TET தேர்வு - 2019 உளவியல் பற்றி முக்கிய குறிப்புகள் 004
கவனித்தலைத் தீர்மானிக்கும் காரணிகள்
🌀 நாம் கவனித்தல் செயலில் ஈடுபடும்போது சில தூண்டல்களை மட்டும் தேர்ந்தெடுத்து கவனிக்கின்றோம்.
🌀 இச்செயல் எவ்வாறு ஏற்படுகின்றது? நமக்குள்ளேயே இருக்கும் ஆர்வம், தேவை, மனநிலை, உடல்நிலை போன்ற சிலவற்றால் இச்செயல் நிர்ணயிக்கப்படுகிறது.
🌀 நமக்குள் இருந்து கவனத்தினை நிர்ணயிக்கும் காரணியை அகக்காரணி எனலாம். சில சமயங்களில் கவனித்தலைப் புறத்தேயிருந்து கட்டுப்படுத்தும் காரணிகளும் உண்டு.
🌀 நம் கவனத்திற்கு காரணமாகும் தூண்டல் அல்லது பொருளில் அவை இருப்பதால் அவற்றைப் புறக்காரணிகள் எனலாம். இவை கவனிப்பவனுக்கு வெளியே இருந்து செயல்படுகின்றன.
புறக்காரணிகள்
🌀 மாணவர்கள் சில நேரங்களில் வகுப்பறையில் கற்றல்-கற்பித்தல் செயலில் ஈடுபாடு, நாட்டம் இல்லாமல் இருப்பார்கள்.
🌀 இச்சமயங்களில் கற்றல்-கற்பித்தல் பொருள்களில் தன்மை அல்லது புறநிகழ்வு மூலமாக அவர்களை பாடத்தில் கவனம் செலுத்தச் செய்யலாம்.
🌀 கவனத்தை ஈர்க்கும் பொருள் சார்ந்த புறக் காரணிகள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.
புதுமை
🌀 ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை புதுமையாக தோன்றச் செய்தால் அது மாணவரது கவனத்தை ஈர்க்கும்.
🌀 உதாரணமாக வகுப்பறையில் மாணவர்களைக் கற்றலுக்கு ஆயத்தப்படுத்தும் பொழுது ஒவ்வொரு நாளும் பாடல், கதை, தனி நடிப்பு ஒலிப்பதிவுநாடா போன்றவற்றைப் பயன்படுத்தி ஆயத்தச் செயலைப் புதுமையாக செய்யலாமல்லவா?
🌀 முன் கண்டறியாதனவற்றைக் காணும்போது அவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் மிகும். இவ்வார்வம் கவனத்தைத் தூண்டும்.
உருவ அளவு
🌀 உருவத்தில் பெரிய அளவுள்ள பொருள்கள் மற்ற பொருள்களைவிட நம் கவனத்தை உடனே கவர்கின்றன.
🌀 நகர்ப்புறங்களில் விளம்பர பேனர்கள், உருவத்தட்டிகள் முதலியவை காண்போர் கவனத்தை உடனடியாக ஈர்க்கின்றவை.
🌀 எனவே, நாமும் வகுப்பறைக் கற்றல்-கற்பித்தல் மாணவர்கள் கவனத்தை எளிதில் கவரும் வண்ணம் பெரிய அளவிலான படங்களை உபயோகித்தல் கரும்பலகையில் பெரிய எழுத்துக்களில் எழுதுதல் பெரிய அளவிலான மாதிரிகள் செய்து காட்டுதல் போன்ற நிகழ்வுகள் மூலமாக மாணாக்கரது கவனத்தை ஈர்க்க இயலும்.
மாற்றம்
🌀 புறத்தூண்டல்களில் திடீரென எழும் மாற்றம் நம் கவனத்தை கவர்கிறது. நாம் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது கண் துயில்கிறோம்.
🌀 திடீரென்று பேருந்து நின்றால் உடனே கண் விழித்துக்கொள்கிறோம்.
🌀 தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களில் எத்தனை வகைவகையாக மாற்றங்கள் செய்கின்றனர் என்று கவனித்தீர்களா? ஏன் இந்த மாற்றம்? வழக்கமான இருக்கைகள் இடம் மாறியிருந்தால் அது மாணாக்கர் கவனத்தைக் கவரும்.
🌀 பல குரலில் பேசும் மாணவன் பாராட்டுப் பெறுகின்றான். ஆசிரியர் தன் குரலில் தகுந்த ஏற்றத்தாழ்வுகள் கொண்டு பேசினால் மாணவர்களின் கவனத்தைத் தன்பால் ஈர்க்கமுடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக