(உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தேர்தலை எதிர்கொள்கிறது. இந்நிலையில், இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகம் உருப்பெற்று, நிலைபெற்றது எப்படி என்பது பற்றிய வரலாற்று குறிப்பையும், இந்த ஜனநாயகத்தை வலுப்படுத்திய, அலைகழிக்கும் காரணிகளையும் மூன்று பாகங்களை உடைய தொடராக நேயர்களுக்கு அளிக்கிறது பிபிசி தமிழ். இதன் முதல் பாகம் இதோ...)
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில் காலனி ஆட்சிகள் தகர்ந்து, அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகள் அரசியல் விடுதலை பெறத் தொடங்கின.
அப்படி விடுதலை பெற்ற ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல ஜனநாயக நாடுகளாக மலரத் தவறின.
அல்லது, அப்படி ஜனநாயக நாடுகளாக உருவானவற்றிலும் காலப்போக்கில் ஜனநாயகம் பலவீனமடைந்து, சர்வாதிகாரம், உள்நாட்டுப் போர் போன்றவை தலை தூக்கின. இவற்றுக்கு எடுத்துக்காட்டாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், இலங்கை ஆகியவற்றை கூற முடியும்.
ஜனநாயகத்தின் தன்மையிலும், தரத்திலும் பல ஏற்ற இறக்கங்கள், விமர்சனங்கள் தோன்றியபோதும், சுமார் 72 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஜனநாயக நாடாக நீடிக்கிறது இந்தியா.
16 முறை மக்களவைத் தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்து, 16 மக்களவையும் ஆயுட்காலம் முடிந்தோ, அல்லது ஆளும் கட்சி பெரும்பான்மை இழந்ததாலோ ஜனநாயக ரீதியிலேயே முடிவுக்கு வந்தன. புதிதாக அமைக்கப்பட்ட மக்களவை மூலம் புதிய அரசுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அவசரநிலை அறிவிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவின் 5-வது மக்களவையின் ஆயுள் காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது மட்டுமே விதிவிலக்கு.
ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தியாவின் 17-வது மக்களவைத் தேர்தலில் 90 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவ்வளவு மாபெரும் ஜனநாயகம் உறுதியான முறையில் கட்டியெழுப்பப்பட்டது எப்படி? பிரிட்டிஷ் இந்தியாவின் முடிவும், சுதந்திர இந்தியாவின் தொடக்கமும் எப்படி இருந்தது? இந்தியாவின் முதல் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது எப்படி? ராணுவ ஆட்சியாகவோ, வேறுவகை சர்வாதிகாரமாகவோ திரிந்துபோகாமல் இந்தியா குடியரசாக உருவெடுத்தது எப்படி?
இந்தியக் குடியரசின் தொடக்க ஆண்டுகளை கூர்ந்து பார்ப்பதன் மூலம்தான் அறிய முடியும்.
இந்திய நாடாளுமன்றம் இரு அவைகளை உடையது. ஒன்று அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் பெற்ற மக்களவை. இந்த அவைக்கு 543 உறுப்பினர்களை, தேர்தல் மூலம் மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
மற்றொன்று மாநிலங்களவை. இதன் உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த மாநிலங்களவையின் ஆயுள் காலம் எப்போதும் முடிவடைவதில்லை. சுழற்சி முறையில் குறிப்பிட்ட அளவு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. அப்போது மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்து புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள்.
இந்த இரு அவைகளை உடைய நாடாளுமன்றமே இந்திய ஜனநாயகத்தின் ஆணி வேராக இருக்கிறது. நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை என்ற மூன்று பிரிவுகளின் கீழ் பரந்து விரிந்திருக்கும் அரசினை தீர்மானிப்பதற்கான மக்களின் உரிமை, நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள ஒரே ஒரு உரிமையில்தான் நிலைகொண்டிருக்கிறது.
மத்திய சட்டமன்றம்
மக்களாட்சியின் அடிப்படையான இந்த நாடாளுமன்ற முறையின் விதை இந்தியாவில் ஊன்றப்பட்டது 1919ல்.
பிரிட்டன் காலனியாதிக்கத்தின் கீழ் இந்தியா தொடர்ந்து நீடித்தபோதும், ஆட்சியில் இந்தியர்களுக்கும் உரிமை வேண்டும் என்ற தொடர் கோரிக்கைகளின் பலனாக, மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மத்திய சட்டமன்றம் ஒன்று உருவாக்கப்பட்டது.
இது முழுமையான ஜனநாயக அமைப்பாக இல்லை. அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. வாக்குரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை இந்தியா முழுமைக்கும் சில லட்சம் பேர்தான்.
எனினும், இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விதை இதுவே.
இந்த அவையின் முதல் தலைவராக ஆங்கிலேயர் இருந்தபோதும், அதன் பிறகு இந்தியர்களே அவைத்தலைவர்களாக இருந்தனர்.
அரசமைப்புச் சட்ட அவையில் பேசும் நேரு.
இரண்டாவது அவைத்தலைவராக இருந்தவர் வித்தல்பாய் பட்டேல். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டி மார்ச் 1933 முதல் டிசம்பர் 1934 வரை இந்த அவையின் தலைவராக இருந்தார்.
ஆறாவது மத்திய சட்டமன்றம் நடப்பில் இருந்தபோது, 1947 ஆகஸ்டு 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது. அதன் பணிகளை இந்திய அரசமைப்பு மன்றமும் (Constituent Assembly), பாகிஸ்தானில் பாகிஸ்தான் அரசமைப்பு மன்றமும் மேற்கொண்டன.
முன்னதாக, இந்திய விடுதலை தொடர்பாக விவாதிப்பதற்காக 1946-ம் ஆண்டு பிரிட்டனில் இருந்து வந்த அமைச்சரவைத் தூதுக் குழு (கேபினட் மிஷன்) பரிந்துரையின்படி தேர்தல் நடத்தி இந்த அரசமைப்பு மன்றம் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த மன்றத்துக்கு இரண்டு பணிகள் இருந்தன.
ஒன்று சுதந்திர இந்தியாவுக்கான அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கி அதனை அங்கீகரிப்பது. இன்னொன்று, அப்படி அரசமைப்புச்சட்டம் உருவாகும் வரையில் நாட்டை ஆட்சி செய்வது.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையிலான குழு உருவாக்கிய அரசமைப்புச் சட்ட வரைவினை இந்த மன்றம் விரிவாக விவாதித்து, திருத்தங்கள் மாற்றங்கள் செய்து 1949 நவம்பர் 26-ம் தேதி ஏற்றுக்கொண்டது.
அன்று முதல், இந்தியக் குடியரசின் கீழ் பொதுத் தேர்தல் நடந்து முதலாவது மக்களவை அமைக்கப்படும் வரையில் இந்த அரசமைப்புச் சட்டமன்றம் தாற்காலிக நாடாளுமன்றமாக செயல்படத் தொடங்கியது.
தேர்தல் ஆணையம்
1950 ஜனவரி 26-ம் தேதி அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதற்கு முதல் நாள் ஜனவரி 25 அன்று அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் இந்தியத் தேர்தல் ஆணையம் ஒரே ஒரு ஆணையரைக் கொண்ட அமைப்பாக உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் 21-ம் தேதி முதல் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
முதல் முறையாக, சாதி, மத, பாலின, சமூக அந்தஸ்து உள்ளிட்ட எந்த பேதமும் இல்லாமல் 21 வயது நிரம்பிய அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அரசைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமை கிடைத்தது.
இதையடுத்து இந்திய நாடாளுமன்ற மக்களவைக்கான முதல் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவின் பெரும்பகுதி 1952 ஜனவரி 2 முதல் 25 வரை 17 நாள்கள் நடைபெற்றன. ஆனால் ஜனவரி மாதத்தில் இமாச்சலப்பிரதேசத்தில் கடும் பனிப் பொழிவும், பல இடங்களை அணுக முடியாத சூழ்நிலையும் ஏற்படும் என்பதால் அந்த மாகாணத்தின் வாக்குப்பதிவு 1951 அக்டோபர் 25 முதல் நவம்பர் 30 வரையில் பல கட்டங்களாக நடந்தது.
திருவிதாங்கூர்-கொச்சி மற்றும் ஹைதராபாத்தில் 1951 டிசம்பரில் நடந்தது. உத்தரப்பிரதேசத்தில் வாக்குப்பதிவு 1952 பிப்ரவரியிலும் நடந்தது.
ஒரு தொகுதி - இரண்டு எம்.பி.க்கள்
முதல் மக்களவைத் தேர்தலில் 401 தொகுதிகளில் இருந்து 489 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மொத்தமிருந்த 401 தொகுதிகளில் 314 தொகுதிகளில் இருந்து தலா ஒரு எம்.பி.யும், 86 தொகுதிகளில் இருந்து தலா இரண்டு எம்.பி.க்களும் மேற்கு வங்கத்தில் ஒரு தொகுதியில் இருந்து 3 எம்.பி.க்களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இரண்டு மற்றும் மூன்று எம்.பி.க்களை தேர்ந்தெடுத்த தொகுதிகளில் ஒரு எம்.பி. பொது உறுப்பினராகவும், மற்றொருவர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவராகவோ, பழங்குடியின வகுப்பை சேர்ந்தவராகவோ இருப்பர்.
முதல் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் நாடு முழுவதிலும் 17.32 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களில் 44.87 சதவீதம் பேர் வாக்களித்தனர்.
திருவிதாங்கூரில் அதிகபட்சமாக 71 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். இமாச்சலப்பிரதேசத்தில் மிகக் குறைந்தபட்சமாக 25.32 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். சென்னை மாகாணத்தில் 56.33 சதவீத வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தத்தில் 9874 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
கட்சிகளும், வெற்றியும்
முதல் மக்களவைத் தேர்தலில் 14 தேசியக் கட்சிகள் உட்பட 53 கட்சிகள் போட்டியிட்டன. இவற்றில் அதிகபட்சமாக 479 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 44.9 சதவீத வாக்குகளைப் பெற்று 364 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.
ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 49 இடங்களில் போட்டியிட்டு 16 இடங்களில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரிய எதிர்க்கட்சியாக இருந்தபோதும், அதிகாரபூர்வமாக எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெறும் அளவுக்கு அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.
விடுதலைக்கு முந்தைய அரசில் நேருவின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இருவர், பிரிந்து சென்று அரசியல் கட்சி தொடங்கி அந்தக் கட்சிகள் இந்தியக் குடியரசின் முதல் தேர்தலில் போட்டியிட்டன.
அவற்றில் முக்கியமானது ஷியாம பிரசாத் முகர்ஜியால் தோற்றுவிக்கப்பட்ட பாரதீய ஜன சங்கம். இது இன்றைய ஆளும்கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியாகும். இந்தக் கட்சி முதல் மக்களவைத் தேர்தலில் 3 இடங்களில் வெற்றி பெற்றது.
ம.பி. முதல்வரின் செயலர் வீட்டில் பணக்குவியல் இருப்பதாகக் காட்டும் விடியோ உண்மையா? போலியா?
கொல்கத்தா கனவை சிதைத்த சென்னையின் தீபக் சஹர்
விடுதலைக்கு முந்திய அரசில் சட்ட அமைச்சராக இருந்தவரும், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு தலைவருமான பி.ஆர். அம்பேத்கர் தொடங்கிய ஷெட்யூல்ட் கேஸ்ட் ஃபெடரேஷன் (பட்டியலினத்தவர் கூட்டமைப்பு) மற்றொன்று.
பிற்காலத்தில் குடியரசுக் கட்சியாக உருவெடுத்த இந்த கூட்டமைப்பு முதல் தேர்தலில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், பம்பாய் (வட மத்திய) தொகுதியில் போட்டியிட்ட அம்பேத்கர் காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.
அதைப்போல விடுதலை பெற்றபோது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரும், காந்தியவாதியுமான ஜே.பி.கிருபளானி தோற்றுவித்த கிஸான் மஸ்தூர் பிரஜா கட்சி 145 இடங்களில் போட்டியிட்டு 9 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால், கிருபளானி தோல்வியடைந்தார்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
அடுத்து முதல் மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற கட்சி ராம் மனோகர் லோஹியா மற்றும் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் சோஷியலிஸ்ட் கட்சியாகும். 254 இடங்களில் போட்டியிட்ட அந்தக் கட்சி 12 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த இரு தலைவர்களின் தாக்கம் இந்திய அரசியலில் மிகப்பெரியது. பின்னாளில் இந்திரா காந்திக்கு எதிராக இந்த இரு தலைவர்களும் முன்னெடுத்த போராட்டங்கள், இந்திரா காந்தி அவசர நிலையை அறிவிக்கும் அளவுக்கு செல்வதற்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது. லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் போன்ற பிற்காலத்தில் இந்திய அரசியலின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தலைவர்கள் பலர் லோஹியா மரபில் வந்தவர்களே.
வேட்பாளருக்கு ஒரு வாக்குப் பெட்டி
அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை தருவது குறித்து பல தலைவர்களுக்கு தடுமாற்றமும், ஐயமும் இருந்தது.
ஏனெனில் அப்போது இந்திய மக்களில் 12 சதவீதம் பேர் மட்டுமே எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்தனர். பெரும்பான்மை மக்கள் வறுமையில் உழன்றனர். இவர்களால் யோசனை செய்து பொறுப்புடன் வாக்களிக்க முடியுமா, இந்த முடிவு ஜனநாயக முயற்சிக்கு வெற்றி தேடித் தருமா என்பதே எல்லோருக்கும் இருந்த ஐயம்.
விளைவு என்னவாகும் என்று தெரியாத, உலகின் மிகப்பெரும் சூதாட்டம் என்று அந்த முடிவு வருணிக்கப்பட்டதாகக் கூறுகிறார் எழுத்தாளர் பூ.கொ.சரவணன்.
இந்தப் பின்னணியில்தான், எளிய மக்கள் வாக்களிப்பதில் இருந்து தடுக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாக உறுதியான, மையப்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையத்தை அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்பாக உருவாக்கும் திட்டத்தை அம்பேத்கர் முன்வைத்தார் என்கிறார் அவர்.
இந்த தொடரின் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகத்தைப் படிக்க...
மொரார்ஜி தேசாய்க்கு பதில் இந்திரா காந்தி பிரதமரானது எப்படி?
நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட நேரு: இந்தியாவில் ஜனநாயகம் உறுதிப்பட்ட கதை
எழுத்தறிவு குறைந்த, எளிய மக்கள் பங்கேற்ற தேர்தல் என்பதால் முதல் தேர்தலில் வாக்களிக்கும் முறை வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கட்சிக்கும்/ வேட்பாளர்களுக்கும் தனித்தனி சின்னம் பொறித்த வாக்குப் பெட்டிகள் வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்குச் சீட்டைப் பெறும் வாக்காளர்கள் அதனை மடித்து தாங்கள் விரும்பும் கட்சியின் பெட்டியில் போட்டுவிட்டு செல்லவேண்டும்.
எல்லாக்கட்சியின் சின்னங்களும் பொறித்த வாக்குச்சீட்டில் தேவையான சின்னத்தில் முத்திரையிட்டு ஒரே பெட்டியில் போடும் முறை பிறகுதான் வந்தது. அதன்பிறகு வந்ததே தற்போதைய மின்னணு வாக்கு இயந்திரங்கள்.
நன்றி பிபிசி.
அருமையான பதிவு... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு