ஆசிரியர் தகுதித் தேர்வு-2019(Paper-1)
குழந்தை மேம்பாடும், கற்பித்தல் முறைகளும்
010.
உடல் மற்றும் அறிவு வளர்ச்சி - தொடக்கப்பள்ளி ஆண்டுகள் (6 முதல் 10 வயது வரை)
சிந்தனை:-
🌟 சிந்தித்தல் என்பது ஒரு அறிவார்ந்த செயலாகும். உளவியல் நோக்கில் சிந்தனை என்பது புறத் தூண்டல்களால் நம் உள்ளத்தில் ஏற்படும் தொடர்ந்து நிகழ்கின்ற ஒரு மனச்செயலாகும்.
🌟 ஒரு குறிக்கோளை அல்லது நோக்கத்தை அல்லது முடிவை அடைவதற்கான வழிதேடும் மனத்தளவிலான முயற்சியே சிந்தனை என்றும் கூறலாம்.
கற்றலில் சிந்தனையின் பங்கு
🌟 படித்தவற்றை அப்படியே திருப்பி ஒப்புவித்தல் அல்லது எழுதுதல் என்பதுதான் கற்றல் என்ற கருத்து நிலவி வருகிறது. இது ஒரு குருட்டு மனப்பாடச் செயலாகும்.
🌟 சில மாணவர்கள் இதற்கு மனதைப் பழக்கி வைத்துக் கொள்வார்கள். இவர்களால் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைப் பெறமட்டும் தான் முடியும். ஆனால் அவர்கள் மனப்பாடம் செய்து கற்றது வாழ்க்கையில் ஒருபோதும் பயன்படாது.
குவி சிந்தனை விரிசிந்தனை
🌟 பழைய அனுபவங்களைச் சிந்தித்து அவற்றுடன் புதிய அனுபவத்தைப் பொருத்திப் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது குவிசிந்தனை என்று கூறுகின்றோம். பழைய அனுபவத்துடன் புதிய அனுபவத்தை பொருத்திப் பார்த்து மேலும் ஒரு புதிய அனுபவத்தை பெற முயற்சிப்பதை விரி சிந்தனை என்று கூறுகின்றோம்.
🌟 புலன்காட்சி நினைவு போன்ற பலவும் ஆய்ந்தறிதலில் பயன்படுத்தப்படுவதால் ஆய்ந்தறிதலை சிந்தனையின் முழுச்செயல் எனலாம்.
🌟 ஒருவனது ஆய்வுத்திறன் அவன் பெற்றுள்ள அனுபவத்தையும் சிந்திக்கும் திறனையும் பொறுத்தே அமைகிறது. குழந்தைகளுக்கு இளமையிலே சிந்திக்கும் திறனைப் பெற வாய்ப்புக்கள் அளித்தும், பயிற்சியளித்தும் ஊக்குவிக்க வேண்டும்.
🌟 ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய முயலும் ஒருவனுக்குத் தடைகள் ஏற்படும் போது அவனுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது. பிரச்சனைகள் இல்லையெனில் ஆய்தல் தேவைப்படாது.
🌟 ஆய்வில் காணப்படும் பல்வேறு படிகளைப் பற்றி ஜான்டூயி கூறுவன.
1. பிரச்சனையை உணர்தல்
2. பிரச்சனைத் தீர்க்கவல்ல விவரங்களைத் திரட்டுதல்
3. கருதுகோள்கள் அமைத்தல்
4. கருதுகோளைச் செயல்படுத்தித் தீர்வுகாண முயலுதல்
5. முடிவினை எட்டுதல்
6. முடிவினைச் சோதித்து அறிதல்
தொகுத்தறி - பகுத்தறி முறை
🌟 பல செய்திகளை ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்து அவற்றினின்றும் சில பொது விதிகளை வருவித்தல் தொகுத்தறி அனுமானமாகும்.
🌟 எடுத்துக்காட்டாக திடப்பொருள் வெப்பத்தால் விரிவடைகிறது. நீர் வெப்பத்தால் விரிவடைகிறது. வாயு வெப்பத்தால் விரிவடைகிறது. எனவே, பொருள் வெப்பத்தால் விரிவடைகின்றன எனற ஒரு முடிவுக்கு வருகிறோம். இதனைத் தொகுத்தறி முறை எனலாம்.
🌟 ஒரு பொது விதியை பல தனிப்பட்ட நிகழ்ச்சிகளுக்கும், நிலைமைகளுக்கும் பயன்படுத்திப் பார்த்தால் பகுத்தறி அனுமானமாகும்.
🌟 எடுத்துக்காட்டாக பொருள்கள் வெப்பத்தால் விரிவடைகின்றன என்ற பொது விதியிலிருந்து இரும்பு, தங்கம், வெள்ளி, பாதரசம் போன்றவை வெப்பத்தால் விரிவடைகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். இதனைப் பகுத்தறி முறை எனலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக