிழும் நீரின் இயக்க ஆற்றலைக்கொண்டு மின்னாக்கியின் (generator) கம்பிச் சுருளைச் (Turbine) சுழற்றுவதன் மூலம் மின்னாற்றல் உற்பத்தி செய்யப்படுகிறது.

🍀 மேலும் மின்னாக்கியில் கம்பிச்சுருள் சுழலும் போது ஏற்படும் இயந்திர ஆற்றல் மின்னாற்றலாக மாற்றப்படுகிறது.

பயன்கள் :

1. இயந்திர ஆற்றல் மூலம் நிலையாக உள்ள பொருளை இயங்கச் செய்யவும், இயங்கும் பொருளை ஓய்வுநிலைக்குக் கொண்டுவரவும் முடியும்.

2. காற்றின் இயக்க ஆற்றலைக் கொண்டு, காற்றாலைகள் மூலம் மின்னாற்றலைத் உற்பத்தி செய்யலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக